நீங்கள் பிரபல பதிவராக வேண்டுமா?
(பாகம்-5)
பகுதி 2 ல் கூறிய விஷயங்களை நினைவில் வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதாவது உங்கள் பதிவு பிரபலமாக மூன்று விஷயங்கள் மிகமிக அவசியம். 1. பின்பற்றுவோர், 2. பின்னூட்டமிட்டவர்கள், 3. வருகை தந்தோர்.
இந்த மூன்று அளவுகோல்கள்தான் உங்கள் பதிவை பரபலப்படுத்தப் போகின்றன. இந்த அளவுகளை அதிகரிப்பது எப்படியென்று ஒவ்வொன்றாய் பார்ப்போம்.
1.பின்பற்றுவோர். நீங்கள் நல்ல சிஷ்யனாக இருந்தால் நான் முதல் பகுதியில் கூறியவற்றை ஞாபகம் வைத்திருப்பீர்கள். இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இன்னொரு முறை கூறுகிறேன். உங்களையும் உங்கள் நண்பர்கள் பத்து பேரையும் தலா பத்து பத்து தளங்கள் அதாவது பிளாக்குகள் ஆரம்பிக்கச் சொல்லியிருந்தேன். ஆக மொத்தம் 110 தளங்கள். அவைகளில் நீங்கள் பிரபலப்படுத்தபுபோகும் ஒரு தளம் (தளம் 1 என்று வைத்துக்கொள்வோம்) போக மீதி 109 தளங்கள். அவைகளில் ஒரு தளத்தை அழித்து விடுங்கள். மீதி 108 தள்ங்கள். நல்ல சாஸ்திரோக்தமான எண்ணிக்கை. நீங்கள் நினைத்த காரியம் வெற்றிகரமாக நடக்கும் என்பதற்கு இந்த நம்பர் அடையாளமாக அமைந்து விட்டது. சரி, அவைகளுக்கு இப்போது வேலை வந்து விட்டது.
இந்த 108 தளங்களில் இருந்து தனித்தனியாக தளம் 1 க்கு சென்று தளம் 1 ஐ பின்பற்றுவதாக குறியிடுங்கள். ஆச்சா! இப்போது தளம் 1 ஐ follow செய்பவர்கள் 108 பேர் ஆகிவிட்டது. ஆனால் ஒன்று. இந்த வேலையை ஒரு நாளில் செய்யவேண்டாம். ஒரு 15 நாளில் கொஞ்சம் கொஞ்சமாக செய்யவேண்டும். யாருக்கும் சந்தேகம் வந்து விடக்கூடாதல்லவா.
ஆகக்கூடி ஒரு 15 நாளில் 108 பின்பற்றுவோர் சேர்ந்து விட்டார்கள். இது போகவும் மேலும் பலர் சேர்வதற்கு வாய்ப்பு உண்டு. ஆஹா!!! உங்கள் பதிவு பிரபலம் ஆகிவிட்டது!!!
அடுத்ததாக ''பின்னூ'' எனப்படும் பின்னூட்டங்களை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.
அதற்குள் சில அருஞ்சொற்களின் பொருள் பற்றி தெரிந்து கொள்வோம்.
பின்னூ/பின்னு/ எனப்படும் பின்னூட்டங்கள். ஆங்கிலத்தில் comments
மொக்கை – சுவாரஸ்யமில்லாத வெட்டிப்பதிவு
சல்லியடித்தல் – கூட்டத்தில் கோவிந்தா போடுதல்
கும்மியடித்தல் – ஜால்ரா போடுதல்
வினை – நீங்கள் போடும் பின்னூட்டங்கள்
எதிர்வினை – உங்கள் பின்னூட்டங்களுக்கு மற்றவர்கள் போடும் கருத்துக்கள்.
இந்த இரண்டும் நியூட்டனின் 3ம் விதியிலிருந்து கடன் வாங்கப்பட்டவை.
பதிவர் சந்திப்பு : இவை மற்ற பதிவர்களை சந்தித்து கருத்துப்பரிமாற்றம் செய்வதற்கு என்று சொல்லப்படுபவை. ஏமாறாதீர்கள். கடற்கரையில் காந்தி சிலைக்குப்பின்னால் கூட்டப்படும் கூட்டங்கள் தவிர மற்றவை அனைத்தும் பதிவர்களின் பழங்கணக்குகளை நேர் செய்வதற்காகவே. இவை யாவும் ஒரு நல்ல ஓட்டலிலேயே (நல்ல = நாலு பதிவர்கள் உட்கார்ந்து சாவகாசமாக நல்ல தண்ணீரை பருகும் ஸ்தலம்) நடக்கும்.
கஸ்மாலம், சோமாரி, பன்னாடை, பன்னி – நண்பர்களை செல்லமாக கூப்பிடும் பெயர்கள்.
ஆப்பு வைத்தல் – இதன் சரியான பொருள் எனக்கு இன்னும் புலப்படவில்லை. மொத்தமாக ஒருவனுக்கு கெடுதல் செய்வது என்று நினைக்கிறேன்.
மீதியை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
தொடர்வது பாகம் 6...