என் நண்பன் ஒருவன் அடிக்கடி சொல்வான் ‘பணம் சம்பாதிப்பது சுலபம், அதை வைத்திருப்பதுதான் கஷ்டம்’ என்று. நான் சிரிப்பேன். பணத்தை வைத்திருப்பதில் என்ன கஷ்டம் வந்துவிடப்போகிறது என்று நினைத்துக்கொள்வேன். என்னிடமும் கொஞ்சம் பணம் சேர்ந்து அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஒரு பைனான்ஸ் கம்பெனியில் போட்டு, அந்த கம்பெனி திவாலானவுடன் அங்கே ஓடி இங்கே ஓடி, பல வருடங்கள் ஆனபின் ரூபாய்க்கு 50 பைசா வீதம் (5 வருட வட்டி ஹோகயா) செட்டில்மென்ட் முடித்து மீதிப்பணத்தை கையில் வாங்கும்போதுதான் நண்பன் சொன்னது எவ்வளவு சரி என்பதை உணர்ந்தேன்.
அதேபோல் பதிவுலகத்தில் அடியெடுத்து வைத்து சில மாதங்கள் ஆனபின்பு நாமும் பிரபல பதிவர் ஆகமாட்டோமா என்று ஏங்கிய நாட்கள் உண்டு. பதிவுலகில் ஏற்பட்ட சில பல சலசலப்புகள் வயிற்றில் புளியைக் கரைத்தாலும் பிரபல பதிவர் ஆகும் ஆசை விடவில்லை. பதிவுலக நடவடிக்கைகளை கவனித்து வந்ததில் சில நுணுக்கங்கள் புலப்பட்டன. அவைகளை ஒரு எட்டு பதிவுகளாகப் போட்டேன். ஆனால் அவைகளை நானே கடைப்பிடிக்கவில்லை. மற்றவர்கள் கடைப்பிடித்து பிரபலமானார்களா என்று தெரியவில்லை.
நமது நித்தியானந்தாவின் கடைக்கண் பார்வை என்மீது விழுந்தவுடன் அவர் அருளினால் அவரைப்பற்றி ஒரு நாலைந்து பதிவு போட்டேன். அவருடைய அருளாசியின் மகிமையினால் என்னுடைய வலைப்பதிவு கொஞ்சம் பிரபலமடைந்துள்ளது. ஹிட் லிஸ்ட்டில் நெம்பர் கூடியிருக்கிறது. பின்னூட்டங்கள் அதிகரித்துள்ளன. இப்போது எனக்கு முக்கியமான வேலைகள் என்னவென்றால் :-
1. ஒரு நாளைக்கு ஒரு பதிவாவது எழுதியாக வேண்டும்.
2. அதை பிளாக்கில் போட்டவுடன் ஒவ்வொரு திரட்டிக்கும் சென்று நம் பதிவைச்சேர்க்க வேண்டும்.
3. ஒரு மணிக்கொரு தடவை பிளாக்குக்குள் போய் எத்தனை ஹிட்ஸ்கள் வந்துள்ளன என்று பார்க்க வேண்டும்.
4. அதே சமயத்தில் எத்தனை பாலோயர்ஸ் புதிதாக சேர்ந்துள்ளார்கள் என்று செக் செய்யவேண்டும்.
5. நமது பிளாக்குக்கு ஒவ்வொரு திரட்டியிலும் எவ்வளவு ஓட்டு விழுந்திருக்கிறது என்று பார்க்கவேண்டும். ஓட்டுகள் அதிகம் விழுவதற்காக, அம்மா, தாயே, ஓட்டுப்பிச்சை போடுங்கள் என்று ஒவ்வொரு பதிவிலும் கடைசியில் தவறாமல் குறிப்பிட வேண்டும்.
6. நமக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களை மாடரேட் செய்து நமது பதிவில் ஏற்றவேண்டும். அந்த பின்னூட்டங்களுக்கு பதில்கள் நமது பதிவில் போடவேண்டும். பிறகு அவற்றுக்கு எதிர்வினைகள் வரும். அவற்றுக்கு நாம் பதில் போட, ஒரே தொடர்கதைதான். சில பதிவுகளில் அவர்கள் பதிவு இட்ட சில மணி நேரத்திலேயே 70 – 80 பின்னூட்டங்கள் சேர்ந்துவிடும். இது எப்படி என்று யோசித்து அதற்கு விடையும் கண்டுபிடித்துவிட்டேன். அதை இங்கே எழுத முடியாது.
7. பிறகு நமக்கு பின்னூட்டமிட்டவர்களின் பதிவுகளைத்தேடிப்போய் நாம் பின்னூட்டம் இடவேண்டும். You scratch my back, I scratch your back கதைதான்.
8. அந்தப்பதிவர்கள் நம்முடைய பின்னூட்டங்களை கண்டு கொண்டார்களாவென்று கண்காணிக்கவேண்டும். அப்படி கண்டுகொள்ளாமல் விட்ட பதிவர்களை நம் அடுத்த பதிவில் உண்டு இல்லை என்று ஆக்கிவிடவேண்டும். அந்தப்பதிவில் பின்னூட்டமிடும்போது அங்கு இருக்கும் கட்டங்களில் விளையாட்டாக டிக் செய்து விட்டால். வினை வந்துவிடும். பிறகு நமது மெயில் பாக்சைத் திறந்தால் வரும் மெயில்கள் நம்மை மூச்சு முட்ட செய்துவிடும்.
9. பின்னூட்டம் இடுபவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல சமயங்களில் நம் பதிவை எடிட் செய்யவேண்டி வரும்.
10. இத்தனைக்கும் நடுவில் நான் காலைக்கடன்களை முடித்து விட்டு குளிக்கவேண்டும், டிபன், சாப்பாடு இத்தியாதிகளை சாப்பிட வேண்டும், சொந்த வெளி வேலைகளை கவனிக்கவேண்டும், வீட்டம்மா சொல்லும் எடுபிடி வேலைகளை முடிக்கவேன்டும், போன் பேசவேண்டும், நண்பர்களைப் பார்க்கவேண்டும், தூங்கவேண்டும்.
அப்பப்பா, என்னால் முடியவில்லை. எனக்கு பிரபல பதிவர் பட்டம் வேண்டாம், வேண்டவே வேண்டாம், என்னை ஆளை விட்டால் போதும் சாமி (நித்தியானந்த சாமி இல்லை, இது நிஜ சாமி.) நான் ஓடி விடுகிறேன்.