திங்கள், 19 அக்டோபர், 2009

நீங்கள் பிரபல பதிவராக வேண்டுமா? (பாகம்-6)



டிஸ்கி* - இந்த பகுதியில் கூறப்போகும் விஷயங்கள் மிகவும் sensitive ஆனவை. அவைகளை மிகவும் கவனமாக கையாளவேண்டும். முக்கியமாக இவைகளின் ரகசியம் கண்டிப்பாக காக்கப்படவேண்டும். இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை.
·          டிஸ்கி = Disclaimer
·          இதை இன்னும் பொடி எழுத்தில் போடவேண்டும். என்னுடைய கம்ப்யூட்டரில் அதற்கு வசதி இல்லை.
ஆகவே உங்கள் தளத்தை 108 பேர் பின்பற்றுகிறார்கள். மேலும் பலர் சேர வாய்ப்பு உண்டு.
இனி தேவை பின்னூட்டங்கள்.
இதில் கொஞ்சம் கவனம் தேவை. இதற்காக ஒரு பதிவர் சந்திப்பு போட்டால் உத்தமம். ஒரு மூத்த பதிவரின் அறிவுரைகள் மிகவும் உதவியாயிருக்கும். என்னைக்கூப்பிட்டாலும் வருகிறேன். என்ன கொஞ்சம் செலவு அதிகமாகும். பரவாயில்லை. பின்னால் வசூல் ஆகிவிடும்.
இந்த சந்திப்பில் யார் யார் பின்னூ போடுவது, அதன் போக்கு எப்படியிருக்க வேண்டும் என்பதையெல்லாம் பேசி முடிவெடுக்க வேண்டும். பொதுவாக பதிவை விட பின்னூக்கள்தான் காரசாரமாக இருக்கவேண்டும். முதலில் நீங்களே பின்னூ போடலாம். அதுதான் உங்களுக்கு நவதளங்கள் இருக்கிறதல்லவா? அவைகளிலிருந்து போடவேண்டியதுதான். உங்கள் பதிவின் செய்திகளுக்கும பின்னூட்டங்களுக்கும் எந்த சம்பந்தமும் தேவையில்லை. இங்கே எதைப்பற்றியும், யாரைப்பற்றியும், என்ன வேண்டுமென்றாலும் எழுதிக்கொள்ளலாம். யாரும் உங்களைக்கேட்க முடியாது. ஏனென்றால் பின்னூட்டங்களுக்கும் பதிவருக்கும் சட்ட ரீதியாக எந்த சம்பந்தமும் இல்லை. ஆகவே யாரும் உங்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுக்க முடியாது.
யாரையாவது வசை பாடவேண்டுமென்றால் பின்னூட்டங்கள் பாதுகாப்பானது. அவ்வப்போது உங்களுடைய நண்பர்களையும் பின்னூ போடச்சொல்லுங்கள். அவ்வளவுதான். உங்கள் பதிவின் மதிப்பு மளமளவென்று ஏறிவிடும்.