செவ்வாய், 20 அக்டோபர், 2009

நீங்கள் பிரபல பதிவராக வேண்டுமா? (பாகம்-7)




டிஸ்கி* - இந்த பகுதியில் கூறப்போகும் விஷயங்கள் மிகவும் sensitive ஆனவை. அவைகளை மிகவும் கவனமாக கையாளவேண்டும். முக்கியமாக இவைகளின் ரகசியம் கண்டிப்பாக காக்கப்படவேண்டும். இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை.
• டிஸ்கி = Disclaimer
• இதை இன்னும் பொடி எழுத்தில் போடவேண்டும். என்னுடைய கம்ப்யூட்டரில் அதற்கு வசதி இல்லை.

அடுத்த்தாக கவனிக்க வேண்டியது ‘’வருகை எண்ணிக்கை’’. இந்த எண்ணிக்கை கூடினால்தான் உங்கள் தளத்தின் மதிப்பு கூடும்.

இதற்கு நீங்கள் முதலில் ஒரு வருகைப்பதிவு விட்ஜெட்டை உங்கள் தளத்தில் நிறுவ வேண்டும். இது மிகவும் சுலபம். ஏதாவது ஒரு தளத்தில் இதை நிறுவியிருப்பார்கள். அதை அப்படியே லிங்க் கண்டுபிடித்து உங்களுடைய தளத்தில் ஏற்றவேண்டியதுதான்.
பிறகு இந்த வருகைப்பதிவிற்கு ஒரு இலக்கை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். மூன்று மாதத்தில் ஒரு லட்சம் என்று நிர்ணயித்துக்கொள்ளுங்கள். முடியுமா என்று மலைக்காதீர்கள்! முயன்றால் முடியாதது உலகில் ஒன்றும் இல்லை. உங்கள் திறமையின் பேரிலும் உங்கள் குருவின் மேலும் நம்பிக்கை வையுங்கள். நினைத்தது நடக்கும்.
உங்களுக்கு ஓரளவாவது கணக்குப் போட வரும் என்று நினைக்கிறேன். பின்வறும் கணக்கை உன்னிப்பாக கவனிக்கவும். உங்களிடம் கைவசம் 108 தளங்கள் இருக்கின்றன அல்லவா? ஒவ்வொரு தளத்திலிருந்தும் உங்கள் பிரபல தளத்தை தினம் 10 முறை ஹிட் செய்யவேண்டும். ஆக ஒரு நாளில் உங்கள் தளத்திற்கு 1080 ஹிட்கள் கணக்காகி விட்டது. இனி நீங்களே கணக்கு போட்டுக்கொள்ளலாம். மாத்தஃதிற்கு ஏறக்குறைய 32400 வரும். மூன்று மாத்தஃதில் 97200 ஹிட்கள். இது போக வழியில் போகும் சிலரும் போகிறபோக்கில் வேடிக்கை பார்க்க வருவார்கள். எல்லாமாகச்சேர்ந்து சுலபமாக ஒரு லட்சம் இலக்கை அடைந்துவிடலாம்.
உடனே ஒரு பெரிய பதிவு போட்டு ‘’ஆஹா, மூன்று மாதத்தில் ஒரு லட்சம் வருகை. பாருங்கள், பாருங்கள், இந்த தளத்தின் சாதனை’’ என்று டாம் டாம் போடவேண்டியதுதான்.
மீதி அடுத்த பதிவில்.. (அடுத்ததே இந்த வரிசையில் கடைசி பதிவு.)