திருச்செந்தூரில் காலை 10 மணிக்கு புறப்பட்டு 111/2 மணிக்கு நெல்லையப்பர் கோவில் வந்து சேர்ந்தோம். நெல்லையப்பரையும் காந்திமதி அம்மனையும் தரிசித்து விட்டு வெளியில் வந்தோம்.
கோயமுத்தூரிலிருந்து புறப்படும்போதே எனது மகள் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா வாங்கிக்கொண்டு வருமாறு சொல்லியிருந்தாள். விசாரித்ததில் அந்த அல்வா கடை நெல்லையப்பர் கோவில் எதிரில் இருப்பதாக சொல்லியிருந்தார்கள். சரி, அந்த கடையைப்பார்க்கலாம் என்று விசாரித்து கடையைக்கண்டு பிடித்தோம். கடை மூடியிருந்த்து. அக்கம் பக்கம் விசாரித்த்தில் அந்த கடை காலையில் இரண்டு மணி நேரம் மாலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே திறப்பார்கள் என்றும் அந்த சமயங்களிலும் கூட்டமாக இருக்கும் என்றும் சொன்னார்கள். ஆஹா, இந்த அல்வா நமக்கு உதவாது என்று முடிவு செய்து அங்கிருந்து பஸ் ஸ்டேண்ட் வந்தோம். அங்கு இரண்டு மூன்று கடைகள் இருந்தன. அதில் கூட்டம் அதிகமாக இருக்கும் கடைக்குப்போய் (கூட்டம் அதிகமாக இருக்கும் கடையில்தான் சரக்கு புதிதாகவும் நன்றாகவும் இருக்குமாம்-என் இல்லத்தரசியின் அபிப்பிராயம்) 5 கிலோ அல்வா வாங்கினோம். எதற்கு இவ்வளவு என்று கேட்காதீர்கள். ஊரில் எல்லோருக்கும் அல்வா (?) கொடுக்கவேண்டுமல்லவா!
இதற்குள் பகல் ஒரு மணி ஆகிவிட்டது. எங்கேயாவது சாப்பிடலாம் என்று முடிவு செய்தவுடன் எங்கள் டிரைவர் கன்னியாகுமரி போகும் பைபாஸ் ரோட்டில் ஆர்யபவன் இருக்கிறது, அங்கேயே சாப்பிடலாம் என்றார். சரி என்று அங்கே சென்று சாப்பிட்டோம். சாதம் வெள்ளை வெளேர் என்று கண்ணைப்பறித்த்து. சரி ஒரு வெட்டு வெட்டிவிட வேண்டியதுதான் என்று உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தோம். அப்போதுதான் தெரிந்தது அது சாதம் அல்ல, அரிசியை வெந்நீரில் ஊறவைத்து இலையில் போட்டிருக்கிறார்கள் என்று.
என்ன செய்யமுடியும். எப்படியோ சாப்பிட்டோம் என்று பெயர் பண்ணிவிட்டு கன்னியாகுமரி புறப்பட்டோம். சாதாரணமாக சாப்பிட்டு விட்டு காரில் போனால் தூக்கம் சுகமாக வரும். ஆனால் அன்று வயிறு நிரம்பாததால் யாருக்கும் தூக்கம் வரவில்லை.
மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி அடைந்தோம். தமிழ்நாடு சுற்றுலாக்கழகம் நடத்தும் ரெஸ்ட் ஹவுஸில் ரூம் ரிசர்வ் செய்திருந்தோம். ரூம் வாங்கி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துவிட்டு வெளியில் புறப்பட்டோம். கன்னியாகுமரி அம்மனையும் சூரிய அஸ்தமனத்தையும் பார்ப்பதாக பிளான்.
மிகுதி தொடரும்....