ஞாயிறு, 7 மார்ச், 2010

வாழ்வு முன்னே நிர்ணயிக்கப்பட்டதா ?

கேள்வி:அன்பு அண்ணா, வாழ்வு முன்னே நிர்ணயிக்கப்பட்டதா ?

பதில்:- முதல் பாகம்.


இந்தக் கேள்வி என்னிடம் என் நெருங்கிய உறவினர் ஒருவர் கேட்ட கேள்வி. வழக்கமாக இப்படிப்பட்ட கேள்விகள் ஆன்மீக ஞானிகளிடம் மட்டுமே கேட்கப்படும். என் உறவினர் என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்டாரென்றால், நான் சாதாரண மனிதனுக்குப் புரிகிற மாதிரி பதில் கொடுக்கக்கூடும் என்கிற நம்பிக்கையில்தான்.

வாழ்க்கையை நான் புரிந்து கொண்ட அளவில்தான் என்னால் இந்தக் கேள்விக்கு பதில் அளிக்க முடியும். அந்த பதில்கள் ஏதோ ஒரு அளவிற்கு அவருடைய மனதிற்கும் மற்ற வாசகர்களுக்கும் ஏற்புடையதாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.




சூரியனும் அதைச்சார்ந்த கிரகங்களும் ஓயாது சுற்றிக்கொண்டே இருக்கின்றன. அவைகளிடமிருந்து பல்வேறு வகையான ஒளிக்கதிர்கள் பூமியை வந்தடைகின்றன. இந்தக்கதிர்கள் பல வகைகளில் மனிதனைப் பாதிக்கின்றன என்று விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்படி வரும் கதிர்களின் வீரியம் அதாவது அவைகளின் சக்தி, அந்த சமயத்தில் சூரியனும் மற்ற கிரகங்களும் ஆகாய ஓடு பாதையில் எங்கு இருக்கின்றன, ஒன்றுக்கொன்று எவ்வளவு தூரத்தில் இருக்கின்றன என்பதைப்பொருத்து அமையும் என்றும் விஞ்ஞானம் கண்டுபிடித்திருக்கிறது. ஒரு கிரகத்திலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு மற்ற கிரகத்தின் கதிர்வீச்சுடன் சேர்ந்து அதிக வீரியம் பெறலாம். அல்லது ஒன்றுக்கொன்று எதிர்மறையாக இருந்து அந்த கதிர்வீச்சின் வீரியத்தைக்குறைக்கலாம்.

இந்தப்பாராவை மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து படிக்கவும். அதன் பொருள் முழுவதும் நன்கு மனதில் பதிந்த பிறகு மேற்கொண்டு படிக்கவும்.

இந்துக்கள் எல்லோரும் ஒரு குழந்தை பிறந்தவுடன் செய்யும் முதல் காரியம், அந்த குழந்தையின் ஜாதகத்தைக் கணிப்பது. ஜாதகம் என்பது அந்த குழந்தை பிறந்தபோது இந்த சூரியன் உட்பட்ட நவகிரகங்களும் ஆகாயவீதியில் எந்தெந்த இடத்தில் இருந்தன என்ற ஒரு குறிப்பு.




அந்த நவக்கிரகங்களிலிருந்து வரும் கதிர் வீச்சுகள் ஒவ்வொரு மனிதனையும் பாதிக்கின்றன என்பது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று பார்த்தோம். இந்த விஞ்ஞான உண்மைகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு வெகு காலம் முன்பாகவே நம் நாட்டு ஞானிகள் இந்த உண்மைகளைப் புரிந்துகொண்டு அதை ஜோதிட சாஸ்திரமாக நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

நவக்கிரகங்கள் இடம் மாறிக்கொண்டே இருக்கிறதல்லவா, அவைகள் இடம் மாறும்போது அவைகளிடமிருந்து வரும் கதிர்வீச்சுகளும் மாறும் அல்லவா, அப்படி கதிர்வீச்சுகள் மாறும்போது மனிதர்களின் மேல் அவைகள் ஏற்படுத்தும் விளைவுகளும் மாறும் அல்லவா, இந்த சமாசாரங்களைத்தான் ஜோசிய சாஸ்திரம் சொல்கிறது.

இந்த சாஸ்திரத்தை நன்கு கற்றுத்தேர்ந்த பண்டிதனால் ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்களையும் துல்லியமாக கணித்து சொல்ல இயலும்.



தொடரும்.....