
எதிர்காலத்தைப்பற்றி அறிந்து கொள்வதில் எல்லோருக்கும் ஆவல் இருக்கிறது. ஜோசியம் உண்மை என்று வைத்துக்கொள்வோம். இனி நடக்கப்போவதைத்தெரிந்து என்ன பிரயோஜனம்? நல்ல எதிர்காலம் என்றால் சந்தோஷம் ஏற்படும். ஆனால் அந்த சந்தோஷம் மெதுவாக நீர்த்துப்போய், அந்த சம்பவம் உண்மையாக நடக்கும்போது சந்தோஷம் ரொம்பவும் குறைந்து போய்விடும்.
அதேபோல் துக்கமான எதிர்காலம் வரப்போகிறது என்றால் அன்று முதலே துக்கம் ஆரம்பித்துவிடும். ஒருவனுக்கு 6 மாதத்தில் மரணம் சம்பவிக்கும் என்றால் அவன் அதைக்கேட்ட நாள் முதல் கவலையில் மூழ்கி விடுவான். அவன் இறக்கும் நாள்வரை கவலையிலேயே இருந்து பிறகு இறப்பான்.
ஆகவே ஜோசியத்தினால் ஒருவனுடைய சந்தோஷம் குறைந்து விடுகிறது, துக்கம் பன்மடங்கு அதிகரிக்கிறது. இந்த இரண்டு சூழ்நிலைகளுமே தேவையற்றதுதானே.

ஜோசியம் பொய்யென்றால் பிறகு அதைத் தெரிந்து என்ன பலன்?
ஆனாலும் பெரும்பான்மையான மக்கள் ஜோசியத்தை நாடிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். எதனால்? ஜோசியர்கள் சிறந்த மனோதத்துவ நிபுணர்கள். வந்தவர்களின் மனோநிலையை அனுசரித்து உண்மையையும் பொய்யையும் கலந்து சொல்வார்கள். ஜாதகப்பிரகாரம் ஒரு கெடுதல் நடக்கப்போவதாக தெரிந்தாலும் அதை மிக சாமர்த்தியமாக மாற்றி ஒரு குறிப்பாக மட்டும் சொல்லிவிட்டு,எதற்கும் இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள் என்று சொல்வார்கள். ஜோசியர்களுடைய கணிப்பு என்னவென்றால் ஜாதகப்பிரகாரம் கெட்ட பலன் வருவதாக இருந்தாலும் அவனுடைய பூர்வ ஜன்ம புண்ணியத்தினால் அந்த கெடுதல் நடக்காமலும் போகலாம்.
ஆனால் ஜோசியம் பார்க்க வந்தவர்களுடைய மனது சந்தோஷப்படும்படியான பலன்களைச்சொல்வதனால் அவர்கள் தன்னம்பிக்கையும் புது ஊக்கமும் பெற்று தங்கள் அன்றாட வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழிப்பார்கள். இது ஒரு பெரிய ஆறுதலல்லவா?
வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத மனிதனே உலகில் இல்லை. மனோதைரியம் உள்ளவன் தாழ்வுகளை எதிர்கொண்டு வெற்றி அடைகிறான். மனோபலம் குறைந்தவர்களுக்கு ஊன்றுகோல் தேவைப்படுகின்றது. அந்த ஊன்றுகோல் வீட்டுப்பெரியவர்களின் ஆறுதலாக இருக்கலாம், கடவுள் பக்தியாக இருக்கலாம், சாமியார்களின் அருளுரைகளாக இருக்கலாம். நித்தியானந்தரும் அதைத்தான் செய்து வந்தார். அவருடைய விதி ரஞ்சிதா ரூபத்தில் வந்து அவரைப் புரட்டிப்போட்டு விட்டது.
அமெரிக்காவில் வீதிதோறும் மனோதத்துவ நிபுணர்கள் கடை விரித்து வைத்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் செய்யும் கவுன்சிலிங்கை நம்மூர் ஜோசியர்கள் செய்கிறார்கள். அவ்வளவுதான். ஆகவே ஜோசியம் நிஜமா, பொய்யா என்று கவலைப்படுவதை விட்டுவிட்டு அதனால் மனித சமுதாயத்திற்கு நன்மை இருந்தால் அது இருந்துவிட்டுப் போகட்டுமே.
