செவ்வாய், 6 ஜூலை, 2010

கேதார்-பத்ரி யாத்திரை – 1

முன்னுரை
 
நான் நண்பர்களுடன் சார்தாம் யாத்திரை போயிருக்கிறேன். “சார்தாம் என்பது யமுனோத்திரி, கங்கோத்திரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு க்ஷேத்திரங்களைக் குறிக்கும். இந்த யாத்திரைக்குப் போகிறவர்கள் முதலில் ஹரித்துவாருக்குப் போய் அங்கிருந்துதான் இந்தக் கோயில்களுக்குப் போகவேண்டும். கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய இரண்டு கோயில்களுக்கு மட்டும் போகிறவர்களும் உண்டு. நான் என் மனைவியுடனும் தங்கையுடனும் இந்த இரண்டு கோயில்களுக்கு மட்டும் போய் வரலாம் என்று பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது என் சம்பந்திகள் இருவரும் எங்களையும் கூட்டிக்கொண்டு போய் இந்த கோயில்களைக் காட்டக்கூடாதா என்று கேட்டார்கள். சரி. ஐந்து பேருமாகப் போகலாம் என்று முடிவு செய்தோம்.
எப்படிப் போவது, எங்கெங்கு போவது என்று பேசும்பொழுது, ஹரித்துவார், ரிஷிகேஷ், கேதார்நாத், பத்ரிநாத், டில்லி, ஆக்ரா என்ற இந்த ஊர்களுக்குப் போவது என்று முடிவாயிற்று. எப்படி போகலாம் என்று பேசினபோது, என் மாப்பிள்ளை, உங்களைத்தவிர இவர்கள் யாரும் ஏரோப்பிளேனைத் தொட்டுக்கூடப் பார்த்ததில்லை. நீங்கள் எல்லோரும் டில்லி வரையில் ஏன் பிளேனில் போகக்கூடாது என்றார். நாங்கள் பொருளாதார ரீதியில் மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஆபீஸ் செலவில் நான் பிளேனில் போனதைத்தவிர, சொந்தச் செலவில் குடும்ப அங்கத்தினர்களை எங்கும் பிளேனில் கூட்டிக்கொண்டு போகமுடியும் என்று கனா கூட கண்டதில்லை. செலவு நிறைய ஆகுமே என்கிற என்னுடைய ஆட்சேபணைக்கு, மாப்பிள்ளை, அதற்கு நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள், நான் டிக்கெட் எடுத்துக் கொடுக்கிறேன், தேதிகளை முடிவு செய்து விட்டு சொல்லுங்கள் என்று கூறிவிட்டார்.
சரி. பிறகென்ன கவலை என்று டூர் புரொக்ராம் போட்டோம். கோவையிலிருந்து டில்லி, ஹரித்துவார், கேதார்நாத், பத்ரிநாத் பார்த்து வர பதினைந்து நாள் டூர். போகும்போது டில்லி வரை பிளேன், வரும்போது ரயில். டில்லியிலிருந்து ரிஷிகேஷ் போகவர ரயில். இந்த புரொக்ராம் ஜூலை 10ம் தேதி புறப்படுவதாகப் போட்டு தேதிகளை மாப்பிள்ளையிடம் கொடுத்து விட்டேன். இது நடந்தது ஏப்ரல் மாதம். மாப்பிள்ளை டிக்கட் வாங்குவது, என் மாதிரி ரயில்வே ஸ்டேஷன் போய் க்யூவில் நின்று வாங்குவதெல்லாம் கிடையாது. இன்டர்நெட்டில்தான் எல்லா டிக்கட்டுகளும் வாங்குவார். நான் தேதிகளைக் கொடுத்த மறுநாள் மாமா, டிக்கெட் எல்லாம் புக் பண்ணிவிட்டேன். பிளேன் டிக்கட் சீப்பாக கிடைத்தது. அதனால் டில்லிக்கு போகவர இரண்டு வழிக்கும் சேர்த்தே பிளேன் டிக்கட் போட்டுவிட்டேன். அங்கிருந்து ஹரித்துவார் போகவர .ஸி. கிளாஸில் டிக்கட் போட்டாய் விட்டது. பிளேனில் சாப்பாட்டுக்கு சொல்லிவிட்டேன். டில்லியில் தங்குவதற்கும், ஆக்ரா போய் வருவதற்கும், டில்லி லோக்கல் சைட்சீயிங்க் ட்ரிப்புக்கும், ஸ்டேஷனிலிருந்து ஹோட்டலுக்கு வருவதற்கும், ஹோட்டலிலிருந்து ஏர்போர்ட் போவதற்கும் வேண்டிய எல்லா புக்கிங்கும் செய்தாய்விட்டதுஎன்று சொல்லி எல்லா புக்கிங்க் பிரின்ட்களையும் கொடுத்து விட்டார். ஆஹா, மாப்பிள்ளையினுடைய சாமர்த்தியமே சாமர்த்தியம் என்று மெச்சிக்கொண்டேன். ஆகக்கூடி 15 நாள் டூர் 13 நாட்களாகக் குறைந்து விட்டது.
என் பங்குக்கு நான் ஹரித்துவாரிலிருந்து கேதார்நாத், பத்ரிநாத் போகவர ஹரித்துவாரில் ஒரு ஏஜன்ட்டை இன்டர்நெட்டில் பிடித்து ரேட் பேசி, அட்வான்ஸும் அனுப்பி விட்டேன். ஹரித்துவாரில் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு ஐயப்பன் கோவில் இருக்கிறது. இதற்குச்சேர்ந்து பயணிகள் தங்குவதற்கு ரூம்களும் உண்டு. அந்த விலாசம் இன்டர்நெட்டில் கிடைத்தது. அவர்களுக்கு நாங்கள் வரும் தேதியைக்குறிப்பிட்டு ஒரு தபால் எழுதிப்போட்டிருக்கிறேன். அங்கு போய்த்தான் தங்குமிடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அங்கு நிறைய லாட்ஜுகள் இருப்பதால் சமாளித்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆக எல்லா ஏற்பாடுகளும் பக்காவாகச் செய்தாகிவிட்டது.
இதற்கிடையில் இந்த யாத்திரைக்கு சமீபத்தில் போய் வந்த ஒரு பார்ட்டியைச் சந்தித்து அங்குள்ள நடைமுறைகளை விசாரித்துத் தெரிந்து கொண்டேன். அவர்களிடமிருந்து முதலாவதாகத் தெரிந்து கொண்டது, டில்லியில் வறுத்தெடுக்கும் வெயில், கேதார்-பத்ரியில் எலும்பை உறைய வைக்கும் குளிர், இந்த இரண்டிற்கும் தயாராகப் போகவேண்டும் என்பதுதான். இரண்டாவது நம்ம ஊர் சாப்பாடு அங்கே மருந்துக்கு கூடக் கிடைக்காது என்பதாகும். மூன்றாவது அங்கே அனைத்து உணவுகளும் கடுகு எண்ணையில் செய்கிறார்கள் என்பதாகும். கடுகு எண்ணையைப் பற்றித் தெரியாதவர்களுக்கு ஒரு டிப்ஸ். அந்த எண்ணை காயும்போது வரும் வாசனை, அதாவது நாற்றம் (நாத்தம்), நம்ம ஊர் குப்பைத்தொட்டியில் கூட வராது. கொஞ்ச நேரம் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தால் வாந்தி வந்துவிடும்.
இந்த விபரங்களை வீட்டில் எல்லோருக்கும் எடுத்துச்சொல்லி அவர்களை ரொட்டிவாலாக்களாக மாற தயார் செய்தேன். குளிரைத்தாங்க ஸ்வெட்டர், மப்ளர், கிளவுஸ், குல்லாய், சாக்ஸ், சால்வை இத்தியாதிகள் ஆளுக்கு ஒரு செட் தயார் செய்தோம். வெயிலுக்காக ரீஹைட்ரேஷன் சால்ட் தயார்செய்தேன். இப்படியாக எல்லா முஸ்தீபுகளும் ரெடியாகின.
புறப்படும் நாளும் வந்தது.