ஞாயிறு, 3 அக்டோபர், 2010

உங்களுக்குப் பைத்தியம்தான் புடிச்சிருக்கு !





இன்று காலையில் இந்த அறிவிப்பைக் கேட்டவுடன் யாரு, யாருக்காக இந்த அறிவிப்பை ஒலிபரப்புகிறார்கள் என்று சுற்று முற்றும் பார்த்தேன். என் மனைவிதான் நின்றுகொண்டிருந்தார்கள். (எதுக்கும் கொஞ்சம் மரியாதையாகவே இருப்போம் - எதிரணியின் உத்தி என்னவென்று தெரியவில்லையே).
என்ன, யாருக்கு இந்த அர்ச்சனை என்று கேட்டேன்.
எல்லாம் உங்களுக்குத்தான், என்றார்கள்.
ஏன், என்ன ஆச்சு, எனக்கு எதுக்காக இப்போ இந்தப் பட்டம்?
ஆமா, நானும் அரை மணி நேரமா டிபன் சாப்பிடக் கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறேன், உங்க காதிலேயே விழல்ல, அந்தக் கம்ப்யூட்டர்ல அப்படி என்ன இருக்கு, அதயே எப்பப் பார்த்தாலும் பயித்தியம் மாதிரி பார்த்துட்டே இருக்கீங்க, அதனாலதான் அந்தப் பட்டம் என்றார்கள்.
பதில் பேசாமல் டிபன் சாப்பிட்டுவிட்டு வந்து ஒரு சுய பரிசோதனை செய்தேன்.
பயித்தியம், கிறுக்கு, பிராந்து, மென்டல், கீழ்ப்பாக்கம், லூஸு என்று பல சொற்களால் அழைக்கப்படும் ஒரு மனிதனுடைய (இது, அது என்றுதான் குறிப்பிடப்படுவதால் அந்த மனிதன் அஃறிணை லெவலுக்கு தள்ளப்படுகிறான்) குணங்கள் என்னென்ன என்று ஒரு ஆராய்ச்சி செய்தேன். {என்ன இருந்தாலும் நான் ஒரு ஆராய்ச்சியாளனல்லவா}. அந்த ஆராய்ச்சியில் கண்டு பிடித்தவை.
1. பைத்தியம் எப்போதும் ஒரு வேலையையே திரும்பத் திரும்ப செய்யும்.

ஆமாம், நானும் எப்ப பார்த்தாலும் கம்ப்யூட்டரையே நோண்டிக் கொண்டிருக்கிறேன்.

2. பைத்தியம், ஏதாவது ஒன்றையே முறைத்துப்பார்த்துக்கொண்டே இருக்கும்.
ஆமாம், நானும் எப்பொழுதும் கம்ப்யூட்டரையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
3. பைத்தியத்திற்கு சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என்ற பிரக்ஞையே இருக்காது.

ஆமாம், என்ன நடந்தாலும், யார் வந்தாலோ, போனாலோ எனக்குத் தெரிவதில்லை.

4. பசி, தாகம் என்ற உணர்வுகள் இருக்காது.
ஆமாம், சாப்பிடவேண்டும் என்றே தோணுவதில்லை.
5. யாராவது கூப்பிட்டால் காது கேட்காது.
கரெக்ட், கூப்பிட்டா காது கேட்பதில்லை.
இந்த ஆராய்ச்சியின் முடிவில் நான் ஒரு பைத்தியம்தான் என்ற முடிவுக்கு வந்தேன். மனைவியைக் கூப்பிட்டு, ஆமாம், நீ சொன்னது சரிதான் போல இருக்குது என்றேன்.
எது சரியாய் இருக்கு என்றாள்.
அதுதான், நீ சொன்னது போல் எனக்குப் பைத்தியம்தான் போல இருக்கு என்றேன்.
சரிதான், இப்பத்தான் உங்களுக்கு பைத்தியம் முத்திக்கொண்டு வருகிறது என்றாள்.
இனி மேற்கொண்டு இவளிடம் பேசினால் வம்பு வந்துவிடும் என்று பேசாமல் இருந்தேன்.
என் மகள் வந்தவுடன் (அவள் ஒரு கைனகாலஜிஸ்ட்) யாராவது ஒரு பைத்தியக்கார டாக்டர் பக்கத்துல இருக்காங்களா என்று விசாரித்தேன்.
அப்படி பைத்தியக்கார டாக்டர் யாரும் கிடையாது, பைத்தியத்துக்கு வைத்தியம் பண்ற டாக்டர்தான் இருக்கிறாரு, சரி, யாருக்கு இப்போ பைத்தியம் என்று கேட்டாள்.
எனக்குத்தான் என்றேன்.
யாரு சொன்னா என்றாள்.
உங்கம்மாதான் சொன்னாள், எனக்குப் பைத்தியம் என்று, அப்படீன்னேன்.
பைத்தியம் யாரும் தனக்குப் பைத்தியம்னு சொல்லமாட்டாங்களே, இது என்ன புது குழப்பம் என்று அவங்கம்மாவைக் கூப்பிட்டு விசாரித்தாள்.
விசாரணை முடிவில் வழங்கப்பட்ட தீர்ப்பு என்னவென்றால் நான் இனிமேல் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம்தான் கம்ப்யூட்டர் பார்க்கலாம். அதற்கு மேல் பார்த்தால் கம்ப்யூட்டர் பறிமுதல் செய்யப்படும்.
இந்த தீர்ப்புக்கு அப்பீல் செய்ய முடியுமா?
ஆகவே, என் பெருமதிப்பிற்குரிய பதிவுலக நண்பர்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால் :-
1. இனி என் பதிவுகள் வாரத்துக்கு ஒன்றுதான் வரும்.
2. அப்படி வரும் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு எதிர்வினை போடுவது தாமதமாகும்.
3. அப்படிப்பின்னூட்டம் போட்டவர்களின் பதிவுகளுக்குப் போய் அந்தப் பதிவுகளுக்குப் பின்னூட்டம் போடுவது இன்னும் தாமதமாகும்.
4. அது போக புதிதாக மற்றவர் பதிவுகளுக்குப் போய் அந்தப் பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் போடுவது மேலும் தாமதமாகும்.
என்னுடைய கைகளுக்கு மீறி சுற்றுப்புற சுழ்நிலைகள் மாற்றியமைக்கப்பட்டதால் நிலைமைகள் சீராகும் வரை இந்த நிலையே தொடரும் என்பதை வருத்தத்துடன் சொல்லிக்கொள்கிறேன். எல்லோரும் வழக்கம்போல் தொடர்ந்து தங்கள் ஆதரவைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி, வணக்கம்.
என்னுடைய இந்த முடிவுகளினால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.
(டிஸ்கி: நீண்ட நேரம் உட்கார்ந்தால் பின்புறத்தில் வலி வருகிறது. கம்ப்யூட்டரை அதிக நேரம் பார்ப்பதால் கண்களில் பார்வை மங்குகிறது. இவைதான் உண்மையான காரணங்கள். பதிவுகள் தொடரும்.)