டாக்டர்களைத்தவிர மற்றவர்கள் இந்த வார்த்தையைக் கேள்விப்பட்டிருப்பது சந்தேகம். இது ஒரு அபூர்வமாக வரும் ஒரு நோய். நோய் என்று சொல்வது கூடத் தவறு. ஒரு மருத்துவச்சிக்கல் என்றுதான் கூறவேண்டும்.
கெண்டைக்காலில் ஏதாவது அடிபட்டு இருந்தால் ஆயிரத்தில் ஒருவருக்கு இந்த சிக்கல் வரும் வாய்ப்பு உண்டு. அபூர்வமானது என்றாலும் இதைப்பற்றிய அடிப்படை அறிவு எல்லோருக்கும் தேவை. கருவுற்று இருக்கும் பெண்மணிகளுக்கும் பிரசவத்திற்கு முன்போ, பின்போ இந்த சிக்கல் வரும் வாய்ப்பு உள்ளது என்றும் டாக்டர்கள் சொல்லுகிறார்கள்.
என் நண்பர் ஒருவரின் மாப்பிள்ளை போன வாரம் ஒரு நாள் தன் மனைவியுடன் ஸ்கூட்டரில் போகும்போது குறுக்கே ஒரு கார் எதிர்பாராமல் வந்ததால் சடன்பிரேக் போட்டு சறுக்கி விழுந்து விட்டார். சாதாரணமாக ஸ்கூட்டர் வைத்திருப்பவர்களுக்கு ஒரு முறையாவது இந்த மாதிரி விபத்து ஏற்பட்டிருக்கும். நண்பரின் மாப்பிள்ளை பக்கத்திலுள்ள ஒரு பெரிய தனியார் ஆஸபத்திரிக்குச் சென்று எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் கெண்டைக்காலின் எலும்பில் சின்னதாக இருக்கும் “பிஃபியா” என்ற எலும்பில் ஒரு லேசான கீறல். அதற்கு கட்டுப்போட்டு வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். அவருடைய மனைவிக்கு சாதாரண, லேசான காயங்கள் மட்டும்தான். அதற்கும் மருந்து போட்டு அனுப்பி விட்டார்கள்.
அடுத்த நாள் நான் போய்ப் பார்த்துவிட்டு வந்தேன். மனுஷன் நன்றாக உற்சாகமாக இருந்தார். ஒரு மாதம் என்னைப் படுக்க வைத்து விட்டார்கள் என்று தமாசு பண்ணினார். மூன்றாவது நாள் காலையில் திடீரென்று மயக்கம் போட்டுவிட்டார் பேச்சுமூச்சு இல்லை. நாடித்துடிப்பு நின்று விட்டது. கைகால்கள் சில்லென்று ஆகிவிட்டன. யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. உடனே பக்கத்திலிருக்கும் ஒரு பெரிய தனியார் ஆஸ்பத்திரிக்கு போன் செய்து ஆம்புலன்ஸ் வரவழைத்து ஆஸப்த்திரிக்குப் போனார்கள். இதற்கு ஏறக்குறைய அரை மணி நேரம் ஆகி விட்டது.
எமர்ஜென்சி வார்டுக்குப் போனவுடன் ட்ரீட்மென்ட் கொடுத்து இருதயத்தை துடிக்க வைத்து விட்டார்கள். அதுவே பெரிய சாதனை. அரை மணிநேரம் இயங்காமல் இருந்த இருதயம் இயங்க ஆரம்பித்தவுடன் நுரையீரலுக்கும் வென்டிலேட்டர் என்ற ஒரு மிஷினைப் பொருத்தி நுரையீரலையும் ஒழுங்குபடுத்தினார்கள். இருதயம் தொடர்ந்து வேலை செய்ய பலவிதமான ஊசிகள். நுரையீரல் வேலை செய்ய மிஷின். மூளையை இயங்கச்செய்ய பலவித ஊசிகள் செலுத்தப்படுகின்றன. ஆனால் மூளை தனியாக இயங்கவில்லை. ஏனென்றால் மூளை இயங்கினால் நுரையீரல் தானே இயங்கவேண்டும். அது நடக்காததால் மூளை இயக்கம் இன்னும் வரவில்லை என்று டாக்டர்கள் அபிப்பிராயப் படுகிறார்கள்.
இது ஒரு சிக்கலான சூழ்நிலை. பணம் தண்ணீராக செலவாகிறது. மனுஷன் எப்போது சுய நினைவுக்கு வருவார் என்று சொல்லமுடியாத நிலை. என்ன முடிவு எடுப்பது என்று தெரியவில்லை.
கடவுள்தான் காப்பாற்றவேண்டும்!