விவசாயம் பற்றி
“உங்கள் தொழில் சார்ந்த விவசாயம் பற்றி ஒரு தொடர் எழுதினால் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்...இன்றைய கால கட்டத்தில் விவசாயம் மட்டும் செய்து வாழ்வது இயலுமா!!! என்ன மாதிரியான விவசாயம் செய்ய வேண்டும்? குறைந்தது எவ்வளவு நிலம் வேண்டும்...விவசாயம் பற்றி ஒன்றுமே தெரியாத என்னை போன்றோர் செய்ய நினைப்பது மடமையா? இல்லை செய்ய முடியும் என்றால் அதற்கு அடிபடையாக செய்ய வேண்டியவை யாவை?
அதிகமான அதிக பிரசங்கி கேள்விகளுக்கு மன்னிக்கவும்...”
மேலே கொடுத்துள்ள குறிப்பு ஒரு பதிவர் பின்னூட்டத்தில் கேட்டது. அங்கேயே பதில் சொல்ல இடம் போதாதாகையால் ஒரு தனிப்பதிவாகப் போடுகிறேன்.
முதலில் சொல்ல விரும்புவது: இதைத்தொடர் பதிவாகப் போடமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன். ஆகவே யாரும் பயப்படவேண்டாம். விவசாயத்தைப்பற்றி ஏற்கனவே நிறையப்பேர் பலப்பல கருத்துக்களைச் சொல்லி பரம்பரை விவசாயிகளையே குழப்பி வருகிறார்கள். அந்த வரிசையில் நான் சேரமாட்டேன்.
இன்றைய காலகட்டத்தில் முன் அனுபவமில்லாமல் செய்யக்கூடிய ஒரே தொழில் அரசியல்தான். அது மட்டுமல்லாமல் போட்ட முதலுக்கு பலமடங்கு லாபம் மொடுக்கும் தொழில் அது ஒன்றுதான். பரம்பரை விவசாயிகள் வேறு வழி தெரியாமல் விவசாயத்தை விட முடியாதவர்களாக இருக்கிறார்கள். கொஞ்சம் பேரே விவசாயத்தில் லாபம் கண்டு சௌகரியமாய் இருக்கிறார்கள். சொஞ்சம் பேர் வரவுக்கும் செலவுக்கும் சரியாய்ப் போய் வாழ்க்கை நடத்துகிறார்கள். மீதிப்பேர் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெரிய பெரிய கார்ப்பரேட் ஆட்களெல்லாம் விவசாயம் செய்ய ஆரம்பித்து, துண்டைக்காணோம், துணியைக்காணோம் என்று ஓடிய கதைகளெல்லாம் இங்கு உண்டு.
விவசாயத்தைப்பற்றி ஒன்றும் தெரியாமல் விவசாயம் செய்யலாமா என்று கேட்பவருக்கு என் ஆலோசனை என்னவென்றால்: நல்ல நிலம், நல்ல சீதோஷ்ண நிலை, கூலியாட்கள் தடையில்லாமல் கிடைக்கக்கூடிய நிலை, நல்ல மார்க்கெட்டிங் உத்திகள் தெரிந்த ஒரு ஆலோசகர், நல்ல மேனேஜ்மென்ட் தெரிந்த ஒரு மேனேஜர், எடுக்க எடுக்க குறையாத பேங்க் பேலன்ஸ் ஆகிய இவை இருந்தால் தாராளமாக விவசாயத்தில் ஈடுபடலாம்.
என்னை டெக்னிகல் அட்வைசராகப் போடுவதாயிருந்தால் பத்து வருட நோட்டீஸ் கொடுக்கவேண்டும். ஆனால் கன்சல்டிங்க் பீஸ் நோட்டீஸ் கொடுத்த நாளிலிருந்து பேங்கில் செலுத்தி விடவேண்டும். என்னுடைய அக்கவுன்ட் நெம்பரும் கன்சல்டிங்க் பீஸ் விவரங்களும் வேண்டுபவர்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு பேங்க் டிராப்ட் எடுத்து அனுப்பினால் தெரியப்படுத்தப்படும்.