செவ்வாய், 29 மார்ச், 2011

இலவசங்களை குறை கூறாதீர்கள். அது தேசத்துரோகம்.


சரித்திரம் படித்தவர்கள் பிரெஞ்சுப் புரட்சி பற்றியும் ரஷ்யப் புரட்சி பற்றியும் படித்திருப்பார்கள். அந்தப் புரட்சிகளின் பின்னணி பற்றியும் நன்கு அறிந்திருப்பார்கள். சமீபத்தில் எகிப்தில் நடந்த மக்கள் எழுச்சி பற்றி எல்லோரும் செய்தித் தாள்களில் படித்துக் கொண்டிருந்தோம்.
சரித்திரம் படிப்பதின் நோக்கமே, நம் முந்தைய தலைமுறையினர் எவ்வாறு வாழ்ந்தார்கள், அவர்கள் செய்த தவறுகள் என்ன, அந்த தவறுகளிலிருந்து நாம் நம்மை எவ்வாறு காத்துக் கொள்ளலாம் என்று தெரிந்து கொள்ளத்தான். இந்த தத்துவத்தில் யாருக்கும் ஐயப்பாடு இருக்காதென்று நம்புகிறேன்.

எகிப்திய மன்னர் இந்தத் தத்துவத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருந்து விட்டார் என்று நினைக்கிறேன். அல்லது தம் மக்கள் ராஜ விசுவாசம் மாற மாட்டார்கள் என்ற மயக்கத்தில் இருந்து விட்டார் என்று நினைக்கிறேன்.

ஆனால் நம் நாட்டு அரசியல் வாதிகள் இந்தத் தத்துவத்தை நன்கு புரிந்தவர்கள். அதாவது மக்கள் எப்போது புரட்சிக்கு தயாராவார்கள் என்பதை நன்றாகத் தெரிந்துள்ளார்கள். மக்களுக்கு வயிறு எப்போது காய்ந்து போகிறதோ அப்போதுதான் புரட்சிக்கான விளை நிலம் உருவாகிறது. பல சமயங்களில் வயிறு நிறைந்திருந்தாலும் அவன் சும்மா இருந்தால் அவன் மனதில் வேண்டாத எண்ணங்கள் தோன்றும். இப்படி பலர் சிந்திக்க ஆரம்பிப்பது நல்லதல்ல. அவர்களை எப்போதும் ஒருவித மயக்கத்திலேயே வைத்திருக்கவேண்டும். அப்போதுதான் நாட்டில் அமைதி நிலவும். ஆட்சியாளர்களுக்கு எந்தப் பிரச்சினைகளும் இருக்காது.

அப்படி வைத்திருந்தாலும், இந்தப் படித்த முட்டாள்கள் இருக்கிறார்களே, அவர்கள்தான் அவ்வப்போது குட்டையைக் குழப்பிக்கொண்டே இருப்பார்கள். அதனால்தான் அவர்களை ஒரு கட்சிக்கும் பிடிப்பதில்லை. ஆனால் ஒரு நல்ல காலம், அவ்வாறு படித்த சிந்தனையாளர்கள் அதிகமாக உருவாவதில்லை. அப்படி ஒன்று இரண்டு உருவாகும்போது அவர்களை எப்படி கையாளவேண்டுமென்று அவர்களுக்குத் தெரியும்.

இந்த சூழ்நிலையை நிலை நிறுத்தத்தான் இலவசங்கள். கிராமிய வேலை வாய்ப்புத் திட்டத்தின் மூலம் வேலை செய்யாமல் காசு கிடைக்கிறது. சலீசாக அரிசி கிடைக்கிறது. பொழுது போக்க டி.வி. யும் டாஸ்மாக்கும் இருக்கின்றன. குடிசைமாற்றுத் திட்டத்தின் மூலம் குடியிருக்க வீடு கிடைக்கிறது. இந்த நிலையில் புரட்சியாவது மண்ணாங்கட்டியாவது?
ஆகவே இலவசங்களின் நன்மையைப் புரிந்து கொண்டீர்களா? இனியாவது இலவசத்தைக் குறை கூறாமல் அவைகளை வாங்கி அனுபவியுங்கள். வாழ்க இலவசம். வாழ்க குடி மக்கள்!