ஞாயிறு, 27 நவம்பர், 2011
மனதுக்கு வயதாவதில்லை
உடலுக்குத்தான் வயதாகும், மனதுக்கு வயதில்லை. மனதை இளமையாக வைத்துக்கொண்டால் உடலும் இளமையாக இருக்கும்.
இந்த பொன்மொழிகளை நாம் எல்லோரும் கேட்டிருப்போம். அவை உண்மையென்று நம்பிக்கொண்டும் பலர் இருக்கக் கூடும். இந்த நம்பிக்கை ஓரளவுக்குத்தான் சரி. வாழ்க்கையில் சலிப்பும் சோர்வும் வந்து விடக்கூடாது என்பதற்காக சொல்லப்படும் வார்த்தைகள் இவை. இதைப் புரிந்து கொள்ளாமல் என் நண்பர் ஒருவர் (75 வயது) தன்னை 30 வயது இளைஞனாக நினைத்துக் கொண்டு 300 கி.மீ. தனியாக, காரில் தானே ஓட்டிக்கொண்டு சென்றார். அவருக்கு 15 வருடங்களுக்கு முன் பை-பாஸ் ஆபரேஷன் செய்திருக்கிறது.
அங்கு ஒரு கல்யாணத்திற்காகப் போனார். கல்யாணத்தன்று காலை 4 மணிக்கு மார்பு பகுதியில் கனமாக இருப்பதாக உணர்ந்தார். உடனே பக்கத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்று டெஸ்ட் பண்ணினார். ரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக இருந்திருக்கிறது. உடனடி வைத்தியம் செய்ததில் ஓரளவு சரியாக ஆகிவிட்டது. அங்கு ஒரு டிரைவரைப் பிடித்து ஊருக்கு வந்து சேர்ந்தார். அன்று இரவே மறுபடியும் தொந்திரவு வந்து பக்கத்திலிருந்த ஒரு நண்பரின் உதவியுடன் ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்து கொண்டார்.
கடந்த மூன்று நாட்களாக நான் அவருடன் இருந்து கவனிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எல்லாப் பரிசோதனைகளும் முடிந்தபிறகு டாக்டர்கள் சொன்னது என்னவென்றால், அவருக்கு வயதாகிவிட்டது, அதை மனதில் கொள்ளாமல் சிறு வயதுக்காரனைப் போல் அலைந்ததுதான் அவருடைய இப்போதைய தொந்திரவுகளுக்கு காரணம், இனி மேல் அவர் தன்னுடைய நடவடிக்கைகளை வயதுக்கு தகுந்த மாதிரி குறைத்துக்கொள்ள வேண்டும், இவ்வாறு சொல்லி விட்டார்கள்.
இந்த அனுபவத்தை ஏன் இங்கு பகிர்ந்து கொண்டேன் என்றால், வயதானவர்கள் தங்களை மனதிற்குள் இளைஞனாக நினைத்துக் கொள்ளலாம், ஆனால் தங்கள் நடவடிக்கைகளை வயதுக்கு ஏற்ற மாதிரி வைத்துக் கொண்டால் அவருக்கும் அவருடைய குடும்பத்திற்கும் நலமாக இருக்கும் என்பதற்காகத்தான்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)