மனித மனம் எப்போதும் இன்பத்தையே
விரும்புகிறது. துக்கத்தை வெறுக்கிறது.
இது இயற்கை. ஆனாலும் இன்பம் துன்பம் இரண்டமே கலந்துதான்
வாழ்க்கை அமைகின்றது. இதில் துன்பத்தை விலக்கி இன்பத்தை மட்டுமே
அனுபவிப்பது என்று எனது பதிவுலக வாழ்க்கையில் அனுபவ பூர்வமாக தெரிந்து கொண்டவைகளை உங்களோடு
பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
யாரோ
ஒருவன் சொன்னானாம். “என் உயிரே போவதாக இருந்தாலும் சரி, நான்
இந்த சுகத்தை பூரணமாக அனுபவிக்கப்போகிறேன்.”
நான் அப்படியெல்லாம் உயிரை விடுவதாக இல்லை. ஆனாலும் உயிரை விடாமலேயே இன்பமாக இருக்க பல வழிகள் இருக்கும்போது எதற்காக வீணாக உயிரை விடுவானேன்.
“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்கிற பரந்த மனப்பான்மையின் காரணமாக அந்த வழிகளை உங்களுக்கும் சொல்லித் தருகிறேன்.
1. வம்பு பேசுதல்.
இரண்டு
நண்பர்கள் பேசினால் அவர்கள் பேசுவது மூன்றாவது நண்பனைப்பற்றித்தான் என்று ஒரு பொன்மொழி உண்டு. காரணம் இந்த
மாதிரி வம்பு பேசுதில் உள்ள இன்பம் வேறு எதைப் பற்றி பேசுவதிலும் இல்லை. அந்த மூன்றாவது
நண்பன் உண்மையான நண்பனாக இருந்தால், மற்ற இருவரும்
அவனைப்பற்றி பேசி இன்புற்றார்கள் என்று தெரிந்தால் மிகவும் சந்தோஷப்படவேண்டும்.
இந்தக் காரணத்தினால்தான் நண்பர்கள் எங்காவது கூடுகிறார்கள் என்று தெரிந்தால் அங்கு தவறாது ஆஜர் ஆகி விடவேண்டும். இல்லையென்றால் அன்றைய தாளிப்புக்கு நீங்கள்தான் கருவேப்பிலை.
இந்தக் காரணத்தினால்தான் நண்பர்கள் எங்காவது கூடுகிறார்கள் என்று தெரிந்தால் அங்கு தவறாது ஆஜர் ஆகி விடவேண்டும். இல்லையென்றால் அன்றைய தாளிப்புக்கு நீங்கள்தான் கருவேப்பிலை.
2. அடுத்தவர் சண்டையை வேடிக்கை பார்த்தல்.
இதில்
நமக்கு ஒரு பாதிப்பும் இல்லை. வெறும் இன்பம்
மட்டுமே. அதிலும் நிஜ
உலகத்தில் நடப்பவைகளை விட பதிவுலகத்தில் நடக்கும் சண்டைகளே அதிக சுவாரஸ்யமும் பரபரப்பும் உள்ளவை. நமக்கு எந்த விதமான
ரிஸ்க்கும் கிடையாது. இதில் ஒரே
வருத்தம் என்னவென்றால் தற்சமயம் பழைய மாதிரி சண்டைகள் அடிக்கடி நடப்பதில்லை. முற்போக்கு பதிவர்கள் இந்த நிலையை மாற்ற முயற்சிகள் எடுத்தால் நன்றாக இருக்கும்.
3. டெம்ப்ளேட்/எமோடிகான் பின்னூட்டங்கள் போடுதல்.
ஆஹா, இதில் இருக்கும் த்ரில் + இன்பம் வேறு எதிலும் கிடையாது. இந்த கமென்ட்டுகளைப்
பார்க்கும் பதிவர்கள் உடனே கயிற்றை எடுத்துக்கொண்டு புளியமரத்தை தேடிக்கொண்டு ஓடவேண்டும்.
4. மொக்கைப் பதிவுகள் போடுதல்.
அந்தப்
பதிவுகளைப் படிக்கும் வாசகர் அதன் பிறகு பதிவுலகையை திரும்பிப் பார்க்கக் கூடாது. எவ்வளவுக் கெவ்வளவு
மொக்கை போடுகிறாரோ அந்த அளவு அவர் பிரபலமாவார். அதனால் வரக்கூடிய இன்பமே இன்பம். (அடுத்த பதிவர் சங்கமத்தில் அதிக மொக்கை போட்டவர்களுக்கு ஒரு விருது கொடுக்குமாறு அமைப்பாளர்களைக் கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் மொக்கைகள் அதிகரிக்கும்). அப்படி கொடுக்காவிட்டால் மொக்கைப் பதிவர்கள் சங்கமம் என்று தனியாக ஆரம்பிக்கப்படும் என்று எச்சரிக்கிறேன்.
5. பதிவர்கள் சந்திப்பு.
இவை
நடந்தால் எல்லோருக்கும் ஆனந்தமே. கலந்து கொண்டால்
நல்ல விருந்து சாப்பிடலாம். கலந்து கொண்டாலும் கொள்ளாவிட்டாலும்
நாலைந்து பதிவுகளுக்கு மேட்டர் தேத்தி விடலாம். என்ன ஒரு
இன்பமான நிகழ்வு. வம்பு பேசுவதற்கும்
நல்ல,
நல்ல ஆட்களின் அறிமுகம் கிடைக்கும். ஏன் ஈரோட்டிலும் நெல்லையிலும் மட்டும் இந்த சந்திப்பு நடக்கவேண்டும். மற்ற ஊர்க்காரர்களுக்கு மானம் ரோஷம் இல்லையா? மற்ற இடங்களிலும்
நடந்தால் அப்புறம் பதிவர்களுக்கு எழுத விஷயத் தட்டுப்பாடே இருக்காது. இதுதான் டாப்
இன்பமான சமாசாரம்.
6. ஓசியில் சினிமா பார்த்தல்.
பிரிவியூ
ஷோவிற்கு அழைப்பிதழ் கிடைத்து பஜ்ஜி காப்பியுடன் சினிமா பார்க்கும் இன்பமே இன்பம். என்ன ஒரே
பின்விளைவு என்றால் அதைப் பற்றி உயர்வாக ஒரு விமர்சனம் நம் மனச்சாட்சியை அடகு வைத்துவிட்டு எழுதி பதிவில் போடவேண்டும்.
2013
ம் வருடத்திற்கான இன்பமாக இருப்பது பற்றிய வழிகள் அடுத்த வருடப் பிறப்பு அன்று பதிவிடப்படும்.