வருமான வரியா? நான் சம்பாதிக்கிறேன், அதுக்கு எதுக்கு வரி என்று வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி நினைப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். சில பேர் அரசு போடும் சட்டங்களை வேத வாக்காக எடுத்துக்கொண்டு நடப்பார்கள். அவர்களுக்காகத்தான் இந்தப்பதிவு.
நீங்கள் சாதாரண சீனியர் சிடிசன் ஆக இருந்தால் 2 1/2 லட்சம் வரை வரி இல்லை. அதே நீங்கள் ஸ்பெஷல் சீனியர் சிடிசன் ஆக இருந்தால் 5 லட்சம் வரை வரி இல்லை. அதென்ன ஸ்பெஷல் சீனியர் சிடிசன் என்கிறீர்களா? நியாயமாகப் போய்ச் சேர்ந்திருக்க வேண்டியவர்கள். இன்னும் இருந்துகொண்டு பல பேர் உயிரை எடுத்துக்கொண்டு இருப்பவர்கள். அதாவது 80 வயதிற்கு மேற்பட்டவர்கள்.
சில சேமிப்புகள் செய்திருந்தால் 1.2 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். அதாவது 2 லட்சம் +1.2 லட்சம் = 3.2 லட்சம் வரைக்கும் வரி கட்டவேண்டாம்.
சீனியர் சிடிசன்களுக்கும் இவ்வாறே. இதற்கு மேல் வருமானம் வந்து நீங்கள் வருமான வரி கட்டவேண்டுமென்று நினைத்தால் ஒரு வருமான வரி ஆலோசகரை நாடவும். இதற்கு முன்னால் வரி கட்டி அனுபவம் இருந்தால் நீங்களே அதற்குண்டான நடவடிக்கைகளைத் தெரிந்திருப்பீர்கள்.
மாத சம்பளம் வாங்கும் (அரசு அல்லது அரசு சாரா) பெரிய நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு அந்தந்த அலுவலகம் மூலமாகவே வரி பிடித்தம் செய்து விடுவார்கள். சிறு வியாபாரம் அல்லது சிறிய தொழில் செய்பவர்கள் பெரும்பாலும் வரி கட்டவேண்டிய அளவிற்கு வருமானம் இல்லாதவர்களாக இருப்பார்கள். அப்படியே வரி கட்டவேண்டிய அளவு வருமானம் இருந்தாலும் இந்த விஷயத்தை அவ்வளவாகப் பொருட்படுத்துவதில்லை.
பெரிய வியாபார நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் நிச்சயம் வரி கட்டவேண்டி வரும். இதற்காக அவர்கள் நல்ல திறமைசாலிகளான ஆடிட்டர்களை வைத்திருப்பார்கள். இந்த ஆடிட்டர்களுடைய வேலையே என்னவென்றால் அவர்களுடைய வாடிக்கையாளர்களின் வரிப் பளுவை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைப்பதுதான். இதில் நியாய-அநியாயம் பார்க்கமாட்டார்கள். எப்படியோ வரி கட்டுவது குறைந்தால் சரி என்று ஆடிட்டரும் வாடிக்கையாளரும் இருந்து கொள்வார்கள்.
இப்படி வரி கட்டாமல் சேர்க்கும் வருமானம்தான் பிளாக் மணி என்று சொல்லப்படும் கறுப்புப் பணம். இப்படி சேர்ப்பவர்களைப் பற்றி தகவல் சேர்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்கள் இப்படிப்பட்ட விவரங்களை வருமான வரி இலாக்காவிற்குச் சொல்வதால்தான் பலர் வீடுகளில் வருமான வரிச்சோதனைகள் நடைபெறுகின்றன. இதில் கறுப்புப் பணம் எவ்வளவு கண்டுபிடிக்கப்படுகிறதோ அதில் 10 % கமிஷன் இந்த விபரம் கொடுத்த நபருக்குப் போய்ச்சேரும்.
வரி கட்டும் அளவிற்கு வருமானம் வந்தும், வரி கட்டாதவர்களை சட்டம் என்ன செய்யும்? இது ஒரு பெரிய கேள்வி. எனக்கு இதில் நேரடியான அனுபவம் இல்லை. இருந்தாலும் நான் கேள்விப்பட்ட வரையில் அப்படிப்பட்டவர்களில் இளிச்சவாயர்கள் சிலரைப் பிடித்து ஃபைன் போட்டு உபத்திரவம் செய்வார்கள். கெட்டிக்காரர்கள் மாட்டிக்கொள்ள மாட்டார்கள். நான் என்ன செய்கிறேன் என்று கேட்கிறீர்களா? இதுவரை மாட்டவில்லை.
இன்கம்டாக்ஸ் அதாவது வருமானவரி குறித்து மேற்கொண்டு சந்தேகம் இருந்தால் கன்சல்டேசன் பீஸ் வாங்கிக்கொண்டு அந்த சந்தேகங்களைத் தீர்த்து வைக்கிறேன்.
வருமான வரி கட்டாமல் எல்லோரும் நீண்ட ஆயுளுடன் வாழ்க.