நம் குழந்தைகள்தான், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று இருந்த காலம் போய்விட்டது. இடுப்பில் கயறு கட்டி கிணற்றுக்குள் இறக்கி பயங்காட்டின நாட்கள் இப்போது இல்லை.
இன்றைய பெற்றோர்களின் பொறுப்பு மிக சிக்கலாக இருக்கிறது. குழந்தைகளுக்கு எது நல்லது, எதை எப்படி சொல்லிக்கொடுப்பது என்பது கஷ்டமான சமாசாரமாக இருக்கிறது. குழந்தை வளர்ப்புக்கென்று ஸ்பெஷல் கிளாஸ்கள் நடக்கின்றன என்று கேள்விப்படுகிறேன். உண்மையில் அவை அவசியம் என்றே தோன்றுகிறது.
இதோ இந்தப் பதிவைப் பாருங்கள். குழந்தைகளின் ஆதங்கத்தை நன்கு படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
குழந்தைகளிடம் அன்பு காட்டவேண்டியது அவசியம். ஆனால் அதீத அன்பு கெடுதல் விளைவிக்கும் என்பதையும் உணரவேண்டியது அவசியம். கண்டிப்பு தேவைப்படும் சமயங்களில் கண்டிப்பாக இருப்பது குழந்தைகளுக்கு நல்லது. ஆனால் எப்பொழுது அன்பு காட்டவேண்டும், எப்பொழுது கண்டிப்பாக இருக்கவேண்டும் என்பதை அனுபவத்தின் மூலமாகத்தான் கற்றுக்கொள்ள முடியும்.
குடும்பத்தின் பொருளாதார நிலையைக் குழந்தைகள் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் குடும்ப நிலைக்கு மீறி ஆசைப்படாமல் இருப்பார்கள். இளம் வயதில் கல்வி கற்பதுதான் ஒருவனின் நோக்கமாக இருக்கவேண்டும். உபரியாக ஏதாவது விளையாட்டு அல்லது நுண்கலையில் பரிச்சயம் இருந்தால் போதும். அதற்காக குழந்தைகளை பல்கலை நிபுணனாக வளர்க்கிறேன் என்று விரட்டுவது கூடாது.
தொலைக்காட்சிப் பெட்டியும் கணிணியும் இல்லாத வீடே இல்லை என்று ஆகிப்போனது. இந்த இரண்டும் பொது அறிவை வளர்க்கக் கூடியவைதான். ஆனால் அதற்கும் ஒரு நியதி இருக்கவேண்டும். வீட்டிலுள்ள பெரியவர்கள் எப்போதும் டி.வி. பார்த்துக்கொண்டு குழந்தைகளுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது சாத்தியமில்லை.
குழந்தைகளின் நடவடிக்கைகளின் மேல் பெற்றோர்களின் கண்காணிப்பு எப்போதும் அவசியம். அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை பெற்றோர்கள்தான் கொடுக்கவேண்டும். அவர்களுக்குத் தேவையான வசதிகள் அனைத்தையும் செய்து கொடுத்திருக்கிறோமே என்று திருப்திப் பட்டுக்கொண்டு அவர்களை மனம் போல் நடந்து கொள்ள அனுமதிப்பது தவறு.
நம் குழந்தைகளின் எதிர்காலத்தை நல்ல முறையில் உருவாக்கிக் கொடுப்பது நம் பொறுப்பு. அதே சமயம் நம் அனைத்து செல்வங்களையும் அவர்களுக்காகவே தியாகம் செய்து விட்டு நம்முடைய வயதான காலத்தில் அவர்களை எதிர்பார்த்து நிற்கும் நிலைக்கு ஆளாகாதீர்கள்.