காலங்கள் மாறிவிட்டன. உள்ளன்போடு ஒருவரை நேசிக்கும் பண்பு மறைந்துவிட்டது. உறவினர்களை, கல்யாணம் போன்ற விசேஷங்களில் பார்த்து நலம் விசாரிப்பதுடன் இன்றைய உறவுகள் முடிந்து விடுகின்றன.
லீவு வந்தால் சிறுவர் சிறுமியர் உறவினர் வீடுகளுக்குச் செல்வது என்ற வழக்கம் ஏறக்குறைய மறைந்துவிட்டது.
காரணங்கள் ஆயிரம் சொல்லமுடியும். ஆனால் அடிப்படைக் காரணம் ஒன்றுதான். அது மனிதர்களின் மனம் பணம் சம்பாதிப்பதிலும், தங்கள் வசதிகளை உயர்த்திக்கொள்வதிலும் ஈடுபடுகிறதே தவிர, மனித உறவுகளைத் தேடுவதில் இல்லை.
ஆகவே இன்று நாம் ஒரு ஊருக்கு ஏதாவது வேலையாகச் செல்லுகிறோம் என்றால் அந்த ஊரில் நம் உறவினரோ, நண்பரோ இருந்தால் அவர் வீட்டில் தங்கலாம் என்று எண்ணக்கூடாது. அவர்களுக்கு ஆயிரத்தெட்டு கஷ்டங்கள். போகிறவர்களுக்கும் பல எதிர்பார்ப்புகள். இதனால் நடைமுறையில் பல சிக்கல்கள் தோன்றுகின்றன.
எனக்குத் தெரிந்த இரண்டு பேர் தங்கள் மகளைப் பார்க்கச்சென்றாலும் கூட, அங்குள்ள ஓட்டலில் தங்கித்தான் மகளைப் பார்க்கப் போவார்கள். நான் கூட இதைத் தவறாகப் புரிந்ததுண்டு. ஆனால் வயதான பிறகு, இன்று சிந்தித்தால் அதுதான் சௌகரியம் என்று தோன்றுகிறது.
காலத்தின் மாறுதல்களுக்கு நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.