புதன், 2 மே, 2012

பெற்றோர்களே ஜாக்கிரதை


10 ம் வகுப்பு 12 ம் வகுப்பு பரீட்சைகள் முடிந்து, மாணவர்கள் லீவை அனுபவித்துக் கொண்டிருக்கும் காலம் இது. ஆனால் பெற்றோர்களின் வயிற்றில் ஒரு இனம் தெரியாத வேதனை அல்லது கவலை இருந்து கொண்டிருக்கும்.

காரணம், தங்கள் வாரிசுகளை இனி என்ன படிப்பில் சேர்க்கலாம் என்பதுதான். இன்றுள்ள கல்வி வாய்ப்புகள் இன்றைய பெற்றோர்கள் படிக்கும்போது இல்லை. அதனால் அவர்களுக்கு அதிக குழப்பம் ஏற்படவில்லை. ஆனால் இன்றுள்ள படிப்புகளை முழுமையாக யாரும் அறிந்திருப்பது கடினம். இன்றைய இளைஞர்கள் எதை விரும்புகிறார்கள்? அதனால் அவர்கள் வாழ்க்கை நன்றாக அமையுமா? என்கிற கேள்விகள் ஒவ்வொரு தகப்பனையும் ஆட்டிக்கொண்டு இருக்கும்.

பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதியிருப்பவர்களுக்கு கவலை கொஞ்சம் குறைவு. மார்க்கைப் பொருத்து ஏதாவதொரு கோர்சில் சேர்த்து விட்டால் இரண்டு வருடத்திற்கு கவலை இல்லை என்று பொதுவாக எல்லோரும் நினைப்பார்கள்.ஆனால் பொறுப்புள்ள பெற்றோர்கள் அப்படி இருக்கக் கூடாது. பையனோ, பெண்ணோ, அவர்களின் எதிர்காலத்தைப் பற்றிய முழுத் திட்டமும் இப்போதே தயார் பண்ணிக்கொள்ளவேண்டும்.

வாரிசுகளின் ஆசாபாசங்கள், குடும்ப பொருளாதாரம், வாரிசுகளின் திறமை இவைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு இந்தத் திட்டம் தயாரிக்கப்படவேண்டும். திட்டம் நடைமுறைக்குச் சாத்தியமானதாக இருக்கவேண்டும். எதிர்பார்த்த மார்க்குகள் கிடைக்காவிடில் மாற்றுத்திட்டம் என்ன என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

இதில் சம்பந்தப்பட்ட வாரிசுகளின் முழு ஈடுபாடு அவசியம். அவர்கள் தங்கள் பெற்றோர்களின் நிலையைப் புரிந்து கொண்டு அதற்குத் தகுந்த மாதிரி தங்கள் எதிர்காலப் படிப்பைப் பற்றிய கனவுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

பெற்றோர்கள் கவனக் குறைவாக இருந்தால் பல அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புகள் உண்டு. என் உறவினர் பையன் தான் விரும்பும் படிப்பில் பணம் கொடுத்துச் சேர்த்தவில்லை என்பதால் தன் உயிரை மாய்த்துக் கொண்டான். அப்படிப்பட்ட சூழ்நிலை உருவாகாத மாதிரி பெற்றோர்கள் மிக கவனமாக இருக்கவேண்டும்.