செவ்வாய், 8 மே, 2012

புதிதாக கல்யாணம் செய்பவர்களுக்கு


கல்யாணம் செய்யப்போகும் ஆண்களுக்கு மட்டும். பெண்களுக்கான குறிப்புகளை தாய்க்குலப் பதிவர்களைப் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கல்யாணம் செய்பவர்கள் இரு வகைப்படுவர். முதல் வகை தாய் தகப்பன் பேச்சைக்கேட்டு நடப்பவர்கள். இரண்டாம் வகை தாங்களே தங்களுக்குத் தலைவன் என்ற எண்ணம் கொண்டவர்கள். இந்தப் பதிவிலுள்ளவைகள் முதல் வகைக்கு மட்டும். இரண்டாம் வகைக்கு எந்த ஆலோசனைகளும் தேவையில்லை. அவர்களே ராஜா, அவர்களே மந்திரி.

அம்மாவின் முந்தானையை இன்னும் விடாத ஆண்மக்கள் முதலில் அதை விடவும். இரண்டாவது நீங்கள் ஒரு ஆண்மகன் என்பதை மறக்காமலிருக்கவேண்டும்.

உங்களுக்குத் துணை தேடும்போது உங்கள் குடும்பத்தால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித எதிர்ப்பார்ப்பு இருக்கும். உங்கள் அம்மாவிற்கு அவர்களுக்குத் துணையாக, குடும்பப் பொறுப்புகளை (அதாவது வேலைகளை) ஏற்றுக்கொள்ளும் ஒரு மருமகள் தேவை. உங்கள் தந்தைக்கு தன் மகனை ஒரு பொறுப்புள்ளவனாக மாற்றக்கூடியவளாக யாராக இருந்தாலும் சரி, அது போதும். உங்களுக்கு ஒரு சினிமா நடிகை அளவில் அழகுள்ள ஒருத்தி வேண்டும்.

இந்த எதிர்பார்ப்புகளில் நடுத்தர மக்களிடையே நடப்பது என்னவென்றால், கொஞ்சம் வசதியுள்ள பெண்ணைப்பெற்றவன் நமக்கு கைக்கடக்கமாக ஒரு மாப்பிள்ளை வேண்டுமென்று புரோக்கரிடம் சொல்லி வைத்திருப்பான். அந்த புரோக்கர் வந்து உங்க அம்மாவைச் சரிக்கட்டி கல்யாணத்தை முடிவு செய்து விடுவான். நீங்கள் பொறியில் அகப்பட்ட எலிமாதிரி சிக்கிக் கொள்வீர்கள். இதற்கு மாற்றே கிடையாது.

கல்யாணம் முடிந்து மறுவீடு சம்பிதாயங்கள் முடிகிற வரை எல்லாம் இன்ப மயம்தான். அதற்குப் பிறகுதான் விதி வேலை செய்யும். வளைகாப்பு, தலைப்பிரசவம் முடிந்து தாயையும் குழந்தையையும் வீட்டுக்கு அழைத்த பின்தான் இருக்கிறது உங்கள் வேதனையெல்லாம். ஏன் கல்யாணம் செய்து கொண்டோம் என்று உங்களை வருந்த வைக்கும் அனுபவங்கள் நிறைய ஏற்படும்.

நீங்கள் தெளிவான சிந்தனையுடன் செயல்பட்டால் குடும்பம் சீராக ஓடும். இல்லாவிட்டால் சமீப காலங்களில் கோவில் திருவிழாக்களில் தேர்கள் சாய்கின்ற மாதிரி உங்கள் வாழ்க்கையும் சாய்ந்துவிடும்.

ஆகவே கல்யாணம் செய்யப்போகும் இளைஞர்களே, இவைகளெல்லாவற்றையும் யோசித்து முடிவு செய்யுங்கள்.