திங்கள், 14 மே, 2012

நீங்கள்தான் குடும்பத் தலைவரா?


புதுசா ஒருவர் இந்திய நாட்டின் ஜனாதிபதி ஆகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்குப் பதவிப் பிரமாணம் எடுத்தவுடனே, அவரைக் கொண்டு போய் ஜனாதிபதி மாளிகையில் குடி வைத்து விடுவார்கள். அந்த மாளிகையில் எத்தனை அறைகள் இருக்கின்றன என்று இதுவரை இருந்த ஒரு ஜனாதிபதிக்கும் தெரிந்திருக்காது என்று நம்புகிறேன். அந்த மாளிகையைக் கட்டின இஞ்சினீயருக்குத் தெரிந்திருக்கலாம்.

அந்த புது ஜனாதிபதிக்கு தான்தான் இந்த பரந்த நாட்டின் ஜனாதிபதி என்று உணருவதற்கே சில வாரங்கள் ஆகும். அது மாதிரி நம் நாட்டில் வாழ்க்கை நடத்தும் பலருக்கு, தான்தான் குடும்பத்தலைவர் என்பது மறந்து போயிருக்கும். அவர்களுக்காகத்தான் இந்தப் பதிவு.

நீங்கள் உங்களை குடும்பத் தலைவன் என்று நினைக்கிறீர்களா? அதை உறுதி செய்ய சில கேள்விகள்.

1. ரேஷன் கார்டில் குடும்பத் தலைவர் என்கிற இடத்தில் உங்கள் பெயர் இருக்கிறதா?

2. குடும்பத்தின் வருமானம் உங்கள் மூலமாக மட்டுமே வருகிறதா?

3. சம்பளம் வாங்கியதும் சம்பளக் கவரை அப்படியே மனைவி கையில் கொடுக்கிறீர்களா?

4. உங்களுடைய அன்றாட செல்வுகளுக்கு மனைவியிடம் வாங்கிக் கொள்கிறீர்களா? அதற்கு மாலையில் கணக்கு சொல்கிறீர்களா?

5. தீபாவளிக்கு உங்களுக்கு புது வேஷ்டி சட்டை உங்கள் மனைவி வாங்கிக் கொடுக்கிறார்களா?

6. பள்ளி சுற்றுலா போக உங்கள் குழந்தைகள் அம்மாவிடம் பர்மிஷனும் பணமும் வாங்குகிறார்களா?

7. தினம் சாப்பிடும்போது உங்களுக்கு அர்ச்சனை நடக்கிறதா?

8. உங்கள் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும்போது சமையலறையில் பாத்திரங்கள் உருளுகின்றனவா?

9. காலையில் ஆறிப்போன காப்பியைக் குடிக்கிறீர்களா?

10. வீட்டில் பல முக்கியமான காரியங்கள் உங்களுக்குத் தெரியாமல் நடக்கின்றனவா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் "ஆம்" என்று நீங்கள் பதில் சொன்னால் கண்டிப்பாக நீங்கள்தான் குடும்பத் தலைவர். எந்த சந்தேகமும் வேண்டாம்.