எது முதலில் தோன்றியது?
இலக்கணமா அல்லது இலக்கியமா? இது பட்டி மன்ற விவாதத்திற்கு மிகவும் ஏற்ற ஒரு பொருள்.
நாள் கணக்கில் விவாதிக்கலாம். இந்தப் பொருள் பற்றி விவாதிக்கும் முன் நாம் ஒன்றைத்
தெளிவு படுத்திக்கொண்டால் விவாதமே தேவையிருக்காது.
எது முதலில் தோன்றியது?
மொழியா அல்லது மொழியின் இலக்கணமா? இதில் யாருக்கும் சந்தேகம் இருக்க வாய்ப்பில்லை.
மொழிதான் முதலில் தோன்றியிருக்கவேண்டும். கற்காலத்தில் மனிதன் சைகளினால்தான் பேசினான்
என்று சரித்திரங்கள் சொல்லுகின்றன. அதன்பிறகுதான் அவன் ஒலிகளினால் பேச ஆரம்பித்திருக்கவேண்டும்.
ஒவ்வொரு பகுதி
மக்களும் தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றம் செய்ய தனித்தனியாக மொழிகள் உருவாகின. அவை
வலுப்பெற்று அவைகளுக்கு வரிவடிவம் ஏற்பட்ட பின் அந்தந்த மொழிகளில் இலக்கியங்கள் உருவாகின.
இந்நிலையில் அம்மொழிக்கு இலக்கணம் என்று ஒன்று இருந்திருக்க முடியாது. ஓரளவு இலக்கியங்கள்
உருவான பின்புதான் அந்த மொழிக்கு இலக்கணம் உருவாகியிருக்கும்.
ஆகவே இலக்கியம்தான்
முதல், இலக்கணம் இரண்டாவது என்பது தெளிவாகின்றது. இந்த அடிப்படையில்தான் ஒரு சமுதாயத்தின்
நடைமுறைகளும் உருவாகின்றன. மனிதன் கூட்டாக வாழவேண்டியதின் அவசியத்தை உணர்ந்தபின் சமுதாயங்கள்
ஏற்பட்டன. இந்த சமுதாயங்கள் கட்டுக்கோப்பாக வாழ சிலபல விதிமுறைகள் தேவைப்பட்டன. அந்த
சமுதாயத்தின் மூத்த அறிஞர்கள் கூடிப்பேசி இந்த வரைமுறைகளை உருவாக்கியிருப்பார்கள்.
நல்ல விதிமுறைகள்
உள்ள சமுதாயங்களே நாகரிகம் பெற்றவை என்று போற்றப்படுகின்றன. விதிமுறைகள் மட்டும் இருந்தால்
போதுமானதல்ல. அவைகளை நடைமுறையில் அந்த சமுதாயத்தினர் அனைவரும் கடைப்பிடிக்கவேண்டும்.
அப்போதுதான் அந்நாகரிகம் முழுமை அடைகின்றது. அப்டிப்பட்ட நாகரிகமடைந்த சமுதாயங்கள்
உள்ள நாடுகள்தாம் பொருளாதாரத்திலும் முன்னேறுகின்றன.
இத்தகைய விதிகள்
இலக்கியத்திற்கும் சமுதாயத்திற்கும் பொதுவானவை, அவைகள் மீறப்படும்போதுதான் சிக்கல்கள்
உருவாகின்றன. மொழிகளும் சமுதாயங்களும் அழிவது இதனால்தான். தனிமனித ஒழுக்கம்தான் சமுதாய
ஒழுக்கமாக அமைகிறது. தனிமனிதனின் மொழிப் புலமைதான் அந்த மொழி வளர்வதற்கு ஆதாரமாக இருக்கின்றது.
இதை நாம் புரிந்து நடக்கவேண்டும்.