வியாழன், 26 ஜூலை, 2012

விளையாட்டுகளும் போட்டிகளும்.



மனிதன் ஒரு குழு மிருகம். அதாவது அவன் குழுவாக இருக்க விரும்புபவன். யாருடனும் சேராமல் தனியாக இருப்பவனை எல்லோரும் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பார்கள். (என்ன சந்தேகம், மனநோய் பீடித்தவன் என்ற சந்தேகம்தான்).

குழுவாக சேர்ந்து என்ன செய்யமுடியும்? அதற்காக கண்டுபிடிக்கப்பட்டதுதான் விளையாட்டுகள். பழங்காலத்திலிருந்தே பல வகையான விளையாட்டுகள் விளையாடப்பட்டு இருக்கின்றன. 

விளையாட்டுகளுடன் கூடவே அவற்றை வேடிக்கை பார்ப்பதும் ஒரு குழு செயலாகவே இருந்து வந்திருக்கிறது. ஆகவே விளையாட்டு என்றாலே விளையாடுபவர்கள் சிலரும் அதை வேடிக்கை பார்ப்பவர் பலரும் சேர்ந்த செயல்பாடாகவே இருந்து வந்திருக்கிறது.

விளையாட்டுகள் அந்தந்த நாடுகளின் கலாசாரம், கால நிலை, வாழ்க்கை முறைகள் ஆகியவைகளை அனுசரித்தே உருவாகியுள்ளன. தமிழ்நாட்டில் மஞ்சு விரட்டு என்று சொல்லப்படும் ஜல்லிக்கட்டு தமிழர்களின் வாழ்க்கை முறையான விவசாயத்தை ஒட்டி அமைந்த விளையாட்டாகும். காளைகள் விவசாயத்திற்கு இன்றியமையாதவை. அவைகளைக் கட்டுப்படுத்தி வேலை வாங்குவது அவசியமான ஒன்று. அதையே ஒரு வீர விளையாட்டாக அமைத்துக் கொண்டார்கள்.

பல்லாங்குழி, பாண்டி ஆகிய விளையாட்டுகள் சிறுமிகளுக்கு உகந்ததாக அமைந்தன. இந்த விளையாட்டுகளுக்கு எந்த செலவும் இல்லை. எங்கு வேண்டுமானாலும் விளையாடலாம். குழுவாகப் பொழுது போக்குவதற்கு வசதியாக இருந்தன.

சாதாரணமாக விளையாடக்கூடிய விளையாட்டுகள் கால ஓட்டத்தில் வளர்ச்சி பெற்று பல சட்ட திட்டங்களுடன் வளர்ச்சியடைந்தன. கபடி என்று சொல்லப்படும் விளையாட்டு கிராமத்தில் பத்து பேர் கூடினால் விளையாடக்கூடிய விளையாட்டாக இருந்த காலம் மாறி இன்று அது ஒரு தேசிய விளையாட்டாக பல சட்டதிட்டங்களுடன் மாறி விட்டது.

பொதுவாக எல்லா விளையாட்டுகளும் உடலுக்கு ஒரு பயிற்சியாகவே இருந்து வந்திருக்கின்றன. இங்கிலாந்து நாடு ஒரு குளிர்ப் பிரதேசம். வெயிலைக் காண்பதே அபூர்வம். அந்த நாட்டில் வெய்யில் வரும்போது குளிர் காய்வதற்காக ஏற்பட்ட விளையாட்டு கிரிக்கெட். அதுவும் ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக விளையாடுவார்கள். விளையாடுபவர்களுக்கும் வேடிக்கை பார்ப்பவர்களுக்கும் வெய்யிலின் பயன் கிடைத்து உடலுக்கு ஆரோக்கியம் கிடைத்தது. இதே மாதிரிதான் கோல்ப்ஃ என்ற விளையாட்டும். ஒரு பந்தை நாற் முழுவதும் தட்டிக்கொண்டே போவது.

குளிர் பிரதேசத்துக்காரன்  வெயில் காய்வதற்காக ஏற்படுத்திய விளையாட்டுகளை வெயில் பிரதேசங்களில் எதற்காக கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது எனக்குப் புரியாத புதிர்களில் ஒன்று. தவிர, நாள் கணக்கில் வெய்யிலில் நின்று கொண்டிருப்பது உஷ்ணப் பிரதேசங்களில் முடியாததும் தேவையில்லாததும் ஆகும்.

நம் நாட்டுக்கு உகந்தது ஒரு மணி நேரம் விளையாடக்கூடிய கால் பந்தும் ஹாக்கி விளையாட்டும்தான். ஒரு காலத்தில் உலக அரங்கில் நெம்பர் ஒன்றாக இருந்த நம் ஹாக்கி டீம் இப்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறது. காரணம் நம் அரசு கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் ஆதரவை கால் பந்துக்கும் ஹாக்கிக்கும் கொடுக்காததுதான்.

விளையாட்டு வெறும் பொழுது போக்காக மட்டும் இல்லாமல் அதில் ஜெயிப்பவர் கெட்டிக்காரர் என்ற எண்ணம் எப்போதும் உண்டு. இதனால் விளையாட்டு என்பது குழுவாகப் போட்டி போடுவதுடன் நில்லாமல் யார் ஜெயிக்கிறார்களோ அவர்களே கெட்டிக்காரர்கள் என்று பேசப்பட்டார்கள். நாளாக நாளாக இந்த விளையாட்டுகளில் யார் ஜெயிப்பார்கள் என்று பணையம் கட்டுவதும் தொடங்கியது.

கிரிக்கெட்டில் இது பெரும் பூதமாக வளர்ச்சி பெற்றிருக்கிறது என்று சொல்கிறார்கள். எல்லா விளையாட்டுகளிலும் இந்த சூதாட்டம் பரவி இன்று சூதாட்டம் இல்லாத விளையாட்டே இல்லை என்று ஆகிப்போனது. 

மனித நாகரிக வளர்ச்சியின் அடையாளமாகக் கருதப்பட்ட விளையாட்டுகள் இவ்வாறு சூதாட்டமாக மாறிப்போனது பெரிய கலாச்சார சீர்கேடு. இந்த நிலை மாறுமா என்ற கேள்விக்கு காலம்தான் பதிலளிக்கவேண்டும்.