வியாழன், 2 ஆகஸ்ட், 2012

இந்தியாவில் விவசாயத்தின் எதிர்காலம்



இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண் விவசாயி ரெபெக்கா தனது பண்ணையில் செய்த மாறங்களினால் அடுத்த தலைமுறை விவசாயம் எப்படி இருக்க வேண்டும்  என்பதன் எடுத்துக் காட்டு ஆகி இருக்கிறார்.

உலகின் பொருளாதாரமே எண்ணெய் எரிபொருள் சார்ந்து இருப்பதால் உலகளாவிய  எரிபொருள் விலை மாற்றங்கள் அனைவரையும் பாதிக்கிறது.எரிபொருள் தேவை குறைந்த அள்வே பயன்படுத்தும் முறையை பயன்படுத்துவதில் ரெபெக்கா வெற்றி பெற்றுள்ளார்.

"இயற்கை நம் தேவைகளுக்கு   நிச்சயம் தீர்வு கொடுக்கும் ஆனால் ஆசைகளுக்கு அல்ல"

விவசாய(நில)ம் என்பது எதிர்காலத்தில் மிக அதிக மதிப்பு பெறும்.ஆகவே நிலம் உள்ளவர்கள் விற வேண்டாம்.முடிந்தவரை முறையாக விவசாயம் கற்று பயனுறுமாறு வேண்டுகிறேன்.


விவசாயப் பதிவுகளுக்கு வாசகர்களிடையே போதுமான வரவேற்பு கிடைப்பதில்லை என்பது என் அனுபவம். இருந்தாலும் சில பதிவுலக நண்பர்கள் என்னுடைய அனுபவத்தை ஏன் பதிவிடக்கூடாது என்று பின்னூட்டமிட்டதால் இந்தப் பதிவை எழுதுகிறேன்.

மேலே கொடுத்துள்ள ஒரு பின்னூட்டத்தின் வாசகத்தைக் கொடுத்திருக்கிறேன். இதில் இயற்கை விவசாயத்தின் பெருமையை விளக்கியுள்ளார்கள்.

நான் இயற்கை விவசாயத்திற்கு எதிரி அல்ல. ஆனால் நடைமுறைக்கு ஒத்து வராத ஒன்று என்பது என் கருத்து. இதைப் பற்றி பலர் விவாதத்திற்கு  தயாராக இருப்பார்கள். பதிவுலகில் அந்த விவாதத்தினால் யாருக்கும் பயனில்லை.  நிஜ உலகில் அத்தகைய விவாத மேடைகள் அமையுமானால் அவசியம் பங்கேற்பேன்.

இன்றைய விவசாயத்தின் நிலை பற்றி சில முக்கியமான பிரச்சினைகளை மட்டும் கூறுகிறேன்.

1. விவசாயப் பொருள்களின் சந்தை விலைக்கும் விவசாயிக்கு கிடைக்கும் விலைக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது. சாதாரண தேங்காய் கடையில் 15 ரூபாய் விற்கிறது. தென்னந்தோப்பில் நான்கு ரூபாய்க்கு மேல் கேட்பாரில்லை. இளனி ரோட்டில் 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தோப்புக்காரனுக்கு 5 ரூபாய்க்கு மேல் கிடைப்பதில்லை. இதே போல்தான் அனைத்து விவசாயப் பொருள்களும் விற்கின்றன.

உழவர் சந்தை என்று ஒன்று இருக்கிறது. இங்கு வியாபாரிகள்தான் பெரும் அளவில் விவசாயிகள் என்ற போர்வையில் கடை போட்டு இருக்கிறார்கள். அரை ஏக்கர் பொட்டல் காடு இருந்தால் அவனுக்கு விவசாயி என்ற அடையாள அட்டை கிடைத்து விடும். நிஜ விவசாயி அவனுடன் போட்டி போட முடியாது.

இந்த நிலையை மாறினால் ஒழிய விவசாயம் வளராது.

2. விவசாயத்திற்கு நிலமும் நீரும்தான் பிரதானம். நிலம் இருக்கிறது. நீரைத்தான் காணவில்லை. பருவ மழைகள் பொய்த்துப்போகின்றன. அதனால் நிலத்தடி நீர் அருகிப் போய் விடுகிறது. ஆதே காரணத்தினால் ஆற்றுப் பாசனமும் குருகிப் போகிறது. என்னதான் விவசாயி கஷ்டப்பட்டாலும் அவனால் தன் குடும்பத்தையே காப்பாற்ற முடிவதில்லை.

3.விவசாயத்திற்கு தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. இந்த நிலைக்கு பல காரணங்கள் உண்டு. இங்கு அவற்றை எல்லாம் ஆராய்ந்து தீர்வு காண முடியாது. இந்தப் பிரச்சினைக்கு அரசுதான் வழிவகை செய்யவேண்டும்.

4.விவசாயிகளுக்கு ஒரு ஆரோக்கியமான கூட்டு அமைப்பு கிடையாது. அவர்களுக்குள் ஒற்றுமை கிடையாது. அதனால் அவர்கள் அரசிடம் இருந்து எந்த சலுகையையும் பெற முடிவதில்லை. விவசாயத்திற்கு வேண்டிய எந்த கொள்கையையும் முன் வைக்க முடிவதில்லை.

5. விவசாயம் வளர ஆக்கபூர்வமான கொள்கைகள் எதையும் அரசினால் சரியாக நடைமுறைப் படுத்த முடிவதில்லை. அதிகாரிகள் சரியில்லை. லஞ்சம் தலை விரித்தாடுகிறது. நன்மைகள் விவசாயிக்கு போய்ச் சேருவதில்லை.

அரசு எப்போது விழித்தெழுந்து விவசாயத்தைக் கரை சேர்க்கும் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

இன்னொரு நண்பரும் விவசாயம் சம்பந்தப்பட்ட ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதையும் படியுங்கள்.