திங்கள், 13 ஆகஸ்ட், 2012

ஆசிரியராக வேலை பார்த்தபோது நான் செய்த கொடுமைகள்


தலைப்பு சரியாக அமையவில்லை. பரவாயில்லை. பதிவைப் படித்தபின் உங்களுக்குப் பிடித்த தலைப்பை வைத்துக் கொள்ளுங்கள். தலைப்பில் நான் சொல்ல விரும்பியது என்னவென்றால் நான் ஆசிரியனாக இருந்தபோது என் கொள்கைகள் என்னென்ன என்பதுதான். தலைப்பு புரிஞ்சு போச்சா, செய்திக்குப் போவோம்.

ஒரு பத்து வருடம் இளநிலை விவசாயப் படிப்பு மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தேன். ஐந்து வருடம் செய்முறை விளக்க பரிசோதனைக் கூடத்திலும் ஐந்து வருடம் வகுப்புப் பாடம் நடத்துபவனாகவும் பணி புரிந்திருக்கிறேன். பிறகு பதவி உயர்வுகள் காரணமாக வேறு பதவிகளுக்கு மாற்றப்பட்டேன். இருந்தாலும் அவ்வப்போது முதுகலை மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தேன்.

இளங்கலை ஆசிரியனாக இருந்தபோது கொஞ்சம் கொடுமைக் காரனாகத்தான் இருந்தேன். மாணவன் கல்லூரிக்கு வருவது பாடம் கற்றுக் கொள்ள மட்டும் அல்ல. வாழ்க்கையின் ஒழுக்கங்களையும் அவன் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதில் மிகவும் நம்பிக்கை உள்ளவன் நான்.

நான் சொல்லிக்கொடுத்தது இயல்பியல் பாடங்கள் அதாவது கெமிஸ்ட்ரி. விவசாயப் பட்டப்படிப்பில் முதல் வருட மாணவர்களுக்கு நான் இயல்பியல் பரிசோதனை வகுப்புகள் நடத்திக்கொண்டிருந்தேன. பரிசோதனைச் சாலைக்கு வரும் மாணவர்கள் காக்கி அரைக்கால் டவுசரும், அரைக்கை சட்டையும் போட்டுக்கொண்டு வருவார்கள். ஏறக்குறைய அனைத்து செயல்முறை வகுப்புகளுக்கும் இந்த யூனிபார்ம்தான்.

இதில் மேல் சட்டையில் எல்லா பட்டன்களையும் போட்டிருக்கவேண்டும். இல்லாவிட்டால் வகுப்பில் அனுமதி இல்லை. (டிராயரில் ஜிப் போடாவிட்டால் பரவாயில்லையா என்று கேட்கக்கூடாது. ஆப்சன்ட் போட்டுவிடுவேன், ஜாக்கிரதை.) மாணவர்கள் வகுப்புக்குள் வரும்போது எல்லா பட்டனையும் போட்டுக் கொண்டுதான் வருவார்கள். இன்றும் கூட என் பழைய மாணவர்கள் என்னைப் பார்த்தால் அவர்கள் அறியாமலேயே கை சட்டைப் பட்டனுக்குப் போகும்.

வருகைப் பதிவேடு பெயர்கள் படித்து முடிப்பதற்குள் வந்தால்தான் வகுப்புக்குள் அனுமதிக்கப்படுவார்கள். நான் பெயர்கள் வாசித்து முடிந்தவுடன் பரிசோதனைச் சாலையின் கதவு மூடப்படும். அதன் பிறகு வருபவர்கள் திரும்பித்தான் செல்லவேண்டும்.

பரிசோதனைச் சாலையில் பரிசோதனைகள் செய்யும்போது நான் சொல்லி, செய்து காட்டியவாறுதான் செய்யவேண்டும். வேறு மாதிரி செய்தால் அந்த மாணவன் வெளியேற்றப்படுவான். காரணம், வேறு மாதிரி செய்யும்போது தவறுகள் ஏற்படும். அதையெல்லாம் அவன் புரிந்து கொள்ளும் வயதில்லை. ஆகவே சர்வாதிகாரம்தான்.

சரி, இதற்கெல்லாம் மாணவர்கள் ஒன்றும் சொல்ல மாட்டார்களா, கொடி பிடிக்க மாட்டார்களா என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. பிடித்தார்களே! அதைப் பற்றி அடுத்த பதிவில் சொல்லுகிறேன்.