இயற்கை விவசாயத்தைப் பற்றிய ஒரு பெரும் விழிப்புணர்வு இன்று நம் தமிழ்நாட்டில் தோன்றியிருக்கிறது. நல்ல மாற்றம். அதை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேசத்துரோகிகள் ஆவார்கள். நான் தேசத்துரோகியாக விரும்பவில்லை. முன்பு இருந்தேன். இப்போது மாறி விட்டேன்
தேசத் துரோகிகளுக்கு அவர்கள் முக்தியடைந்த பிறகு நரகப் பிராப்திதான் கிடைக்கும். அங்கு அவர்களை கொதிக்கும் எண்ணைக் கொப்பறைகளில் குளிப்பாட்டிய பின் செயற்கை விவசாயத்தில், செயற்கை உரங்களும், செயற்கைப் பூச்சி மருந்துகளும் அடித்து வளர்க்கப்பட்ட பயிர்களின் மகசூல்களிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவுகளே கொடுக்கப்படும்.
இயற்கை விவசாயத்தை ஆதரித்தவர்களை எல்லாம், நேராக சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களைக் கொண்டு தயாரித்த உணவுகள் வழங்கப்படுவார்கள்.
நரகத்தில் இருக்கும் முன்னாள் விவசாய மந்திரி திரு.சி. சுப்பிரமணியம் அவர்களிடமிருந்து நேரடியாகப் பெறப்பட்ட தகவல் இது. அவர்தான் செயற்கை விவசாயத்தை இந்தியாவில் புகுத்தியவர். அவருடைய சகா ஒருவர் இன்னும் இருக்கிறார். அவரும் சுப்பிரமணியம் போன இடத்திற்குத்தான் போவார் என்பது உறுதி.
இயற்கை விவசாயத்தின் முக்கிய அம்சம் "இயற்கை உரங்களை மட்டும்" உபயோகப்படுத்துவது. மற்ற அம்சங்களைப் பிறகு பார்க்கலாம்.
இயற்கை உரங்கள் எங்கிருந்து கிடைக்கும்?
1. மிருகங்களின் கழிவுகள்.
2. மனிதனின் கழிவுகள்
3. பசுந்தாள் உரப்பயிர்கள்
4. மரங்கள் செடிகளில் இருக்கும் இலை, தழைகள்
5. நுண்ணுயிர் உரங்கள்
6. குளங்கள், ஏரிகளில் இருக்கும் வண்டல் மண்
பதினெட்டு, பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டில் 1960 வரை, மேற்கண்ட இயற்கை உரங்களை பயன்படுத்தித்தான் விவசாயம் நடந்தது என்பதை அனைவரும் அறிவீர்கள். அப்போது மக்கள் எவ்வளவு ஆரோக்யமாக வாழ்ந்து வந்தார்கள் என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்.
இந்த இயற்கை உரங்கள் இந்தியாவில் மிகுந்து கிடக்கின்றன. விவசாயிகள் தங்கள் அறியாமையினாலும் விஞ்ஞானிகளின் துர்ப்போதனையினாலும் இந்த உரங்களைப் பயன்படுத்துவதில்லை. அவை வீணாகப் போய்க் கொண்டிருக்கின்றன. தவிர, கால்நடைகளை வளர்ப்பதற்குச் சோம்பல்பட்டு அவைகளை மாமிசத்திற்காக அனுப்புகிறார்கள். மனிதக்கழிவுகளை சேகரித்துப் பயன்படுத்துவதில்லை. விவசாய வேலைகளுக்கு இயந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
இந்த அநியாயங்களை தடுத்து நிறுத்தவேண்டும். இந்தியாவில் இயற்கை விவசாய மறுமலர்ச்சி ஏற்படவேண்டும். இதற்காக நான் என் உயிரையும் தியாகம் செய்யத் தயார். இந்தப் போராட்டம் அடுத்த சுதந்திர தினத்தன்று டில்லி ஜந்தர் மந்தரில் தொடங்கும். அனைவரும் தயாராக இருங்கள். இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சொர்க்கத்திற்கு செல்ல விசா கொடுப்பதற்காக சித்திரகுப்தன் ஸ்பெஷல் அலுவலகம் திறக்கப் போவதாக உறுதி அளித்திருக்கிறார்.
தேசப் பற்றுள்ளோரே, இயற்கை விவசாயத்தை ஆதரிப்பீர்.