ஒரு ஊரில் ஒரு குரு வசித்து வந்தார். அவருக்கு ஒரு சிஷ்யன். ஒரு நாள் அவர்கள் இருவரும் ஒரு வேலையாக வெளியூருக்குப் போனார்கள். அப்போது அவர்கள் சென்ற பாதையில் ஒரு ஆறு குறுக்கிட்டது. ஆறு நிறைய வெள்ளம் போய்க்கொண்டிருந்தது.
ஆற்றின் அக்கரையில் ஒரு பரிசல் இருந்தது. ஆனால் பரிசல்காரனைக் காணோம். அந்தப் பக்கத்தில் சில குடிசைகள் இருந்தன. பரிசல்காரன் அந்தக் குடிசைகளில் ஏதாவதொன்றில் இருக்கலாம் என்று குரு யூகித்தார்.
சிஷ்யனைப் பார்த்து "உனக்கு நீச்சல் தெரியுமல்லவா, நீ ஆற்றைக் கடந்து போய் அந்த பரிசல்காரனைக் கூட்டுக்கொண்டு வா" என்றார். சிஷ்யன் மளமளவென்று ஆற்று நீரின் மேல் நடந்து அக்கரைக்குப் போய் பரிசல்காரனைக் கூட்டிக்கொண்டு வந்தான்.
குருவிற்கு மகா ஆச்சரியம். நம் சிஷ்யன் எப்படி ஆற்றின் மேல் நடந்து சென்றான் என்று அதிசயமாகப் பார்த்துக்கொண்டிருந்தார். சிஷ்யன் திரும்பி வந்தவுடன் இதைப் பற்றிக் கேட்டார். சிஷ்யன் "குருவே, உங்கள் பெயரைச் சொல்லிக்கொண்டே ஆற்றின் மேல் நடந்து போனேன். அவ்வளவுதான்" என்றான்.
குருவிற்கோ மிக்க ஆச்சரியம். ஆஹா, நம் பெயருக்கு இவ்வளவு சக்தி இருக்கா, அப்படியானால் நானும் ஆற்றின் மேல் நடக்கலாமே என்று முடிவு செய்தார். அவர் பெயர் "தேவானந்தா". அந்தப் பெயரைச் சொல்லிக்கொண்டே ஆற்றின் மேல் நடக்கப் பார்த்தார். ஆற்றில் மூழ்கி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
இந்தக் கதையின் நீதி, எவ்வளவு சிந்தித்தும் எனக்குப் புலப்படவில்லை. இதைப் படிக்கும் அன்பர்களுக்குத் தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.