நாடெங்கிலும் கொலை,
கொள்ளை, பாலியல் வன்முறைகள், ஆள் கடத்தல், வழிப்பறி, சாலை விபத்துகள் ஆகியவை அன்றாட
நிகழ்வுகள் ஆகிவிட்டன. வளர்ந்து வரும் ஒரு சமுதாயத்தில் இத்தகைய நிகழ்வுகள் அந்த சமுதாயத்தின்
முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக அமைகிறது.
நாட்டிலுள்ள மக்கள்
இத்தகைய நிகழ்வுகளுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார்கள். இத்தகைய போராட்டங்களினால்
என்ன பயன் விளையும் என்று எனக்குத் தெரியவில்லை. தனி மனிதன் தன்னை மாற்றிக்கொண்டால்
தவிர, இத்தகைய குற்றங்களை எவ்வாறு தடுக்க முடியும்?
அவன் எப்போது மாறுவான்?
அப்படி மாறுவானா என்பதே ஒரு கேள்விக்குறியாக அல்லவா இருக்கிறது. போராட்டங்களை முன்னின்று
நடத்தும் பல்வேறு அமைப்புகள் இந்த முயற்சியில் என்றும் ஈடுபடுவதில்லை. போராட்டம் நடத்த
எங்கு என்ன காரணம் கிடைக்கும் என்று கழுகு போல் காத்திருக்கிறார்கள். அந்த மாதிரி ஒரு
சம்பவம் நடந்தால் போதும், அதற்காக போராட்டம் ஆரம்பித்து விடுவார்கள்.
பலருக்கு போராட்டங்கள்
அவர்களின் அடங்கிக்கிடந்த உணர்ச்சிகளுக்கு வடிகாலாய் அமைகிறது. இத்தகைய போராட்டங்களில்
அவர்கள் என்ன செய்தாலும் யாரும் கேட்பதில்லை. பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துதல்,
கடைகளைச் சூறையாடுதல், பொது வாழ்வைச் சீர்குலைத்தல் ஆகியவை சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது.
இத்தகையோர்களுக்கு மற்றவர்கள் செய்யும் தவறுகளைத் தட்டிக்கேட்க என்ன தார்மீக உரிமை
இருக்கிறது?
இத்தகைய போராட்டங்கள்
ஓரிரு நாட்கள் நடந்து பின்பு முடிந்து விடும். அதன் பிறகு இந்த மாதிரியான இன்னொரு சம்பவம்
நடந்தால் அதற்கு ஒரு போராட்டம் ஆரம்பிக்கும். இந்த தொடர்கதை நடந்து கொண்டேதான் இருக்கிறது.
போராட்டம் முடிந்தவுடன் அனைவரும் அந்த சம்பவத்தை மறந்து விட்டு தங்கள் வழக்கமான வேலையைக்
கவனிக்கப் போய்விடுகிறார்கள்.
இந்தப் போராட்டங்களில்
ஈடுபடுகிறவர்கள் அனைவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் போராடும் கொள்கைகளைக்
கடைப்பிடிக்கிறார்களா என்பது சந்தேகமே. உதாரணத்திற்கு டில்லியில் இப்போது போராட்டம்
நடத்திக்கொண்டிருக்கும் மாணவர்கள், குற்றவாளிகளை உடனே தூக்கில் போடுங்கள் என்று கேட்கிறார்கள்.
இதே மாணவர்கள் செய்யும் ரேக்கிங்கில் ஒரு மாணவர் உயிரிழந்தால், உடனே அதில் சம்பந்தப்பட்ட
மாணவர்களை தூக்கில் போட உடன்படுவார்களா?
வட இந்தியப் பெண்கள்
தங்கள் கழுத்தில் அரை பவுனில், கண்ணுக்குத் தெரியாமல் ஒரு செயின் போட்டிருப்பார்கள்.
தமிழ் நாட்டில் ஒவ்வொரு பெண்ணும் குறைந்தது ஒரு ஐம்பது பவுனாவது போட்டுக்கொண்டுதான்
விசேஷங்களுக்குப் போகிறார்கள். ஐம்பது பவுன் நகை இன்றைக்கு தங்கம் விற்கும் விலையில்
ஏறக்குறைய பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் ஆகிறது. இதைப் பார்க்கும் ஒரு சாதாரண குற்றவாளி
கூட கொலை செய்யும் அளவிற்குத் துணிந்து விடுகிறான்.
வீட்டில் லட்சக்
கணக்கில் பணத்தைப் பீரோவில் வைத்து விட்டு அவன் ஊருக்குப் போய்விடுகிறான். பூட்டியிருக்கும்
வீடுகளைக் குறிவைத்து திருடுபவர்கள் இன்று பெருகிப்போய் விட்டார்கள். இந்தப் பணம் அன்று
இரவே திருட்டுப் போய்விடுகிறது.
இதை எவ்வாறு மாற்ற
முடியும் என்று மக்கள் யோசிக்கவேண்டும். வெறும் போராட்டங்களினால் எந்தப் பயனும் ஏற்படாது
என்பதை மக்கள் என்று உணர்வார்களோ அன்றுதான் நம் நாடு முன்னேற்றப் பாதையில் அடி எடுத்து
வைக்கும்.