திங்கள், 6 ஜனவரி, 2014

தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது எப்படி?


இஸ்ரேல் நாடு இருக்குமிடம் அறிவீர்கள். அங்கிருந்து தென்கிழக்கில் 5 மணி நேரப் பயணத்தில் பம்பாய் (மும்பை என்று சொல்லவேண்டுமோ?) வந்துவிடும். ஆனால் அரபு நாடுகளின் மீது பறக்கவேண்டும்.

இஸ்ரேல்காரங்களுக்கும் அரேபியர்களுக்கும் ஜன்மாந்திரப் பந்தம். ஒரே இனமாக இருந்து பிறகு பிரிந்தவர்கள்தானே. அரேபியர்கள் தங்கள் நாடுகள் மீது இஸ்ரேலிலிருந்து புறப்படும் எந்த விமானம் பறந்தாலும் அதை சுட்டுத்தள்ளுவோம் என்று சொல்லிவிட்டார்கள். அதேபோல் அரபு நாடுகளிலிருந்து புறப்படும் எந்த விமானமும் இஸ்ரேல் மீது பறந்தால் அது சுட்டுத்தள்ளப்படும். இது இஸ்ரேல், அரபு நாடுகள் மற்றும்  எல்லா இதர நாடுகளும் பரஸ்பரம் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு சர்வதேச ஒப்பந்தம். நல்ல நட்பின் அடையாளம் கண்காணாமல் இருப்பதே.

இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் அவ்வளவு நட்பு. ஆகவே இஸ்ரேலிலிருந்து பம்பாய் வரவேண்டுமானால் வடமேற்கே 7 மணி நேரம் பயணித்து ஐரோப்பாவில் ஏதாவது ஒரு ஊருக்குப் போகவேண்டும். அங்கிருந்து கிழக்கு-தென்கிழக்காக ஒரு 9 மணி நேரம் பயணித்து பம்பாய் வரவேண்டும். கீழேயுள்ள படத்தைப் பார்க்கவும்.


தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது என்பது இதுதான். என்னுடைய டூரை இப்படித்தான் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

நான் இஸ்ரேலை விட்டுப் புறப்படும் தினத்தன்று காலையில் எழுந்து குளித்து டிபன் சாப்பிட்டு விட்டு என் சாமான்களையெல்லாம் மூட்டை கட்டினேன். காலை 9 மணிக்கு டாக்சி வருவதாக ஏற்பாடு. நான் என் லக்கேஜ்களை ஓட்டல் லாபியில் கொண்டு வந்து வைத்துவிட்டு காத்திருந்தேன்.

டாக்சி சரியான நேரத்திற்கு வந்தது. அரை மணி நேரத்தில் ஏர்போர்ட் வந்து சேர்ந்தேன். லக்கேஜகளை ஒரு டிராலியில் ஏற்றிக்கொண்டு உள்ளே சென்றேன். உள்ளே ஏகப்பட்ட போலீஸ் பெண் போலீஸ்கள்தான் அதிகம். அதில் ஒருத்தி என்னப் பிடித்துக்கொண்டாள்.

பத்து நிமிடங்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டாள். அவள் கேட்ட முக்கியமான கேள்விகளும் என் பதில்களும் கீழே.

1. கேள்வி:  இஸ்ரேலுக்கு எதற்காக வந்தீர்கள்?

    பதில்:       நான் ஒரு விவசாய விஞ்ஞானி. இங்குள்ள சொட்டு நீர்ப்                                              பாசனத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வந்தேன்.

2. கே:  இங்கு எத்தனை நாள் இருந்தீர்கள்?

    ப:     மூன்று நாள்

3.  கே:  இந்த லக்கேஜ்களை எல்லாம் யார் பேக் செய்தார்கள்?

       ப:  நான்தான் பேக் செய்தேன்.

4.   கே: பேக் செய்த பின் எங்காவது போனீர்களா?

        ப:  எங்கும் போகவில்லை.

5.   கே:  இந்த பேக்கேஜுகள் உங்கள் பார்வையிலேயே இருந்ததா?

        ப:  ஆமாம்.

6.    கே. யாராவது உங்களிடம் ஏதாவது பாக்கெட் கொடுத்தார்களா?

        ப:  இல்லை.


"சரி, இங்கேயே இருங்கள்"  என்று சொல்லிவிட்டு, கொஞ்ச தூரத்தில் இருந்த இன்னொரு போலீஸகாரியைக் கூப்பிட்டு அவர்கள் பாஷையில் என்னமோ சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

இந்த இரண்டாவது போலீஸ்காரியும் முதல் போலீஸ்காரி கேட்ட அத்தனை கேள்விகளையும் அதே வரிசையில் கேட்டாள். நானும் அதே பதில்களை அதே வரிசையில் சொன்னேன்.

சரி. நீங்கள் செக்இன் செய்யப் போகலாம் என்று விடை கொடுத்தாள். போன உயிர் திரும்ப வந்த மாதிரி இருந்தது. பின்னால்தான் தெரிந்தது. அந்த ஊரில் வைரம் பட்டை தீட்டி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். சட்ட பூர்வமாக ஏற்றுமதி செய்தால் நிறைய வரி கட்டவேண்டும். அதனால் இந்த மாதிரி டூர் வரும் ஆட்களிடம் சிறிய பாக்கெட்டுகளில் வைரக்கற்களை கொடுத்தனுப்பினால் வரியை ஏய்க்கலாம்.

நான் ஓட்டலில் இருக்கும்போது ஒரு ஆள் என்னைப் பற்றி விசாரித்தான். நான் ஒரு அரசு ஊழியன் என்று தெரிந்த தும் போய்விட்டான். அவன் இந்த விஷயத்திற்கு நான் தோதுப்படுவேனா என்றுதான் நோட்டம் பார்த்திருக்கவேண்டும்.

எப்படியோ சிக்கல் இல்லாமல் நான் பிளேன் ஏறி யூரிச் என்னும் ஊருக்கு 7 மணி நேரம் பிரயாணம் செய்து வந்து சேர்ந்தேன். பம்பாய் செல்லும் விமானத்திற்காக அரை நாள் காத்திருந்து  பிறகு அதில் ஏறி 9 மணி நேரம் பிரயாணம் செய்து பம்பாய் வந்து சேர்ந்தேன். அங்கிருந்து லோகல் விமானம் பிடித்து இரண்டு மணி நேரத்தில் ஊர் வந்து சேர்ந்தேன். ஏறக்குறைய இஸ்ரேலிலிருந்து ஊருக்கு வர ஒன்றரை நாள் ஆகியது.

வீட்டிற்கு வந்ததும் குளித்து விட்டு ரசம் சாதம் சாப்பிட்டு விட்டு இரண்டு நாள் தூங்கினேன். இப்படியாக என்னுடைய இஸ்ரேல் டூர் முடிந்தது.