புதன், 26 நவம்பர், 2014

அரசியல்வாதிகள்- அன்றும் இன்றும்



இப்படி ஒரு பின்னூட்டம் என் ஒரு பதிவிற்கு வந்தது.

அய்யா அவர்களே 

ஒரு பதிவில் இதை படித்தேன். நம்பவே முடியவில்லை.
இத்தகைய அரசியல்வாதியையும் இன்றைய அரசியல்வாதிகளையும் compare செய்து ஒரு பதிவிடுங்களேன். இன்றைய இளைய தலைமுறைக்கு ஒரு புதிய பாடமாக இருக்கும்.

அன்பரின் வேண்டுகோளை நிறைவேற்றும் அளவிற்கு எனக்கு அரசியல் ஞானம் இல்லை. ஆகவே அவர் பின்னூட்டத்தை மட்டும் அப்படியே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். கூடவே என் அனுபவங்கள் சிலவற்றையும் பகிர்கிறேன்.

முதலமைச்சர் காமராசரும் பிரதமர் நேருவும் கூட்டமொன்றில் பங்கேற்க மதுரையைத் தாண்டி மகிழுந்தில் சென்று கொண்டிருக்கிறார்கள்.

உரையாடலின் நடுவே நினைவு கூர்ந்தவரான நேரு ‘மிஸ்டர் காமராஜ்... உங்க சொந்த ஊர் இந்தப் பக்கம்தானே...?’ என்று கேட்கிறார்.

‘ஆமாங்க. இங்ஙனதான். இன்னும் கொஞ்ச தூரத்தில் வரப்போகிறது’ என்று கூறுகிறார் காமராசர்.

‘அப்படியானால் உங்கள் வீட்டுக்குப்போய் உங்கள் தாயாரைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டுச் செல்லவேண்டும் அல்லவா...’ என்று நேரு கேட்க ‘அது எதுக்குன்னேன். இப்பவே கூட்டத்துக்கு நேரமாயிட்டு...’ என்று காமராசர் மறுக்கிறார்.

‘நோ நோ... இவ்வளவு தூரம் வந்துவிட்டு உங்கள் தாயாரைப் பார்க்காமல் சென்றால் நன்றாக இருக்காது. நீங்கள் பார்க்க நினைக்காவிட்டாலும் பரவாயில்லை. நான் அவர்களைப் பார்த்தேயாக வேண்டும். என்னை அவர்களிடம் கூட்டிச் செல்லுங்கள்’ என்று அன்புக் கட்டளையிடுகிறார் நேரு.

‘விடமாட்டேன்னுதீகளே...’ என்ற காமராசர்., வண்டி சற்று தூரம் சென்றதும் ஓட்டுநரிடம் ‘ஏப்பா. வண்டிய இப்படி ஓரங்கட்டு...’ என்று நிறுத்தச் சொல்கிறார்.

அது வீடுகளே இல்லாத பகுதி. சாலையின் இருமருங்கிலும் விவசாய நிலங்கள். அந்நிலங்களில் அப்பகுதிப் பெண்கள் களை பறித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தாயாரைப் பார்க்க வீட்டுக்கு அழைத்துச் செல்லச் சொன்னால் இப்படி அத்துவான வெயிலில் வண்டியை நிறுத்தியிருக்கிறாரே என்ற வினாவுடன் வண்டியை விட்டிறங்குகிறார் நேரு.

காமராசர் களை பறிக்கும் பெண்டிர் கூட்டத்திலிருந்து வயதான பெண்மணி ஒருவரை அழைக்கிறார் ‘ஆத்தா... நான்தான் உன் மகன் காமராசு வந்திருக்கேன். உன்னப் பார்க்க நேரு வந்திருக்காரு...’ என்று கூவியிருக்கிறார்.

புன்செய்க் காட்டுப் புழுதியுடன் உழைத்து வியர்த்த முகத்துடன் ‘ஏ காமராசு... வந்திட்டியாப்பா... நல்லாருக்கியா...’ என்று தன் மகனைக் கண்ட மகிழ்ச்சியில் உள்ளம் நெகிழ அருகில் வருகிறார் காமராசரின் தாயார்.

தாயும் மகனும் அளவளாவிக் கொள்கிறார்கள். நேருவைக் காட்டி அறிமுகப்படுத்துகிறார்.

நேருவால் தன் முன்னால் நடந்துகொண்டிருப்பதை நம்ப முடியவில்லை. சிலையாகி நிற்கிறார் !

அவர்தான் நம் அய்யா காமராசர்! 

சேலம் குரு


என் அனுபவம் ஒன்று:

என் நினைவில் நின்ற  அன்றைய ஒரு அரசியல்வாதி பற்றிய நினைவு. எல்லா அரசியல்வாதிகளும் காமராஜர் அல்ல என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

நான் பட்டப்படிப்பு இறுதி ஆண்டு !956 ல் படித்தபோது நடந்த நிகழ்வு. நான் மாணவ மன்ற செயலாளராக இருந்தேன். மாணவ மன்றத்திற்காக ஒரு கூடுதல் ஹால் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவிற்கு அன்றைய முதல் அமைச்சரைக் கூப்பிட்டிருந்தோம்.

முதல் அமைச்சர் அடிக்கல் நாட்டுவதற்காக புதிதாக ஒரு கலவைச்சட்டியும் ஒரு கொத்தனார் கரண்டியும், இரும்பில், வாங்கி வைத்திருந்தோம். விழாவிற்கு இரண்டு நாள் முன்பு விழா ஏற்பாடுகளைப் பார்வையிட வந்த ஒரு முக்கிய மாவட்ட அதிகாரி இந்த கரண்டியைப் பார்த்துவிட்டு, இது சரிப்படாது, முதல் அமைச்சர் பயன்படுத்தும் கரண்டி வெள்ளியில் இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

நான் என்ன இது, கொத்தனார் கரண்டி வெள்ளியில் கிடைக்குமா என்று சந்தேகப்பட்டுக்கொண்டு நகைக் கடைக்குப் போனால் அங்கு வெள்ளியில் ரெடிமேடாக இந்தக் கரண்டி வைத்திருந்தார்கள். விசாரித்ததில் அரசியல்வாதிகள் கலந்து கொள்ளும் விழாக்களில் இது சகஜம் என்று சொன்னார்கள். அரசியல்வாதி வந்து போனபிறகு இந்தக் கரண்டியைத் திருப்பிக்கொண்டு வந்தால் வாங்கிக்கொள்வீர்களா என்று கேட்டேன். அந்தக் கடைக்காரர்கள் சிரித்தார்கள். 

எனக்கு அப்போது வயது 21. உலகம் என்றால் வீடு, கல்லூரி மட்டுமே. அவர்கள் ஏன் சிரித்தார்கள் என்று எனக்குப் புரியவில்லை. மந்திரி வந்து போனபிறகு கொண்டு வாருங்கள், வாங்கிக்கொள்கிறோம் என்று சொன்னார்கள்.

சரியென்று ஒரு கரண்டி வாங்கி வந்து வைத்திருந்தோம். விழாவிற்கு மந்திரி வந்து அடிக்கல் நாட்டினார். நான் மேஸ்திரியிடம் மந்திரி போனவுடன் அந்த வெள்ளிக் கரண்டியை பத்திரமாக என்னிடம் கொண்டு வந்து கொடுக்கவேண்டும் என்று சொல்லியிருந்தேன். 

விழா முடிந்து மந்திரி போன பிறகு மேஸ்திரியிடம் அந்தக் கரண்டி எங்கே என்று கேட்டேன். தம்பி, அடிக்கல் நாட்டின உடனே மந்திரி அந்தக் கரண்டியை தன் உதவியாளரிடம் கொடுத்தார். அவர் வாங்கி தன் பையில் போட்டு கொண்டு போய் விட்டாரே  என்றார்.  

அப்போதுதான் எனக்கு அந்த நகைக் கடைக்காரர் ஏன் சிரித்தார் என்று புரிந்தது.

அன்றைய அரசியல்வாதி வெள்ளியில் கரண்டி கேட்டார். இன்றைய அரசியல்வாதிகள் தங்கம் அல்லது பிளாட்டினத்தில் கரண்டி கேட்பார்கள் என்று நினைக்கிறேன். இதுதான் அன்றைய அரசியல்வாதிக்கும் இன்றைய அரசியல்வாதிக்கும் உள்ள வித்தியாசம்.

அனுபவம் இரண்டு:

நான் முதல் ஆண்டு முதுகலை பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்தபோது நடந்த நிகழ்ச்சி.

அன்றைய பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவை எங்கள் கல்லூரிக்கு அழைத்திருந்தார்கள். அனைத்து முதுகலை மாணவர்களும் ஆசிரியர்களும் அவருடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அனைத்து மாணவர்களும் நேரு கோட் அணிந்து வரவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். எல்லோரும் புதிதாக அந்த கோட் தைத்தோம். அதனுடன் போட்டோ எடுத்துக்கொண்டோம். இது ஒன்றும் பெரிதல்ல.

அவருக்கு உணவு தயாரிக்க டில்லி அசோகா ஓட்டலில் இருந்து ஒரு சமையல்காரரை விமானத்தில் தருவித்தார்கள். அவருக்கு ஒரு நாளைக்கு 1000 ரூபாய் சன்மானம். அன்றைய (1958) ஆயிரம் ரூபாய் இன்றைக்கு லட்சம் ரூபாய்க்கு சமம். அவர் செய்த ஆர்ப்பாட்டத்தில் எங்கள் கல்லூரியில் உள்ள அனைத்து பெரிய ஆபீசர்களும் ஆடிப்போய்விட்டார்கள். நேருவுக்குக் கூட அவ்வளவு பயப்படவில்லை. எப்படியோ விழா வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

அனுபவம் மூன்று:

கேரளாவில் நடந்த ஒரு செமினாருக்குப் போயிருந்தேன்.  கேரள விவசாய மந்திரி கலந்து கொள்வதாக ஏற்பாடு. விழா ஆரம்பிப்பதற்கு ஐந்து நிமிடம் முன்பாக ஒரு அம்பாசிடர் கார் வந்து முகப்பில் நின்றது. வேட்டி சட்டை போட்டவர்கள் இருவர் இறங்கினார்கள். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லை. எந்தப் போலீசும் இல்லை. விழா அமைப்பாளர்கள் அவர்களை வரவேற்று மேடைக்கு அழைத்துச்சென்றார்கள். ஒருவர் மேடையில் அமர்ந்தார் மற்றவர் கீழே முதல் வரிசையில் அமர்ந்தார்.

இவர்கள் யார் என்று விசாரித்தேன். மேடையில் அமர்ந்தவர்தான் விவசாய மந்திரி. கீழே அமர்ந்தவர் அவருடைய உதவியாளர் என்றார்கள். அந்த எளிமையைக் கண்டு நான் அதிசயித்தேன்.