நாட்டிற்கே நோய் வருமா? வரும். வந்து வெகு காலம் ஆகி விட்டது. இன்னும் இருந்து கொண்டு இருக்கிறது. ஆனால் நம்மில் பல பேர் அதை உணராமல் அல்லது நம் ஆறுதலுக்காக அதை மறந்து விட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நம் வீடுகளில் யாராவது ஒரு வீட்டிலிருந்து ஒரு பெண் ஓடிப்போய் விட்டாள் என்று வைத்துக் கொள்வோம். நம் வீட்டில் நடக்காத வரையில் இதைப் பற்றிக் கேள்விப்பட்டால் "அடப் பாவமே, அப்படியா நடந்து விட்டது" என்று கூறுவதோடு அதை மறந்து போகிறோம். நமக்கு வேண்டியவர்களாக இருந்தால் நேரில் போய் துக்கம் விசாரித்து விட்டு வருவதோடு சரி.
நமக்கு வேண்டாதவர்களாய் இருந்தால் "பெண்ணை வளர்த்த லட்சணத்தைப் பார்" என்று வாய் கூசாமல் பேசுவோம். இதே காரியம் நம் வீட்டிலேயே நடந்திருந்தால் நாம் கூனிக் குறுகிப் போய் விடுவோம். அதைப் பற்றிப் பேசவே வெட்கப்படுவோம். இது நம் குடும்பத்திற்கு ஒரு அவமானச் சின்னமாக ஆகி விடும். வெளி விசேஷங்களில் கலந்து கொள்ள மாட்டோம். மற்றவர்களுடன் சகஜமாகப் பேசிப் பழக மாட்டோம்.
இப்படிப்பட்ட ஒரு அவமான உணர்ச்சியை அனுபவித்தால்தான் அது எவ்வளவு கொடுமையானது என்று தெரியும். அப்படிப்பட்ட ஒரு அவமானச்சின்னத்தைச் சுமந்து கொண்டு இந்நாட்டில் 20 சதம் மக்கள் வாழ்கிறார்கள். இந்த உண்மையை நாம் என்றாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? இல்லையே?
திடீரென்று இந்த ஞானோதயம் எனக்கு எப்படி உதயமானது என்று கேட்கிறீர்களா? என்னுடைய ஒரு பதிவில் என்னுடைய கம்யூனிடி சர்ட்டிபிகேட்டைப் பிரசுரித்திருந்தேன். அது ஒரு தற்செயலாக நடந்த செயல். மற்ற சர்ட்டிபிகேட்டுகளுடன் இதுவும் சேர்ந்து விட்டது. இதைப் பார்த்த ஒருவர் உங்கள் ஜாதியைச் சொல்லவேண்டிய அவசியம் என்ன வந்தது, இதே மாதிரி தலித் மக்கள் அவர்கள் ஜாதியைச் சொல்ல முடியுமா என்று கேட்டிருந்தார்.
அப்போதைக்கு ஏதோ சப்பைக் கட்டு பதில் சொன்னேனே தவிர, என் மனதில் இதைப் பற்றி தீவிரமான சிந்தனை ஓடிக்கொண்டு இருந்தது. கூகுளில் தலித்துகளைப் பற்றி ஏதாவது கருத்துகள் இருக்கிறதா என்று தேடினேன். சில கிடைத்தன. அவைகளைப் படித்த போதுதான் நம் நாட்டில் இத்தகைய புற்று நோய் இருப்பதை உணர்ந்தேன். நான் என்னமோ திடீரென்று தலித்துகளுக்கு ஆபத்பாந்தவனாக ஏன் மாறினேன் என்று கேள்விகள் கேட்டால் எனக்கு பதில் சொல்லத் தெரியாது. ஆனாலும் இந்த அவலம் என் மனதில் பல நாட்களாக இருந்து உறுத்திக்கொண்டு வருகிறது.
நம் நாடு சுதந்திரம் பெற்று ஏறக்குறைய 70 ஆண்டுகள் ஆகின்றன. இவ்வளவு பெரிய நாட்டின் அரசே இதை ஒழிக்க எவ்வளவோ திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது. இருந்தாலும், இவ்வளவு ஆண்டுகள் கழித்தும் இந்த தீண்டாமை எனும் புற்று நோயை ஒழிக்க முடியவில்லையே. ஏன் ? இது எனக்குப் புரியாத புதிராக இருக்கிறது. இதற்கு இந்நாட்டின் அனைத்து தரப்பினரும் காரணமே. இருந்தாலும் இந்த நோய்க்குத் தீர்வு என்னவென்று புரியவில்லை? சமூக ஆர்வலர்கள் இதைப் பற்றி என்ன கூறியிருக்கிறார்கள் என்று நான் ஆராயவில்லை. என் மனதில் பட்டதைக் கூறியிருக்கிறேன்.