வியாழன், 21 மே, 2015

ஐயோ பணம் போச்சே?

                                       Image result for atm machine

நமது பேங்குகள் நமக்குச் செய்து தந்திருக்கிற பல வசதிகளுக்கு நாம் அவர்களுக்கு மிகவும் கடன் பட்டிருக்கிறோம். நாம் போடும் பணத்தை பத்திரமாக வைத்திருந்து நாம் கேட்கும்போது வட்டி சேர்த்துக்கொடுப்பது சாதாரண சேவையா என்ன?

ஆனால் இதைவிட சூப்பர் சேவை ஒன்று அவர்கள் செய்து வருவது பல பேருக்குத் தெரியாமலிருப்பது பெரிய துரதிர்ஷ்டம். பத்து வருடத்திற்கு முன்பு இந்த சேவை எனக்குத் தெரிந்திருந்தால் நான் இப்போது ஸ்விஸ் பேங்கில் கணக்கு துவங்கி இருப்பேன். எனக்கு அதிர்ஷ்டமில்லை.

ஏடிஎம் மிஷின்களைப் பற்றி அறியாதவர்கள் இருக்கமாட்டார்கள். அதில் நமது ஏடிஎம் அட்டையை சொருகினால் அந்த மிஷின் நம்முடைய பேங்கிற்குப் போய் (அந்த பேங்க் டிம்பக்டூவில் இருந்தாலும் சரி) நம் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்த்து நாம் கேட்கும் தொகை இருந்தால் அந்தப் பணத்தை நமக்குக் கொடுக்கிறது. இது எப்பேர்ப்பட்ட குறளி வித்தை என்று நமக்குத் தோன்றுகிறது.

அப்போ, பேங்கில் இருக்கும் அதிகாரிகளுக்கு அந்த ஏடிஎம் மிஷினில் ஒரு சமயத்தில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று சுலபமாகக் கண்டுபிடிக்கலாம் அல்லவா? அப்படியானால் மாதத்திற்கு ஒரு முறை அந்த மிஷினில் எவ்வளவு பணம் வைத்தார்கள், எவ்வளவு பணம் வாடிக்கையாளர்களால் எடுக்கப்பட்டது, இப்போது மீதி எவ்வளவு பணம் இருக்கவேண்டும் என்பதெல்லாம் ஒரு விரல் சுட்டில் தெரிந்து கொள்ளலாம் அல்லவா?

அப்படி இருக்கும்போது இன்றைய செய்தித் தாட்களில் ஏடிஎம் மிஷினில் வைத்த பணம் காணாமல் போயிற்று என்று ஒரு செய்தி பிரசுரமாயிற்று. இந்த மிஷின்களில் பணம் வைக்க ஒரு தனியார் நிறுவனத்தை இந்த பேங்குகள் நியமித்திருக்கின்றன. அதில் மேற்பார்வையாளராக வேலை செய்யும் ஒருவரே அதிலிருந்து லட்சக்கணக்கான பணத்தை எடுத்திருக்கிறார். இது நான்கு வருடங்களாக நடந்து வருகிறதென்று செய்தித்தாள்களில் போட்டிருக்கிறது.

அப்படியானால் நான்கு வருடங்களாக இந்த ஏடிஎம் மிஷின்களின் கணக்கு வழக்குகளை பேங்கில் இருந்து யாரும் சரி பார்க்கவில்லை என்று தெரிகிறது. இந்த விஷயம் தெரியாமல் போய்விட்டது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. தெரிந்திருந்தால் நானும் இந்த பணம் வைக்கும் தனியார் கம்பெனியில் சேர்ந்து, எப்படியாவது சூபர்வைசராகி, ஏடிஎம் மிஷின்களிலிருந்து பணம் எடுத்து ஸ்விஸ் பேங்க்கில் கணக்கு ஆரம்பித்திருப்பேன்.

எனக்கு அதிர்ஷ்டமில்லை.