ஒரு மனிதனின் பலம் அவன் தன்னை அறிந்து கொள்வதில்தான் இருக்கிறது. தன்னால் எதைச் செய்ய முடியும், எதைச் செய்ய முடியாது, தன் வலிமை எது, வீக்னெஸ் எது என்று அறிந்து வைத்திருப்பவன்தான் அறிவு முதிர்ச்சி அடைந்தவன். அந்த வகையில் நான் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை என்று என் மனது சொல்கிறது.
என் பெரிய பேரன் மருத்துவ மேல் படிப்பிற்காக பெங்களூர் மெடிகல் கல்லூரியில் சேர்ந்திருக்கிறான். அவனைப் பார்க்கும் சாக்கில் பெங்களூர் ஒரு முறை போய்வரலாம் என்று திட்டமிட்டேன். இதற்கு வீட்டில் எல்லோரும் ஒப்புதல் அளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. அதே சமயம் என் கார் ஓட்டும் திறனையும் பரிசோதித்து விடலாமே என்றும் நினைத்தேன்.
கார் நன்றாகவே ஓட்டுவேன். ஆனால் நான் விரும்பியது இப்போது போட்டு முடித்திருக்கும் கோயமுத்தூர்-பெங்களூர் நான்கு வழிச்சாலையில் என் புதுக்கார் எந்த வேகத்தில் போகும் என்று பார்த்துவிடலாம் என்றும், நான்கு வழிச்சாலையில் கார் ஓட்டும் சுகத்தை அனுபவிக்கலாம் என்றும் நினைத்தேன். கோவை-பெங்களூர் தூரம் மொத்தம் 375 கிமீ. இதை ஒரே மூச்சில் கடக்க என்னால் முடியாதென்பது எனக்குத் தெரியும். அதனால் வழியில் சேலம், ஓசூர் ஆகிய இரண்டு இடங்களில் தங்கி விட்டு, ஓசூரிலிருந்து அதிகாலையில் புறப்பட்டால் 7 மணிக்குள் பெங்களூர் சேர்ந்து விடலாம் என்பது என் திட்டம்.
இதற்கு என் மனைவி மற்றும் மகள்கள் பெரிதாக ஒன்றும் ஆட்சேபணை சொல்லவில்லை. நானும் கற்பனையில் ஹைவேயில் காரை 120 கிமீ வேகத்தில் ஓட்டுவதாக கற்பனை செய்து மகிழ்ந்து கொண்டிருந்தேன். இங்குதான் என் முதிர்ச்சியின்மை வெளிப்பட்டது. என் வீட்டினர் ஆட்சேபணை சொல்லாத தின் காரணம் "முதலிலேயே தடங்கல் சொன்னால் இந்தக் கிறுக்கு முரண்டு பிடிக்கும், அதனால் விட்டுப் பிடிப்போம்" என்ற கொள்கை என்று எனக்குத் தெரியாமல் போயிற்று.
பெங்களூர் செல்லும் நாள் நெருங்கும்போதுதான் என் குடும்பத்தினரின் திட்டமிட்ட சதி வெளியானது. "ஆமாம், நீங்கள் காரில் போகும்போது ஏதாவது நடந்தால் என்ன செய்வீர்கள்" என்று ஒரு நாள் கேட்டார்கள். இதில் ஏதாவது என்பதில் கார் விபத்து, டயர் பஞ்சர். எனக்கு வரக்கூடிய மாரடைப்பு, ரத்த த்தில் சர்க்கரை குறைந்து போய் வரும் மயக்கம் ஆகியவை அடக்கம். இதில் கார் விபத்து எப்படி ஏற்படும் என்று சொல்ல முடியாது. நான் எவ்வளவு ஜாக்கிரதையாக கார் ஓட்டினாலும் அடுத்தவர்களின் அஜாக்கிரதையினால் ஏற்படும் விபத்தைத் தடுக்க முடியாது அல்லவா?
இத்தகைய இடர்பாடுகள் கண்டிப்பாக வராது என்று என்னால் உறுதியுடன் கூற முடியவில்லை. ஆகவே அவர்களை கூறுவதை ஏற்றுக்கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. அனைவரும், பேசாமல் பஸ்சில் போய் வாருங்கள் என்று ஏகமனதாகக் கூறி விட்டார்கள். ஹைவேயில் 120 கிமீ வேகத்தில் கார் ஓட்டும் கனவு சிதைந்து போனது.
சரியென்று மனதைத் தேற்றிக்கொண்டு எங்கள் ஊர் தனிப்பேருந்து நிலையத்திற்குப் போனேன். எனக்குத் தெரிந்த பழைய காலத்து தனிப்பேருந்து கம்பெனி KPN Travels தான். அதில் பெங்களூருக்குப் போகவர இரு டிக்கெட்டுகள் வாங்கிக்கொண்டு வந்தேன். இப்படி இந்தக் கம்பெனியில் டிக்கெட் வாங்கியிருக்கிறேன் என்று சொன்னவுடன் என் ஒரு மகள் அது பாடாவதி பஸ் கம்பெனி ஆயிற்றே, அதில் ஏன் டிக்கெட் எடுத்தீர்கள் என்றாள். வயதான பிறகு என்னென்ன பேச்சு கேட்கவேண்டியிருக்கிறது பாருங்கள்.
சரி டிக்கெட் வாங்கியாச்சு, இப்போ ஒண்ணும் மாற்ற முடியாது என்று சொல்லி அவள் வாயை அடைத்து விட்டேன். அப்போதுதான் நான் சிறு வயது முதல் பிரயாணம் செய்த பஸ் வகைகள் நினைவிற்கு வந்தன.
நான் அறியாச்சிறுவனாக இருந்தபோது எங்கள் வூட்டில் ஒரு பஸ்சின் போட்டோ மாட்டியிருக்கும். அந்த பஸ் ஏறக்குறைய இப்படியிருக்கும்.
அதைப் பற்றிக் கேட்டபோது அது என் அத்தைமாமா அவர்களின் சொந்த பஸ். பொள்ளாச்சியிலிருந்து பழனிக்கு ஓடிக்கொண்டிருக்கிறது என்று சொன்னார்கள். அதைப்பற்றி மேலும் சில கதைகளை என் மாமா சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் பஸ் ஓட்டுவதில் வரைமுறைகள் ஒன்றும் இல்லை. பஸ் ஸ்டேண்ட் என்றும் ஒன்றும் இல்லை. தேர்முட்டியில் பஸ்சை நிறுத்தியிருப்பார்களாம். ஊரைச் சுற்றிச்சுற்றி வருவார்களாம். ஊரில் அப்போது தேர் ஓடும் நான்கு வீதிகள்தான் பிரதான சாலைகள். ஒரளவு ஆட்கள் ஏறினவுடன் பழனிக்குப் பொறப்படுவார்கள். போகுத் வழியில் யாரெல்லாம் கையைக் காட்டுகிறார்களோ அவர்களை எல்லாம் ஏற்றிக்கொண்டு ஊர் போய்ச்சேருவார்களாம்.
அப்போது பொள்ளாச்சியில் உள்ள பெரிய கவர்ன்மென்ட் ஆபீசர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். ஏதாதோரு சமயத்தில் அவர் பழனிக்குப் பொக நேரிடும். அப்போது அவர் முந்தின நாளே இந்த பஸ் ஓட்டுனர்களிடம் சொல்லி வைத்து விடுவார். இந்த பஸ் ஓட்டுனர் ஊருக்குள் கிடைக்கும் ஆட்களை எல்லாம் ஏற்றிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் காத்திருக்கவேண்டும். சப்-இன்ஸ்பெக்டர் வரும் வரை காத்திருந்து அவரை ஏற்றிக்கொண்டு போகவேண்டும். அவர் பெரிய துரை ஆதலால் டிக்கெட் வாங்கமாட்டார். ஓசிப் பயணம்தான்.
நான் அந்தப் பஸ்சைப் பார்த்ததில்லை. நான் பள்ளி விடுமுறைகளில் பொள்ளாச்சி போவேன். அது இரண்டாம் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த காலம். பெட்ரோல் எல்லாம் சண்டைக்குப் போய்விட்டது. அதாவது சண்டையில் உபயோகப்படுத்தப்படும் வாகனங்களுக்கு முன்னுரிமையாகப் போய்விட்டது. ஆகவே பொது மக்களுக்காக ஒரு புது வகையான பஸ் கண்டு பிடித்தார்கள். விறகுக் கரியில் ஓடும் பஸ்.
பஸ்சின் பின்புறம் ஒரு உயரமான பாய்லர் இருக்கும். அதில் விறகுக்கரியைப் போட்டு ஒரு துருத்தியில் உள்ள விசிறியை வேகமாகச் சுற்றவேண்டும். அப்போது ஏதோ ஒரு ஆயு உற்பத்தியாகி அதனால் பஸ் ஓடும். உங்களில் எத்தனை பேர் அந்த மாதிரி பஸ்சைப் பார்த்திருப்பீர்க்ள என்று தெரியவில்லை. இங்கே பாருங்கள்.
இத்தகைய பஸ்களிலிருந்து இன்று முன்னேறியுள்ள மல்டி ஏக்சில் பஸ்களைப் பார்த்தால் ஏதோ கனவில் நடப்பது போல் இருக்கிறது.
தொடரும்