அன்று மாலை வெளியான செய்தித்தாள்களில் கிறுக்கர்கள் தமிழ்ச் சங்க நடவடிக்கைகளை விவரமாகப் பிரசுரித்திருந்தார்கள். அவைகளின் சாராம்சம்.
தமிழ்நாட்டில் விரைவில் இனக்கலவரம் மூளப்போகிறது. தமிழ் நாட்டிலுள்ள மண்ணின் மைந்தர்கள் அல்லாதவர்களை வெளியேற்ற போராட்டம் வெடிக்கப் போகிறது. வெளி மாநிலத்தவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு குடி பெயரவும். இத்தியாதி, இத்தியாதி.
இந்தச் செய்திகளைப் பார்த்தவுடன் ஏதோ அனர்த்தம் விளையப்போகிறது என்று என் உள் மனது எச்சரித்தது. சரி வருவது வரட்டும் என்று தூங்கப்போனேன். காலையில் எழுந்து அன்றைய செய்தித்தாள்களைப் படித்தால் பகீரென்றது. வெளி மாநிலங்களிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்து குடியேறியவர்கள் எல்லோரும் இன்று பந்த் நடத்தப்போகிறோம் என்று அறிக்கை விட்டிருந்தார்கள்.
"என்னதான் நடக்கும் நடக்கட்டுமே" என்ற பாடலைப் பாடியபடியே சங்க அலுவலகத்திற்குப் போனேன். சங்க அலுவலகமே தெரியாத அளவிற்கு அந்தத் தெரு முழுவதும் ஜனக்கூட்டம். எள் போட்டால் எள் கீழே விழாது. அந்த அளவிற்குக் கூட்டம். என்னவென்று நைசாக விசாரித்தேன். இந்தக் கூட்டம் கிறுக்கர்க்ள தமிழ்ச்சங்கத்திற்கு எதிராக பந்த் செய்யும் கூட்டம் என்றார்கள்.
நான், உபதலைவர், காரியதரிசி, பொது ஆகிய நாங்கள் கட்டிடத்தின் பின் வாசல் வழியாக யாருக்கும் தெரியாமல் எங்கள் அலுவலகத்தினுள் பிரவேசித்தோம். இதே வழியாக ஏற்கெனவே டிரைவரும் ஸ்டெனோவும் ஆபீசிற்குள் வந்திருந்தார்கள். வெளியிலிருந்து சத்தம் அதிகமாகிக்கொண்டு வந்தது.
டிரைவரிடம் அவர்கள் என்ன கோஷம் போடுகிறார்கள் என்று கேட்டேன். அவர் சொன்னார். தமிழ்நாடு எங்களுக்கே என்று அவரவர்கள் பாஷையில் கோஷம் போடுகிறார்கள் என்றார். பரவாயில்லையே, தமிழ்நாட்டின் தலைவிதி இந்த அளவிற்குப் போய்விட்டதா என்று நினைத்துக்கொண்டு, பொதுவிடம் காவல் துறைக்கு போன் பண்ணுங்கள் என்றேன்.
அதற்குள் போலீஸ் சைரன்கள் சத்தம் பலமாகக் கேட்டது. டிரைவர் ஜன்னல் வழியாக நைசாக எட்டிப்பார்த்து விட்டு. பத்து ஜீப்களில் போலீஸ் ஆபீசர்களும் மூன்று பஸ்களில் போலீஸ் ஜவான்களும் வந்திருக்கிறார்கள் என்றான். நல்லதாகப் போயிற்று என்றேன். சற்று நேரத்தில் நான்கு போலீஸ் ஆபீசர்களும் பத்துப் பதினைந்து போலீஸ் ஜவான்களும் ஆபீசுக்குள் வந்து சேர்ந்தார்கள்.
அவர்களில் முதன்மையாகத் தெரிந்தவர் "யாரய்யா இந்த சங்கத்தின் தலைவர் என்றார். நான் பவ்யமாக நான்தான் என்றேன். இவர்கள் எல்லாம் யார் என்றார், நான் விவரம் சொன்னேன். அவர் பின்னால் திரும்பி இந்த டிரைவர் மற்றும் ஸ்டேனோவை விட்டு விட்டு மற்றவர்களை அரெஸ்ட் செய்யுங்கள் என்றார். உடனே போலீஸ் ஜவான்கள் எங்கள் கைகளில் விலங்கு மாட்ட வந்தார்கள்.
நான் அந்த சீனியர் போலீஸ் ஆபிசரிடம், சார் நாங்கள் எல்லாம் பெரிய உத்தியோகத்தில் இருந்து ரிடைர்டு ஆனவர்கள், தவிர எல்லோரும் சீனியர் சிடிசன்ஸ், எங்களுக்கு விலங்கு மாட்டி அவமானப்படுத்தாதீர்கள், நீங்கள் எங்கு கூப்பிட்டாலும் வருகிறோம் என்றேன்.
எங்களை போலீஸ் ஜீப்பில் ஏற்றி கலெக்டர் ஆபீசுக்கு கூட்டிப்போனார்கள். அங்குள்ள மீட்டிங்க் ஹாலில் எங்களை உட்காரவைத்து போலீஸ்காரர்கள் சுற்றிலும் நின்று கொண்டார்கள். கொஞ்ச நேரம் கழித்து கலெக்டர் அம்மா (உ.பி. மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்) வந்தார்கள். நாங்கள் எல்லோரும் எழுந்திருந்து வணக்கம் சொன்னோம்.
அந்த அம்மா என்னைப் பார்த்து " என்னா மேன், என்னா தகறார் பண்றே? என்றார்கள். அவர்கள் கலெக்டராக வந்து இரண்டு மாதம்தான் ஆகிறது. இந்த இரண்டு மாதத்தில் அவர் கற்றுக்கொண்ட தமிழ் வார்த்தைகள் இந்த மூன்று மட்டும்தான். நான் பவ்யமாக எழுந்திருந்து தமிழில் ஏதோ சொல்லப்போனேன். அதற்குள் போலீஸ் கமிஷனர் ஆங்கிலத்தில் விலாவாரியாக எங்கள் சங்கத்தின் செயல்பாடுகளை கலெக்டர் அம்மாவிடம் சொன்னார்.
எனக்கு அவர் சொன்னது அரைகுறையாகப் புரிந்தது. அதாவது எங்களை பயங்கர தீவிரவாதிகள் என்று சொல்லுகிறார் என்பது வரைக்கும் என் அரைகுறை ஆங்கில அறிவிற்குப் புரிந்தது. கலெக்டர் அம்மாவும் ஆங்கிலத்தில் அவரிடம் இந்த ஆட்கள் எல்லாம் மிகவும் வயதானவர்களாகத் தெரிகிறது. உங்கள் மாமூல் முறைகளைக் கையாண்டீர்களானால் இவர்கள் மேல் லோகம் போய் சேர்ந்து விடுவார்கள். அப்புறம் என் பெயர் கெட்டுவிடும். கொஞ்சம் அறிவுரை சொல்லி சங்கத்தை உடனடியாக மூடச்சொல்லி அனுப்புங்கள் என்றார்.
போலீஸ் கமிஷனர் எங்களை வெளியில் கூப்பிட்டு வந்து, கலெக்டர் அம்மா சொன்னதைக் கேட்டீர்கள் அல்லவா? உடனடியாகப் போய் சங்கத்தைக் கலைத்து விட்டு அவரவர்கள் வீட்டுக்குப் போய் ஒழுங்காக இருங்கள் என்றார். நாங்களும் அவருக்கு மிக்க நன்றி சொல்லிவிட்டு ஒரு ஆட்டோ பிடித்து ஆபீஸ் வந்து சேர்ந்தோம்.
ஆபீசில் கட்டிடத்தின் சொந்தக்காரர் எங்களுக்காகக் காத்திருந்தார், எங்களைப் பார்த்தவுடன் "என்ன சார் வயதானவங்களாச்சேன்னு உங்களுக்கு கட்டிடத்தை வாடகைக்குக் கொடுத்தால் இப்படி கலாட்டா பண்ணுகிறீர்களே" என்று சத்தம் போட்டார். நாங்கள் அவரைப் பார்த்து மன்னித்துக்கொள்ளுங்கள் ஐயா. தெரியாமல் சில தவறுகள் நடந்துவிட்டது. நாங்கள் இப்போதே ஆபீசைக் காலி செய்து விடுகிறோம். நாங்கள் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்றோம். இதைக்கேட்டவுடன் அவருக்கு வாயெல்லாம் பல்லாக ஆகி விட்டது. சரி, சீக்கிரம் காலி பண்ணுங்கள் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.
நாங்கள் சங்கத்தைக் கலைப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டோம்.