இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசியும் வாழ்கின்றது. அவைகள் பிறக்கின்றன, வாழ்கின்றன, இறக்கின்றன. மனிதனைத் தவிர மற்ற ஜீவராசிகளுக்கு எந்தப் பிரச்சினையும் இருப்பதாகத் தோன்றவில்லை. அல்லது இப்படிக்கூறலாம். பிரச்சினைகளை அவை சாதாரணமாக, இயற்கையாக ஏற்றுக்கொள்கின்றன.
மனிதன் ஒருவன்தான் தன் சிந்திக்கும் திறனால் இயற்கையுடன் இசைந்து வாழ மறுக்கிறான். இயற்கையை தன் மனதுப்படி வளைக்க எண்ணுகிறான். வளைக்கிறான். இன்றைய பல நவீன உபகரணங்களுக் செயல் சக்திகளும் அதன் விளைவே.
ஆனால் அதனால் சில வேண்டாத விளைவுகளும் ஏற்படுகின்றன. அவைகளைக் களைய மனிதன் முற்படும்போது பல தடங்கல்கள் வருகின்றன. அவைகளில் முக்கியமான ஒன்று மனித இனத்தின் ஜனத்தொகை.
மனிதனின் வியாதிகளைக் கட்டுப்படுத்தி அவன் வாழ்க்கையில் உள்ள இயற்கை எதிர்ப்புகளை நீக்கி விட்டபடியால் மனிதன் அதிக நாள் உயிருடன் இருக்கிறான். மனிதனின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது. தவிர அவனுடைய அதீத தேவைகளுக்காக பல இயற்கை வளங்களை அழிக்க நேரிடுகிறது.
இப்படியே ஜனத்தொகை அதிகரித்து, அவனுடைய தேவைகளுக்காக இயற்கை வளங்களையும் அழித்துக்கொண்டே போனால் இந்த உலகம் என்ன ஆகும்? விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் பல சாதனைகள் நிகழ்ந்திருக்கின்றன.ஆனாலும் இயற்கையைக் காப்பி அடித்து ஒரு குண்டுமணி அரிசியைக்கூட நாம் இது வரை பெறவில்லை.
ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் ஒரு பிரளயம் வந்து உலகம் அழியும் என்று நம் புராண இதிகாசங்கள் சொல்கின்றன. அது உண்மையாகத்தான் இருக்குமோ என்று தோன்றுகிறது.