திங்கள், 11 ஜூலை, 2016
இனி வீட்டிற்கு சமையல் அறை தேவையில்லை.
இது என்னய்யா அநியாயமாக இருக்கு, வீட்டிற்கு சமையல் அறை இல்லாமல் எங்கே சமைப்பார்கள், எப்படிச் சாப்பிடுவார்கள் என்று நீங்கள் கேட்டால் உங்களுக்கு 60 வயதிற்கு மேல் ஆகிவிட்டது என்று அர்த்தம். உங்கள் வீட்டில் கல்யாண வயதில் ஒரு பையன் இருக்கிறான் என்றால் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. இந்தப் பதிவு உங்களுக்காகத்தான்.
முன்பெல்லாம், அதாவது 30 - 40 வருடத்திற்கு முன் ஒரு பையனுக்கு பெண் பார்க்கப் போனால் பையனுடைய அம்மா கேட்கும் முதல் கேள்வி "பொண்ணுக்கு சமையல் செய்யத்தெரியுமா" என்பதாகத்தான் இருக்கும். இன்று பெண் பார்க்கப்போகும்போது இந்தக் கேள்வியைக் கேட்டால் "என்ன, காட்டுமிராண்டி ஜன்மங்களாய் இருக்கிறார்கள்" என்ற கேள்விக்கு புரோக்கர் பதில் சொல்ல வேண்டி வரும்.
இப்படி இரண்டு மூன்று பார்ட்டி வந்து போனபின் புரோக்கருக்கு ஒரு புது அறிவுரை கொடுக்கப்படும். "இந்த மாதிரியெல்லாம் கேள்வி கேக்கற பார்ட்டிகளை இனிமேல் இங்கே கூட்டி வராதே" என்று சொல்லி விடுவார்கள். பொண்ணு என்ன படிச்சிருக்கா, என்ன வேலை பாக்கறா இந்த மாதிரி கேள்விகள்தான் அனுமதிக்கப்பட்டவை.
பெண்ணும் பையனும் ஒருவருக்கொருவர் பிடித்திருந்தால், தனியாகப் பேசுவார்கள். அப்புறம் இருவரும் ஓகே சொன்னால் மேற்கொண்டு விவரங்கள் பேசுவார்கள். இந்த மாதிரி பேசும்போதே பெண்ணின் அம்மா பெருமையாகச் சொல்லிக்கொள்வாள். என் பொண்ணை சமையலறைப் பக்கமே நான் விட்டதில்லை, என்பாள். பையனுடைய அம்மா, சீர் வரிசையாக பெண்ணுக்கு என்ன என்ன செய்வார்க்ள என்ற கணக்கிலேயே மூழ்கி இருப்பாள். பெண்ணின் அம்மா சொன்ன வார்த்தையைக் கேட்டிருக்க மாட்டாள்.
கல்யாணம் தடபுடலாக நடந்து முடிந்தது. பெண்ணிற்கு 200 பவுன் நகை. மாப்பிள்ளைக்கு ஒரு 80 லட்சத்தில் பிஎம்டபிள்யூ கார். பையனோட அம்மாவிற்கு 20000 ரூபாயில் பட்டுப்புடவை. வெள்ளிப் பாத்திரங்கள், இத்தியாதி. அம்மாவிற்கு வாயெல்லாம் பல். சம்பந்தியம்மா செய்திருக்கும் சீர் வரிசைகளை தன்னோட சொந்தக்காரர்களிடம் சொல்லிச் சொல்லி பெருமைப் பட்டுக்கொண்டாள்.
கல்யாணம் முடிந்தது. தம்பதிகள் பதினைந்து நாள் யூரோப்பிற்கு ஹனி மூன் போய் வந்தார்கள். ஊருக்குத் திரும்பின பின் இருவரும் பிஎம்டபிள்யூ காரில் வேலைக்குப் போய்வந்தார்கள். மாமியார்க்காரி வழக்கம்போல் சமையல் செய்து வந்தாள். இருவரும் திவ்யமாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். பத்து நாள் ஆயிற்று, பதினைந்து நாள் ஆயிற்று. மருமகள் சமையல் கட்டுக்கு வருவாள் வருவாள் என்று மாமியார்க்காரி எதிர் பார்த்துக் கொண்டேயிருந்தாள். அவள் அந்தப் பக்கம் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை.
இதற்கிடையில் சம்பந்தி அம்மாள் வந்தாள். அவளிடம் என்ன உங்க பொண்ணு சமையல் கட்டுப் பக்கமே வரமாட்டேங்கறா அப்படீன்னு சொன்னாள். அதுதான் நான் நீங்க பொண்ணு பார்க்க வரப்போவே சொன்னேனே, என் பொண்ணு சமையல் அறைப் பக்கமே வரமாட்டேன்னு, நீங்க அதைக் கேக்கலியா என்றாள். மாமியார்க்காரிக்கு தூக்கி வாரிப்போட்டுது. அதெல்லாம் எங்க வீட்டிற்கு சரிப்படாது, நீங்க ஒங்க பொண்ணைக் கூட்டிக்கிட்டுப் போய் ஒரு மாசத்தில சமையல் சொல்லிக்கொடுத்து அனுப்புங்கோ என்றாள்.
அந்த அம்மாவும் அப்படியே பெண்ணையும் மாப்பிளையையும் கூட்டிக்கொண்டு போனாள். அடுத்த வாரம் இரண்டு பேரும் தனிக்குடித்தனம் போய் விட்டதாகத் தகவல் வந்தது. சரி, இரண்டு பேரும் எப்படி சாப்பிடுகிறார்கள் என்று மாமியார்க்காரி விசாரித்தாள். விசாரித்ததில் தெரிந்தது.
பையனுக்கு காப்பி போடத்தெரியும். காலையில் எழுந்த தும் காப்பி போட்டு அவனும் அவன் பெண்டாட்டியும் குடிக்கிறார்கள். காலையில் அவர்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு மாமி இட்லி சுட்டுக் கொடுக்கிறாளாம். அங்கு ஆளுக்கு நாலு இட்லி வாங்கி சாப்பிட்டு விட்டு இருவரும் ஆபீஸ் போய்விடுவார்களாம்.
மதியம் ஆபீஸ் கேன்டீனில் சாப்பாடு. இரவு வீட்டிற்கு வந்ததும் ஏதாவது ஓட்டலுக்குப் போய் அங்கு இரவுச் சாப்பாட்டை முடித்து விட்டு வீட்டிற்கு வந்து படுத்துக் கொள்வார்களாம். ஞாயிற்றுக் கிழமை லீவு அன்று இருவரும் பொண்ணோட அம்மா வீட்டிற்குப் போய் விடுவார்களாம்.
இப்படி வாழ்க்கைதான் இனிமேல் நடக்கப் போகிறது. அப்புறம் வீட்டில் எதற்கு சமையல் அறை வைக்கவேண்டும்? தேவையில்லையே. செலவும் மிச்சம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)