வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

கோடீஸ்வரன் ஆக வேண்டுமா?


முதலில் லட்சாதிபதி ஆவதற்கு வழி சொல்லிக் கொடுக்கிறேன். பிறகு நீங்களாகவே கோடீஸ்வரன் ஆகிவிடுவீர்கள்.

அதிக சம்பளம் வாங்குபவர்களாக இருந்தாலும் குறைந்த சம்பளக்காரர்களாக இருந்தாலும் வரவிற்குள் செலவு செய்வதென்பது மிகவும் அவசியம். பல குடும்பங்கள் பொருளாதார ரீதியில் கஷ்டப்படுவதற்குக் காரணம் வரவுக்கு மீறி செலவு செய்வதுதான்.
இந்திய நாட்டில் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அதிகம். இதற்குக் காரணம் பல. அவைகளுக்கு சமீப காலத்தில் தீர்வு காண முடியாது. இருக்கும் நிலையில் என்ன செய்ய முடியும் என்றுதான் யோசிக்கவேண்டுமே தவிர, பறப்பதைப் பிடிப்பதற்கு ஆசைப்பட்டால் நடக்குமா?

உங்களுக்கென்ன, நீங்கள் மேல்மட்ட வர்க்கத்தினர், உங்களுக்கு கீழ் மட்டத்தில் இருப்பவர்களைப் பற்றி என்ன தெரியும் என்று கேட்கலாம். நானும் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டத்திற்கு வந்தவன்தான் என்று சொன்னால், உங்கள் காலம் வேறு, தற்போதைய காலம் வேறு என்று சொல்வார்கள். இது விதண்டாவாதம்தானே தவிர வேறு ஒன்றுமில்லை.
வரவு செலவுத் திட்டம், சிக்கனம், சேமிப்பு இந்த மூன்றும்தான் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிப்படை. என்னால் முடியாது என்று சொல்பவர்களுக்கு என்னிடம் எந்த பதிலும் இல்லை. இருப்பதை வைத்துக்கொண்டு முன்னேறுவோம் என்பவர்களுக்காக மட்டும்தான் இந்த ஆலோசனைகள்.

சபலங்களுக்கு எக்காரணத்தை முன்னிட்டும் இடம் கொடுக்கக்கூடாது. ஆடம்பரம் சாதாரண வாழ்க்கையில் தேவையில்லை. தங்கள் தகுதிக்கு மீறி எதையும் செய்யக்கூடாது. தங்கள் தகுதிக்கு ஏற்றது எது என்பது அவரவர்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயம். அனில் அம்பானி 100 கோடி ரூபாயில் வீடு கட்டியிருக்கிறார் என்றால் நாம் அந்த மாதிரி ஆசைப்பட முடியுமா?

வீட்டுச் செலவுகளை சிக்கனமாகச் செய்ய பல யோசனைகளை நடைமுறைப் படுத்தலாம். குடும்ப நபர்களின் ஆரோக்கியம் கெடாமல் குறைந்த செலவில் குடும்பத்தை நடத்தலாம். நல்ல அரிசி கிலோ 40 ரூபாய். அதே ரகத்தைச் சேர்ந்த குருணை அரிசி கிலோ 25 ரூபாய். கீரை வகைகள் உடம்புக்கு நலம் பயப்பவை. அதிக விலை கொடுத்து இங்கிலீஷ் காய்கறிகள் வாங்குவதை விட இது ஆரோக்கியமானது.
ராகி, சோளம், கம்பு ஆகியவை உடல் நலத்திற்கு ஏற்றவை. அரிசியை விட விலை குறைவு. ஓட்டலில் சாப்பிடுவதையும் சினிமா பார்ப்பதையும் நிறுத்தினால் எவ்வளவோ பணம் மிச்சமாகும். துணிமணிகள் ஆடம்பரமாகப் போடுவதால் எந்தப் பலனும் இல்லை. துணிகளை வீட்டிலேயே இஸ்திரி போட்டுக்கொள்ளலாம். இப்படி எவ்வளவோ வகைகளில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கலாம்.

சம்பளக்காரர்கள் கடைப்பிடிக்கவேண்டிய முதல் விதி. நீங்கள் இப்போது வாங்கும் சம்பளத்தில் பாதியை மட்டும்தான் உங்கள் சம்பளம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்குள்தான் உங்கள் வீட்டுச் செலவுகளையெல்லாம் செய்யவேண்டும். இது மிகவும் கஷ்டமான காரியம். இதுநாள் வரை முழு சம்பளத்தையும் செலவு செய்தே குடும்பத்தை நடத்த முடியவில்லை. பாதி சம்பளத்தில் எப்படி குடும்பம் நடத்த முடியும் என்று எல்லோரும் கேட்பீர்கள் என்பதை நான் அறிவேன்.
நீங்கள் வாழ்க்கையில் உண்மையாக முன்னேறவேண்டுமென்று நினைத்தால் இதைச் செய்தே ஆகவேண்டும். எப்படி செய்வது என்பதை அவரவர்கள் முடிவு செய்துகொள்ளவேண்டும்.

மீதி பாதி சம்பளத்தை பேங்கில் போட்டுவிடவேண்டும். அது நம் பணம் அல்ல என்று தீர்மானமாக இருக்க வேண்டும். அப்படி சேரும் பணத்தில் பாதி ஏதாவது அவசரச் செலவுகள் வரும்போது தீர்ந்துவிடும் மீது பாதிதான் சேமிப்பாக வளரும். இந்த கட்டுப்பாடான மனநிலை இல்லையென்றால் இப்போதுள்ள வாழ்க்கை முறைதான் உங்களுக்கு சாஸ்வதமாக அமையும்.  

புதன், 1 பிப்ரவரி, 2012

கூகுளின் பிளாக்.மாற்றங்கள்.

தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்து பார்க்கக் கூடாது. கூகுள்காரனுக்கு நம் இந்திய அரசு சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்திருக்கிறது. இந்தக் கட்டுப்பாட்டுகளுக்கு ஒத்துக் கொண்டால் இங்கே கடை விரிக்கலாம். இல்லையென்றால் கடையைக் கட்டு என்று இந்திய அரசு சொல்லி. ஒரு காலக்கெடுவும் நிர்ணயத்து விட்டது.

இந்த செய்தியெல்லாம் பிளாக் உபயோகிப்பவர்களுக்கு ஊடகங்கள் வாயிலாக ஏற்கனவே அறிந்த செய்திதான். இருந்தாலும் கூகுள்காரன் சொல்லாமல் கொள்ளாமல் இப்படிச் செய்துவிட்டானே என்கிற ஆதங்கம் பலருக்கு இருப்பதைப் பதிவுகள் வாயிலாக உணர முடிகிறது.

நம் பாட்டன் சம்பாதித்த சொத்து ஒன்றையும் கூகுள்காரன் பறித்துக் கொள்ளவில்லை. அவன் இடத்தை நமக்கு இலவசமாக உபயோகிக்க கொடுத்திருக்கிறான். அதற்கு அவன் என்ன நிபந்தனைகள், சட்டதிட்டங்கள் போட்டாலும் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

இல்லையென்றால் வேறு இடத்திற்கு குடி பெயர வேண்டும். நான் வயதான காலத்தில் வேறு இடம் பார்ப்பதாக இல்லை. இருக்குமிடமே சொர்க்கம் என்று வாழப்போகிறேன்.

திங்கள், 30 ஜனவரி, 2012

ஒரு கற்பனை நிகழ்வு (நிஜம்)



சமீபத்தில் ஒரு நாள் என் மச்சினன் வந்திருந்தான். அவன் வரும்போது நான் கணினியில் மும்முரமாக இன்டர்நெட்டில் பிளாக் பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் வந்ததைக் கூட கவனிக்கவில்லை. அவனாக என்னைக் கூப்பிட்டபோதுதான் அவன் வந்திருப்பது தெரிய வந்தது. பிறகு நடந்ததைப் பாருங்கள்.

மச்சினன்: என்னங்க மாமா, நான் வந்ததக் கூடப் பாக்காமெ என்ன பண்ணிட்டிருக்கீங்க?

மாமா: வா மாப்ளே, கம்ப்யூட்டரில் இன்டர்நெட் பார்த்திட்டிருக்கேன்.

மச்சினன்: இன்டர்நெட்னா அது என்னங்க மாமா?

மாமா: டேய், அதெல்லாம் சொன்னா உனக்குப் புரியாதுடா.

மச்சினன்: உங்களுக்குச் சொல்லத் தெரியல்ல, அத மறைக்கறதுக்கு இந்த சமாதானம் சொல்றீங்க.

மாமா: டேய், அது தெரியாமயா கம்ப்யூட்டர் வாங்கி வச்சிருக்கிறேன்.

மச்சினன்: அப்போ எனக்கு இன்டர்நெட்டுன்னா என்னன்னு சொல்லுங்க.

மாமா: அது ஒரு பிரபஞ்சம் மாதிரி. ஆரம்பம் எது, முடிவு எதுன்னே தெரியாது. சுரங்கத்தை வெட்டினா எப்படி போய்ட்டே இருக்குமோ அந்த மாதிரி இதுலயும் போய்ட்டே இருக்கும். சில சமயம் உள்ளே போய்ட்டு வெளில வரமுடியாமயும் போயிடும்.

மச்சினன்: அதுல நீங்க என்ன பண்ணறீங்க.

மாமா: நானா, அதுல பிளாக் எழுதறேன்.

மச்சினன்: அதென்னங்க பிளாக்கு, அப்படீன்னா என்னங்க மாமா?

மாமா: அது வந்து இன்டர்நெட் ஒரு பெரிய உலகம்னு சொன்னனில்லயா? அதுல ஒரு ஊர்ல ஒருத்தன் பெரிய சுவர் கட்டி உட்டுருக்கான். யார் வேணும்னா போயி அந்த செவுத்தில அவங்கவுங்களுக்கு தோண்றத எழுதி வச்சுக்கலாம். அதுதான் பிளாக்கு.

மச்சினன்: ஏன் மாமா அப்ப அந்த செவுத்த கட்டி வச்சிருக்கிறவன் ஏதாச்சும் வாடகை கேக்கமாட்டானா?

மாமா: இப்பத்திக்கு சும்மாதான் கொடுத்திருக்கான். பின்னாடி எப்பவாச்சும் காசு கேட்டாலும் கேப்பான். அப்படி காசு கேட்டான்னா, இப்ப பிளாக் எழுதிட்டு இருக்கறவென்லாம் துணியக் காணோம், துண்டக் காணோம்னு ஓடிப்போயிடுவாங்க.

மச்சினன்: இப்படி பிளாக் எழுதறீங்களே, அதனால என்ன வருதுங்க மாமா?

மாமா: ஒரு சிங்கிள் டீக்குக் கூட வக்கில்லே மாப்பளே.

மச்சினன்: அப்பறம் எதுக்கு இந்த கசமாலத்தைக் கட்டீட்டு அளுகிறீங்க, மாமா?

மாமா: அதுல பாரு மாப்ள, இந்த பிளாக் எழுதறது சீட்டாட்டம் மாதிரி. காசு வருதோ இல்லையோ, காலைல எந்திருச்ச ஒடனே கம்ப்யூட்டரத் தொறந்து பிளாக்கப் பாக்கலீன்னா பைத்தியம் புடிச்ச மாதிரி ஆகிப் போகுது மாப்ள.  

மச்சினன்: அக்கோவ், மாமாவுக்கு பயித்தியம் நல்லா முத்திப்போச்சு, அதுக்கு மந்திரிக்கோணும் அக்கா, எங்கூர்ல ஒரு நல்ல மந்திரவாதி இருக்கான் அக்கா, நான் இப்பவே போயி அவன கூட்டிட்டு வந்து ஒரு மண்டலம் மந்திரிச்சாதான் மாமா வழிக்கு வருவாரு அக்கா.

அக்கா: என்னமாச்சும் பண்ணி உங்க மாமாவை இந்தப் பயித்தத்திலிருந்து காப்பாத்திடறா தம்பி.

மச்சினன்: இப்பவே ஊருக்குப் போறேன் அக்கா.

முற்றிற்று