வியாழன், 4 ஆகஸ்ட், 2011

அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும் - பாகம் 1


மணற்கேணி கட்டுரைப்போட்டிக்கு இந்தக் கட்டுரையை எழுதி அனுப்பியிருந்தேன். நடுவர்களால் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை. எழுதினது வீணாகப் போகவேண்டாம் என்பதால் இந்தப் பதிவில் போடுகிறேன். கட்டுரையின் நீளம் அதிகமாக இருப்பதால் பிரித்து போடுகிறேன்.



ஆசிரியர் பெயர்:   Palaniappan Kandaswamy 

நிலத்தடி நீர் என்றால் சாதாரண மக்களுக்கும் தெரியும். நிலத்திற்கு அடியில் இருக்கும் நீர் என்று வார்த்தையிலிருந்தே புரிகிறது. நிலத்தின் மேற்பரப்பில் பெய்யும் மழைநீர் மண்ணிற்குள்ளே ஊடுருவி அடியில் இருக்கும் பாறைகளுக்கு மேல் சேர்ந்து நிலத்தடி நீர் ஆகிறது என்பது பாலபாடம். பாறைகள் பல அடுக்குகளாக இருக்கும். மேல் மட்டத்திலுள்ள பாறைகளில் உள்ள வெடிப்புகளின் ஊடே நீர் கசிந்து கீழே சென்று அதற்கடுத்த மட்டத்திலுள்ள பாறைகளின் மேலும் சேமிக்கப்படும். இவ்வாறு நிலத்தடி நீர் பல மட்டங்களில் சேமிக்கப்பட்டு இருக்கும். இந்த நிலத்தடி நீர், நிலமட்டத்தின் சரிவுகளுக்கு ஏற்ப பள்ளத்தை நோக்கி நகரும்/ஓடும். நீர் மெதுவாக நகர்ந்தாலும் ஓடுகிறது என்று சொல்வதுதான் மரபு. இந்த நீரோட்டத்திற்கு நிலத்தடி நீரோட்டம் என்று பெயர்.
                 
அடிமட்ட பாறைகள், சரிவான பூமிகளின் கடைசி பகுதியில், தரையின் மேல் மட்டத்திற்கு வந்து விடுவதால், அங்கே இந்த நிலத்தடி நீர் கசிந்து ஒன்று சேர்ந்து ஊற்றாக வெளிவருகிறது. இந்த ஊற்று நீர்கள் எல்லாம் சேர்ந்துதான் ஓடையாகவும், ஆறாகவும் மாறுகின்றன. மழை காலங்களில் நிலங்களின் மேல் மட்டத்திலிருந்து வடியும் நீரும் ஆற்றுடன் கலக்கும். ஆறுகள் கடைசியில் கடலில் கலந்து விடுகின்றன. கடல்நீர் மறுபடியும் ஆவியாகி, மேகமாகி, நிலப்பிரதேசங்களில் மழையாகப் பெய்கிறது. இந்தநீர்ச்சுழற்சியைப்பற்றி எல்லாரும் படித்திருப்பார்கள்.

இது இயற்கையின் நியதி. மனிதன் இயற்கை விதிகளில் தலையிடாத வரையில் இதுமாதிரிதான் நடந்து கொண்டிருந்திருக்கிறது. மனிதனும் முடிந்தவரை இயற்கையோடு ஒன்றிணைந்துதான் வாழ்ந்திருக்கிறான். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்தச்செய்தியை நன்றாக கவனத்தில் கொள்ளவும். நாடோடியாக அலைந்த காலம் போய், நிலையாக வாழும் நாகரிகம் தோன்றிய காலத்தில், நிலத்தடி நீர் ஆறுகளாக மாறி ஓடும் இடங்களில் மட்டுமே வாழ்ந்து, அங்கேயே ஆற்றுப்பாசனம் மூலம் விவசாயம் செய்து, அதிலிருந்து வரும் உணவுகளை உண்டு வாழ்ந்து வந்தான்.

காலப்போக்கில் ஆற்றுப்பகுதிகளின் சீற்றங்களை சமாளிக்க முடியாமலும், மற்றும் மக்கள் தொகை பெருகியதாலும் மழை நன்றாகப் பெய்யக்கூடிய மேட்டுப்பகுதிகளுக்கு மனிதன் குடி பெயர்ந்தான்.  அங்கு மானாவாரி விவசாயம் செய்து, கிடைக்கக்கூடிய உணவுகளை உண்டு வாழ்ந்தான். எதேச்சையாக நிலத்தை ஆழமாகத் தோண்டும்போது நீர் சுரப்பதைக் கண்டுபிடித்த பிறகு, கிணறுகள் தோன்றின. அவன் வாழக்கூடிய எல்லையும் விரிவடைந்தது. அதே நீரைக்கொண்டு விவசாயமும் செய்ய ஆரம்பித்தான். இவ்வாறுதான் நிலத்தடி நீரைக்கொண்டு செய்யப்படும் கிணற்றுப்பாசன விவசாய முறை பரவலாகப் பெருக ஆரம்பித்திருக்க வேண்டும். இது ஏறக்குறைய ஒரு இருநூறு முன்னூறு வருடங்களுக்கு முன்பு தோன்றியிருக்கலாம்.




தொடரும்...

புதன், 3 ஆகஸ்ட், 2011

கல்யாணம் ஏற்பாடு பண்ணுதல்




நாஞ்சொல்ற மொறைமைகஎல்லாம் 40-50 வருசத்துக்குமுந்தி நடந்ததுங்கோ.இப்பெல்லாம் பல மாத்தங்கவந்திருச்சுங்க.
ஒரு ஊட்ல வயசுக்கு வந்தபொண்ணோ, மாப்பிள்ளையோஇருந்தாக்காசொந்தபந்தமெல்லாம்அவுங்கவுங்களுக்கு தெரிஞ்சஜோடியப்பத்தி சொல்லுவாங்க.இப்பத்த மாதிரி நம்முளுக்குஎன்னான்னு ஒதுங்கமாட்டாங்கஅப்படி சொன்னதுபோக, நெருங்கினசொந்தத்துக்குள்ளும் பொண்ணுமாப்புள்ள பாக்கறதுண்டுங்க.மாமன்புள்ளஅத்தைபுள்ளய்ன்னு இருந்தா ஒண்ணுக்குள்ளஒண்ணா இருக்கட்டுமுன்னு கட்டி வைக்கிறது வழக்கமுங்கோ.அப்பத்தான் சொந்தம் உட்டுப்போகாமெ இருக்குமுங்க.

அப்பிடி சொந்தத்துல ஒரு எடமும் இல்லைனாத்தான் வெளில பொண்ணோமாப்பிள்ளயோ தேடுவாங்கஅப்பிடியும் ரொம்ப தூரமெல்லாம் போகமாட்டாங்கஏதாவது  விசேசம்னா நடந்துபோய்ட்டு வர்ரமாதிரி தூரமாத்தான் இருக்கோணும்ரொம்பவசதியா இருக்குறவங்கதான் தூரமா இருந்தாலும் பரவால்லீன்னு நெனப்பாங்கஅவங்க போகவர வண்டிவாசி வச்சிருப்பாங்கமாட்டு வண்டிகதானுங்க.

இப்ப மாதிரி புரோக்கர்களோதிருமண அமைப்புகளோ அப்ப கிடையாதுங்கஅப்படி தோதான எடமுன்னு தெரிஞ்சா,யாராவது பொது மனுசரெ உட்டு பொண்ணு கேப்பாங்கமாப்பிள்ள ஊட்டுல இருந்துதான் மொதல்ல பொண்ணு கேட்டுஆளு உடோணுமுங்கபொண்ணு ஊட்லேர்ந்து மொதல்ல மாப்பிள்ள கேட்டு அவங்க ஊட்டுக்குப்போனாஅது ரொம்ப மானக்கேடான விசயமுங்கஅப்பறமுங்க அப்பெல்லாம் கொளந்த பொறந்தா சாதகம் எளுதற வளக்கம் கிடையாதுங்கஏன்னாஅப்பெல்லாம் ஊர்ல பெரிய வசதியானவங்கஊட்லதான் கெடியாரமே இருக்குமுங்ககொளந்த பொறந்தநேரத்தைக்குறிச்சு வச்சு ஜாதகம் எளுதறது ரொம்பக் கம்மிங்க.


அதனால பொண்ணு மாப்பிள்ளஜோடிப்பொருத்தம் சரியா இருந்து ரெண்டுஊட்டுக்காரங்களுக்கும் புடிச்சுப்போச்சுன்னாசகுனம் பாப்பாங்கஅதாவது பொண்ணுப் பாக்கறதுக்குண்ணு நாலு பேரு போவாங்க இல்லீங்களாஅப்போ எதிர்ல நல்ல சகுனம்கண்ணுல படோணுமுங்கஅதாவதுசுமங்கலிப்பொம்பள,பசுமாடுஇப்படி ஏதாச்சும் ஒண்ணு கண்ணுல பட்டாசரிஇந்த எடத்தை முடிச்சுடுவோம்னு முடிவு பண்ணுவாங்கஏதாச்சும்கெட்ட சகுனமா தென்பட்டா அந்தக் காரியத்தெ நிறுத்திப்போடுவாங்க.

மாப்பிளை பொண்ணைப்போயி அவங்கூட்ல பாக்கறதுங்கிற வளக்கமெல்லாம் அப்போ கெடயாதுங்கஎங்கயாச்சும் கோயல் கொளத்துல பாத்தாத்தான் உண்டுஅது மாதிரித்தான் பொண்ணும் மாப்பிள்ளய பாத்திருக்காதுங்கபெரியவங்க பாத்துமுடிவு பண்ணுனா அதுக்கு அப்பீலே இல்லைங்கோ.
இதுக்கு மேலயும் சில பேரு கோயில்லெ பூக்கேட்டு முடிவுபண்ணீக்கலாம்னுரெண்டு ஊட்டுக்காரங்களும் அவங்கூருகோயிலுக்குப் போவாங்கஅங்க போயி செகப்பு பூ ஒருபொட்டலத்திலியும்வெள்ளைப்பூ ஒரு பொட்டலத்திலயும் கட்டிசாமிக்கு முன்னால வச்சு பூசை பண்ணுவாங்கமொதல்லயேரெண்டு பேரும் வெள்ளப்பூ வந்தா கல்யாணத்தெ நடத்தலாம்னுபேசி வச்சுக்குவாங்கபூச முடிஞ்சதும் அங்க இருக்கிற ஒருசின்னப்புள்ளய கூப்பிட்டு அந்த ரெண்டு பொட்டலத்துல ஒண்ணஎடுக்கச்சொல்லுவாங்கஇவிங்க நெனச்ச வெள்ளப்பூ அந்தபொட்டலத்துல இருந்துச்சின்னாஆஹாசாமிபூக்குடுத்துட்டுதுன்னு போய் மேக்கொண்டு ஆக வேண்டியதப்பாப்பாங்கவேற பூ வந்திருச்சுன்னாசாமி பூக்குடுக்கலஎன்னபண்றதுவேற எடம் பாக்க வேண்டியதுதான் என்று சற்றுவிரக்தியுடன் வீடு திரும்புவார்கள்.


சாமி பூக்கொடுத்த உடனே மத்த காரியங்களைப்பாக்கஆரம்பிப்பாங்கமொதல்லே கல்யாணத்துக்கு நல்லநாளுகுறிக்கோணும்உள்ளூர்ல இல்லேன்னா பக்கத்தூர்லஇவங்களுக்குன்னு காசா நல்ல நாளு பாக்கற அய்யருஒருத்தரு இருப்பாருஅவர் கிட்ட போயி நாளு குறிச்சுவாங்குவாங்கநிச்சயம் பண்றதுக்குன்னு ஒரு நாளுமுகூர்த்தத்திற்குன்னு ஒரு நாளு குறிச்சு வாங்கீக்குவாங்கஅப்பொறம்பொண்ணு ஒரப்பு பண்றதுன்னு ஒரு பளக்கம்அன்னிக்குதான்மொறையா பொண்ணு கேக்கறது நடக்கும்ஒரு பத்து பேரு,முக்கியமா அண்ணந்தம்பிமாமன்மச்சான்நெருங்கினபங்காளிங்கரெண்டு தாயாதிகள் எல்லாம் போவாங்க.

இதுல பங்காளின்னா ஆருதாயாதின்னா ஆருன்னு நீங்கதெரிஞ்சுக்கோணும்ஒரே பூட்டனுக்கு (முப்பாட்டனுக்கு அப்பா)வளி வந்த அண்ணன் தம்பிகள் எல்லாம் பங்காளுங்கன்னுசொல்றதுஏன்னா அவங்களுக்கு வந்த சொத்து வழிவழியாபங்குபோட்டு வந்திருக்கும்அதனால பங்காளிகள்னுசொல்லுவாங்கஎதோ ஒரு சமயத்துல பங்கு போடறதுலசண்டை வந்தாலும் வந்திருக்கும்அதைத்தான்பங்காளிச்சண்டைன்னு சொல்றதுஎன்ன சண்டை சச்சரவுஇருந்தாலும் நல்லது பொல்லாததுக்கு உட்டுக்குடுக்கமாட்டாங்கஎல்லாரும் கலந்துக்குவாங்க.
கவுண்டமாருகளுக்குள்ளே பல கூட்டங்கள்னு இருக்குதுன்னுமுன்னமேயே சொல்லீருக்கேன்எங்க கூட்டத்துக்குமுழுக்காதங்கூட்டம்னு பேருஒரு குடும்பத்துல பொறக்கறஆண் வாரிசுகளெல்லாம் இதே கூட்டம்தான்பொண்ணுங்களெயாரு ஊட்டுக்கு கட்டிக்கொடுக்கறமோ அந்தக்கூட்டத்தெசேந்தவளாகி விடுவா.

ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவங்க வேற ஊர்லயும் இருப்பாங்க.ஆனா அவுங்க இந்த ஊரச்சேந்தவங்களுக்கு பங்காளியாஇருக்கமாட்டாங்கசொத்துல பங்கு வந்தாத்தான் பங்காளின்னுசொல்வோம்அப்படி வேற ஊர்லெ இருக்கெறவங்களெதாயாதின்னு சொல்ற வளக்கமுங்கஇப்படி ரெண்டு ஊர்லஇருக்கறவங்க ஒருத்தருக்கொருத்தர் தாயாதிங்கஇதுஎதுக்குன்னாஒரு ஊட்ல நல்லது பொல்லாதது நடந்துச்சுன்னா,அவங்க பங்காளிகளே சீர்பாரெல்லாம் செய்யப்படாதுங்கவேறஊருல இருக்கற தாயாதிங்கதான் செய்யோணும்அதனாலஊர்லெ மானமா வாளோணும்னா எல்லா பங்காளிகளயும்தாயாதிகளயும் நல்ல ஒறவுல வச்சுக்கோணுமுங்க.இல்லேன்னாகடசீ நேரத்துல கால வாரி உட்ருவாங்க.

பொண்ணு ஒரப்பு பண்றதுக்கு இவங்கெல்லாம் வேணுமுங்கோ.ஒரப்பு பண்றதுன்னா என்னன்னாக்காமாப்பிள்ள ஊட்ல இருந்துஎதாச்சும் பலகாரம்பூவுவெத்தலபாக்கு இதெல்லாம்கொண்டுட்டு போகணுங்கமுன்னாலயே சொல்லிவச்சுட்டுத்தான் போவாங்கபொண்ணு ஊட்லயும் அவங்கதாய்துபாய்து எல்லாரும் கூடியிருப்பாங்கமாப்பிள்ளஊட்டுக்காரங்க வந்த ஒடனே “வாங்க வாங்க ஒறம்பரக்காங்கன்னு வாய் நெறய சொல்லி வரவேப்பாங்கஎல்லாத்துக்கும்குடிக்க தண்ணி குடுப்பாங்கஇது ரொம்ப முக்கியமுங்க.இல்லீன்னா பொண்ணூட்டுக்காரங்களுக்கு பக்குவம்பத்தாதுன்னு சொல்லிப்போடுவாங்கஅப்பறம் எல்லாரும்ஊட்டுக்குள்ள போயி ஆஜாரத்துல பாய் போட்டிருக்கும்அதுமேல உக்காருவாங்க.
பொண்ணூட்டுக்காரங்களும் எதுத்தாப்ல உக்காந்திருப்பாங்க.எல்லாரும் எதுக்கு வந்திருக்காங்கங்கறது எல்லாத்துக்கும்தெரியும்இருந்தாலும் பொண்ணூட்டுக்காரங்கள்லெ பெரியவங்கஒருத்தருமாப்பிள்ள ஊட்டுக்காரங்களப்பாத்து, “என்னங்கஊர்லஎல்லாரும் நல்லா இருக்காங்களாமளைமாரியெல்லாம்ஒளுங்காப்பேயுதுங்களாஎன்ன ஜோலியா இத்தன தூரம்எல்லாருமா சேந்து வந்திருக்கீங்க” அப்படீம்பாருமாப்பிள்ளஊட்டுக்காரங்கள்லெ வெவரமா ஒருத்தரும் இல்லாட்டி இதுக்குஎன்ன சொல்றதுன்னு தெரியாமெ முளிப்பாங்கஅவுங்கமுளிச்சிட்டிருக்கட்டும்நாம நாளக்கி பாக்கலாங்களா?

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

காப்பி பேஸ்ட் கலைஞர்கள்

பதிவர்களில் பல வகை இருக்கிறார்கள்.

பிரபல பதிவர்கள்:  இவர்கள் என்ன பதிவிட்டாலும் ஜே போடுவதற்கு ஒரு கூட்டம் இருக்கறது. இவர்கள் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்.

மொக்கைப்பதிவர்கள்:  இவர்கள் பதிவில் ஒரு விஷயமும் இருக்காது. ஆனால் முந்நூறு பின்னூட்டங்கள் கண்டிப்பாக போடப்படும்.

சாதாரணப் பதிவர்கள்:  கோயில், குளங்கள், பஜ்ஜி, போண்டா, எங்க வீட்டுக் கல்யாணம் இவைகளைப் பற்றி எழுதுபவர்கள். பதிவுலகில் இவர்கள்தான் மெஜாரிட்டி.

நவயுகப் பதிவர்கள்:  இவர்கள் அறிவு ஜீவிகள். சமூகத்தைச் சீர்திருத்தப் போகிறவர்கள். புதுப் புது தலைப்புகளில் பதிவு போடுவார்கள். ஆனால் அவ்வப்போது என் பதிவை இவன் திருடீட்டான், அவன் திருடீட்டான் என்று புலம்பல் பதிவுகளும் போடுவார்கள்.

காப்பி பேஸ்ட் பதிவர்கள்:  இவர்கள் பாடுதான் இன்று மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இவர்கள் சொந்தமாக பதிவு எழுதி தங்கள் மூளையை வீணாக்க மாட்டார்கள். ஏனென்றால் அது இல்லை. ஆகவே அடுத்தவர்களின் பதிவை அப்படியே காப்பி செய்து தங்கள் பதிவில் பேஸ்ட் செய்து விடுவார்கள். இது நியாயமா, அநியாயமா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் அதற்காக இவர்கள் கொடுக்கும் விலை மிகவும் அதிகம். மற்ற பதிவர்களெல்லாம் இவர்களை புழு, பூச்சியை விட கேவலமாகப் பேசுகிறார்கள்.

இந்த காப்பி பேஸ்ட் பதிவர்களுக்கு உதவுவதற்காக நான் செய்த உத்தி என்னவென்றால், கீழே கண்ட அறிவிப்பை என் பதிவின் தலைப்பிலேயே கொடுத்து விட்டேன்.

இந்தப் பதிவில் பதியப்படும் கருத்துக்கள் பொது மக்கள் மற்றும் சகபதிவர்கள் உபயோகத்துக்காக...தாராளமாக copy, paste செய்து கொள்ளலாம். எங்கிருந்து எடுத்தோம் என்று சொல்ல வேண்டியதில்லை.அப்புறம் இன்னொரு வருத்தமான செய்தி: இந்தப் பதிவில் பின்னூட்டங்கள் மற்றும் ஓட்டுப் பட்டைகள் உண்டு.

ஆனால் இதில் மிகவும் வருத்தமான செய்தி என்னவென்றால், என்னுடைய பதிவுகளை இதுவரை யாரும் காப்பி பேஸ்ட் செய்ய மாட்டேனென்கிறார்கள். ஒரு வேளை என்னுடைய பதிவுகள் காப்பி பேஸ்ட் செய்வதற்கு லாயக்கற்றவையோ என்னமோ, தெரியவில்லை.

இது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. தூக்குப்போட்டுக்கொண்டு செத்துப்போய் விடலாமா என்று கூடத் தோன்றுகிறது. ஆனால் அதற்கும் வழியில்லாமல் எங்க ஊர்ல இருக்கிற புளிய மரத்தையெல்லாம் ரோட்டை அகலப்படுத்துகிறேன் என்று வெட்டிவிட்டார்கள். புளிய மரத்தில் தூக்குப் போட்டுக் கொண்டால்தான் பேயான பிறகு அங்கேயே வசிக்கலாம்?

சக பதிவர்களிடமிருந்து நான் கேட்கும் உதவி என்னவென்றால், உங்கள் ஊரில் எங்காவது புளியமரம் தென்பட்டால் உடனே எனக்குத் தெரிவித்தால் உங்களுக்கு கோடி புண்ணியம் சேர இறைவனை வேண்டிக்கொள்வேன்.