வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

புத்தகங்கள் ஒருவனின் நண்பர்கள் - பாகம் 1


இந்த வாசகத்தை 60 வயதைக் கடந்தவர்கள் அநேகமாகக் கேள்விப் பட்டிருக்கலாம். ஆனால் இன்றுள்ள வாலிபர்களுக்கு கணினியும் தொலைக்காட்சிப் பெட்டியுமே நண்பர்கள்.

சார்லஸ் டிக்கன்ஸ் என்பவர் புகழ் பெற்ற ஆங்கில நாவலாசிரியர். அவருடைய 200 வது பிறந்த நாள் விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது வெளியான ஒரு செய்தி. இளைஞர்களிடையே எடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் அவருடைய நாவலைப் படிக்க இப்போதைய இளைஞர்களுக்குப் பொறுமை இல்லை என்று சொல்லியிருந்தார்கள். சார்லஸ் டிக்கன்ஸின் புத்தகங்கள் ஒவ்வொன்றும் 500 பக்கங்களுக்குக் குறையாமல் இருக்கும்.

இன்றைய வாரப் பத்திரிக்கைகளிலேயே ஒரு பக்கத்திற்கு மேல் வரும் எந்தச் செய்தியையும் இன்றைய இளைஞர்கள் படிப்பதில்லை என்று கேள்விப்பட்டேன். இந்த நிலை எதைக் காட்டுகின்றது என்றால் இன்றைய இளைஞர்கள் எந்தக் காரியத்திலும் ஆழமாக ஈடுபடுவதில்லை என்பதுதான் அந்த உண்மை. டிவி பார்க்கும்போதே நிமிடத்திற்கு ஒரு சேனலை மாற்றுவதுதான் இன்றைய இளைஞர்களின் கலாசாரம்.

இந்த செய்தியைப் படித்தவுடன் நான் அந்தக் காலத்தில் படித்த புத்தகங்கள் நினைவுக்கு வந்தன. நான் 5 ம் வகுப்பு படிக்கும் காலத்திலேயே ஆனந்தவிகடன் படிக்கும் வழக்கம் ஆரம்பமாகிவிட்டது. பக்கத்து வீட்டில் விகடன் வாங்குவார்கள். அவர்கள் படித்தபின் நான் அதை இரவல் வாங்கிப் படிப்பேன். துணுக்குகள், யுத்தச்செய்தி, சசியின் ஒரு பக்கக் கதைகள், தேவன், லக்ஷ்மி ஆகியோரின் தொடர்கதைகள், இப்படி பல ஆசிரியர்கள் அறிமுகமானார்கள். பிறகு கல்கி. அப்புறம் குமுதம் + கல்கண்டு.

ரொம்ப நாள் கோவையிலேயே முதல் ஆளாக குமுதம் ஏஜன்டிடம் போய் குமுதம் பார்சலைப் பிரித்தவுடன் முதல் காப்பியை (நான்கு அணா விலை) வாங்கி படித்துக் கொண்டே நடந்து வீடு வருவதற்குள் படித்து முடித்து விடுவேன். பிறகு அவற்றில் வரும் தொடர்கதைகளைச் சேர்த்து பைண்ட் பண்ணிப் பாதுகாத்து வந்ததெல்லாம் அந்தக்காலம்.

என் பெரியம்மா பையன் மூலமாக நான் நாவல்களுக்கு அறிமுகமானேன். முதலில் துப்பறியும் நாவல்கள், பிறகு சமூக நாவல்கள். கோவையில் மணிக்கூண்டு எல்லோருக்கும் தெரியும். அங்கு அந்தக் காலத்தில் ஒரு லைப்ரரி இருந்தது. அதில் புத்தகம் எடுத்து வீட்டுக்குக் கொண்டு வரவேண்டுமென்றால் ஸ்கூல் ஹெட்மாஸ்டரிடம் கடுதாசி வாங்கி, ஐந்து ரூபாய் டிபாசிட் கட்டி பிறகுதான் புத்தகங்கள் எடுத்துவர முடியும். எப்படியோ தில்லுமுல்லு செய்து ஐந்து ரூபாய் சேர்த்துவிட்டேன். ஹெட்மாஸ்டரிடம் லெட்டர் வாங்குவது என்பது அந்தக் காலத்தில் சிம்ம சொப்பனம்.

இதை எப்படி சமாளித்தேன் என்று அடுத்த பகுதியில் பார்ப்போமா

வியாழன், 9 பிப்ரவரி, 2012

இந்தியா வல்லரசு ஆகப்போகிறது !



ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் ஒவ்வொரு சிறப்பான குணம் உண்டு.
ஜப்பானிய நாட்டின் தேசிய குணம் வேலை, வேலை, வேலை. இதைத் தவிர அவர்களுக்கு வேறு ஒன்றும் பொருட்டல்ல. வேலை நிறுத்தம் செய்வதாயிருந்தால் சாதாரணமாகச் செய்யும் வேலையைவிட அதிகமாகச் செய்வார்கள்.

ஜெர்மானியர்கள் எதைச் செய்தாலும் நுணுக்கமாகவும் துல்லியமாகவும் செய்வார்கள் என்று பிரசித்தம். ஐரோப்பியர்கள் நேரம் தவறாமைக்குப் பெயர் போனவர்கள். அமெரிக்கர்கள் எதைச் செய்தாலும் பிரம்மாண்டமாகச் செய்வார்கள்.

வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த அனைவரும் தங்கள் வாழ்க்கையில் ஒரு கட்டுப் பாட்டுடன் வாழ்கிறார்கள். எதைச் செய்தாலும் அதில் ஒரு ஒழுங்கு இருக்கும். இதை நான் நேரில் கண்டு அனுபவித்திருக்கிறேன்.

ஆனால் இந்திய நாட்டு மக்களின் குணம் என்னவென்று கேட்டால் நாம் தலைகுனிவதை விட வேறு ஒன்றும் செய்வதற்கில்லை. இந்தியா பழம்பெரும் நாடு, ஆன்மீகத்தில் எங்களுக்கு ஈடு இணை யாரும் இல்லை, அந்தக் காலத்திலேயே விவேகானந்தர் அமெரிக்கர்களுக்கு ஆன்மீகம் சொல்லிக் கொடுத்திருக்கிறார் என்று பழம் பெருமை பேசுவதைத் தவிர நாம் எதில் வல்லவர்கள் என்று யோசித்தால் வெட்கமாக இருக்கிறது.

அமெரிக்கர்களைப் போல் பெரிதாக செய்வதாயிருந்தால் நம் தலைவர்கள் செய்த ஊழல் தொகையைச் சொல்லலாம். ஐரோப்பியர்களின் நேரம் தவறாமையைக் கடைப்பிடிப்பது என்பது எப்போதும் குறிப்பிட்ட நேரத்திற்கு வருவதில்லை என்ற கோட்பாடுதான். கட்டுப்பாடு என்று வந்துவிட்டால் நம்மை அடிக்க வேறு யாரும் இல்லை. வேலை நிறுத்தம் செய்வதிலாகட்டும், பஸ்களை எரிப்பதிலாகட்டும், மக்களின் அன்றாட வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைப்பதிலாகட்டும், இன்ன பிற காரியங்களில் இந்தியர்களை மிஞ்ச எந்த நாட்டினராலும் முடியாது.

இந்த லட்சணத்தில் 2020 ல் இந்தியா வல்லரசாகப் போகிறது என்று ஒரு தேசத் தலைவர் சொல்லிப் போயிருக்கிறார். சாதாரண அரசாக இருக்கும்போதே இப்படி என்றால் வல்லரசான பிறகு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்!!!!


செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

கூகுள் பிளாக்கர் அலம்பல்கள்?


கூகுள்காரன் URL மாற்றம் கொண்டு வந்தாலும் வந்தான் அடித்தது பதிவர்களுக்கு யோகம். எதைப் பற்றி எழுதுவது என்று முடியைப் பிய்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு எல்லாம் ஒரு வரப்பிரசாதமாகப் போய்விட்டது.

சும்மா அதைப் பற்றி எழுதினாலும் பரவாயில்லை, உங்கள் பிளாக்கில் தமிழ்மணம் தெரியவில்லையா, இப்படிப் பண்ணுங்கள், வேற திரட்டி தெரியலயா.அப்படிப் பண்ணுங்கள் என்று தொழில்நுட்ப பதிவர்கள் பண்ணும் அலம்பல்கள் இருக்கே, அதுதான் மனிதனைப் பாடாய்ப் படுத்துகின்றன.

இதில் ஒரு அரை டஜன் மாற்றங்களை என் பதிவில் புகுத்திப் பார்த்து என் பிளாக் வீணாய்ப் போயிற்று. இதற்கு நானேதான் முழுக்காரணம். மற்றவர்களைக் குறை கூறக்கூடாது.

இதனால் எல்லோருக்கும் நான் கூற விரும்புவது என்னவென்றால் கொஞ்ச நாள் பொறுமையாக இருந்தால் கட்டாயம் நல்ல காலம் பிறக்கும் என்பதே.


ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

சூதாட்டம் சட்டபூர்வமானதா?



சூதாட்டம் என்றால் என்ன? நாம் வெற்றியடைவோமா இல்லையா என்ற நிச்சயம் இல்லாத நிலையில் ஒரு பந்தயத்தில் பணம் கட்டி ஈடுபடுவது. இதில் பல மாதிரிகள் இருக்கின்றன. குதிரைப் பந்தயம், லாட்டரிச்சீட்டு, சீட்டாட்டம், கோழிச்சண்டை இப்படி பல வகைகளில் சூதாட்டம் நடைபெறுகின்றன. இவைகளில் சில சட்டத்தின்படி தடை செய்யப்பட்டுள்ளன. ஆகையால் அவைகளில் ஈடுபடுபவர்கள் திருட்டுத்தனமாக செயல்பட வேண்டியிருக்கிறது.

ஏன் சில சூதாட்டங்களுக்கு அனுமதியும் மற்றவைகளுக்கு மறுப்பும் இருக்கிறது என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

ஏன் மக்கள் சூதாட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால் பலரும் சொல்லும் பதில்அதில் ஒரு போதை இருக்கிறதுஎன்பார்கள். அது ஓரளவு உண்மைதான். சூதாடிப் பழகியவனுக்கு அது இல்லாமல் இருப்பது கடினம்.
சூது என்று வந்தாலே அதில் லாபம் நஷ்டம் இரண்டும் இருப்பது இயற்கை. லாபத்தைவிட நஷ்டம் அடைந்தோரின் எண்ணிக்கைதான் மிக அதிகம். (பார்க்க: மகாபாரதம்) அதனால்தான் பழங்காலம் முதற்கொண்டு சூதை வெறுக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மனித மனம் எது விலக்கப்பட்டிருக்கிறதோ அதன் மீதுதான் அதிக விருப்பம் கொள்கிறது.

பணம் வைத்து சீட்டு விளையாடுதல் உலகம் முழுவதும் நடக்கிறது. இதை சூது என்கிறோம். ஆனால் கண்ணுக்குத் தெரியாமல் பல சூதாட்டங்கள் சட்டபூர்வமாக நடக்கின்றன. ஆனால் அதை சூது என்று யாரும் சொல்வதில்லை.

பங்கு வர்த்தகம் என்று ஒன்று உலகில் இருக்கிறது. எத்தனை பேருக்கு அதில் அனுபவம் உண்டு என்பது தெரியவில்லை. அந்த வர்த்தகத்தில் நிறையப் பேர் பணம் சம்பாதித்திருக்கிறார்கள் என்ற செய்தி பல பத்திரிக்கைகளில், புத்தகங்களில் இருக்கிறது. இதை நம்பி இந்த பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் பலர் ஓட்டாண்டி ஆனதைப் பற்றி தெரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

பங்கு வர்த்தகம் இந்த மாதிரி நம்பினவர்களைக் கைவிட்டுவிடும் என்று கூறி இதற்கு ஒரு மாற்றைக் கொண்டு வந்தார்கள். யார்? உங்களிடம் பணம் உள்ளது, அது ஒரே இடத்தில் இருந்தால் துருப் பிடித்து விடும், ஆகவே அதை அடிக்கடி இடம் மாற்றி வைக்கவேண்டும், என்று ஆசை வார்த்தை கூறும் கில்லாடிகள் பலர் இந்த உலகில் உண்டு. இடம் மாற்றி வைக்கவேண்டும் என்பதின் அர்த்தம் என்னவென்றால், உங்களிடம் உள்ள பணம் எங்களிடம் வரவேண்டும் என்பதுதான்.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டதுதான் பரஸ்பர நிதி என்று சொல்லப்படும் மியூட்சுவல் பண்ட். இது ஒரு பக்காவான சூதாட்டம் என்று பலர் உணர்வதில்லை. இதை அரசு சட்டபூர்வமாக ஆக்கி இருக்கிறது. பல பேங்குகள், மற்றும் பிரபல நிதி நிறுவனங்கள் இதை நடத்துகின்றன.
இதை நம்பி பணம் போட்டு நஷ்டமடைந்தவர்கள் பலர். ஏன் நஷ்டம் வருகிறது? பேங்கில் சேவிங்க் அக்கவுன்டில் வைத்திருந்தாலும் நாலு பர்சன்ட் வட்டி வருமே, இதில் ஏன் நஷ்டம் வரவேண்டும். இதன் காரணங்களைக் கூறினால் என்னை குண்டர் சட்டத்தின் கீழ் உள்ளே தள்ளும் வாய்ப்பு இருப்பதால் தவிர்க்கிறேன். எனக்கு இப்போது இருக்கும் உடல்நிலையில் ஜெயில் சாப்பாடு ஒத்துக்கொள்ளாது.

ஜனங்களே, மனதை சபலத்திற்கு ஆளாக்காதீர்கள்.





வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

கோடீஸ்வரன் ஆக வேண்டுமா?


முதலில் லட்சாதிபதி ஆவதற்கு வழி சொல்லிக் கொடுக்கிறேன். பிறகு நீங்களாகவே கோடீஸ்வரன் ஆகிவிடுவீர்கள்.

அதிக சம்பளம் வாங்குபவர்களாக இருந்தாலும் குறைந்த சம்பளக்காரர்களாக இருந்தாலும் வரவிற்குள் செலவு செய்வதென்பது மிகவும் அவசியம். பல குடும்பங்கள் பொருளாதார ரீதியில் கஷ்டப்படுவதற்குக் காரணம் வரவுக்கு மீறி செலவு செய்வதுதான்.
இந்திய நாட்டில் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அதிகம். இதற்குக் காரணம் பல. அவைகளுக்கு சமீப காலத்தில் தீர்வு காண முடியாது. இருக்கும் நிலையில் என்ன செய்ய முடியும் என்றுதான் யோசிக்கவேண்டுமே தவிர, பறப்பதைப் பிடிப்பதற்கு ஆசைப்பட்டால் நடக்குமா?

உங்களுக்கென்ன, நீங்கள் மேல்மட்ட வர்க்கத்தினர், உங்களுக்கு கீழ் மட்டத்தில் இருப்பவர்களைப் பற்றி என்ன தெரியும் என்று கேட்கலாம். நானும் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டத்திற்கு வந்தவன்தான் என்று சொன்னால், உங்கள் காலம் வேறு, தற்போதைய காலம் வேறு என்று சொல்வார்கள். இது விதண்டாவாதம்தானே தவிர வேறு ஒன்றுமில்லை.
வரவு செலவுத் திட்டம், சிக்கனம், சேமிப்பு இந்த மூன்றும்தான் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிப்படை. என்னால் முடியாது என்று சொல்பவர்களுக்கு என்னிடம் எந்த பதிலும் இல்லை. இருப்பதை வைத்துக்கொண்டு முன்னேறுவோம் என்பவர்களுக்காக மட்டும்தான் இந்த ஆலோசனைகள்.

சபலங்களுக்கு எக்காரணத்தை முன்னிட்டும் இடம் கொடுக்கக்கூடாது. ஆடம்பரம் சாதாரண வாழ்க்கையில் தேவையில்லை. தங்கள் தகுதிக்கு மீறி எதையும் செய்யக்கூடாது. தங்கள் தகுதிக்கு ஏற்றது எது என்பது அவரவர்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயம். அனில் அம்பானி 100 கோடி ரூபாயில் வீடு கட்டியிருக்கிறார் என்றால் நாம் அந்த மாதிரி ஆசைப்பட முடியுமா?

வீட்டுச் செலவுகளை சிக்கனமாகச் செய்ய பல யோசனைகளை நடைமுறைப் படுத்தலாம். குடும்ப நபர்களின் ஆரோக்கியம் கெடாமல் குறைந்த செலவில் குடும்பத்தை நடத்தலாம். நல்ல அரிசி கிலோ 40 ரூபாய். அதே ரகத்தைச் சேர்ந்த குருணை அரிசி கிலோ 25 ரூபாய். கீரை வகைகள் உடம்புக்கு நலம் பயப்பவை. அதிக விலை கொடுத்து இங்கிலீஷ் காய்கறிகள் வாங்குவதை விட இது ஆரோக்கியமானது.
ராகி, சோளம், கம்பு ஆகியவை உடல் நலத்திற்கு ஏற்றவை. அரிசியை விட விலை குறைவு. ஓட்டலில் சாப்பிடுவதையும் சினிமா பார்ப்பதையும் நிறுத்தினால் எவ்வளவோ பணம் மிச்சமாகும். துணிமணிகள் ஆடம்பரமாகப் போடுவதால் எந்தப் பலனும் இல்லை. துணிகளை வீட்டிலேயே இஸ்திரி போட்டுக்கொள்ளலாம். இப்படி எவ்வளவோ வகைகளில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கலாம்.

சம்பளக்காரர்கள் கடைப்பிடிக்கவேண்டிய முதல் விதி. நீங்கள் இப்போது வாங்கும் சம்பளத்தில் பாதியை மட்டும்தான் உங்கள் சம்பளம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்குள்தான் உங்கள் வீட்டுச் செலவுகளையெல்லாம் செய்யவேண்டும். இது மிகவும் கஷ்டமான காரியம். இதுநாள் வரை முழு சம்பளத்தையும் செலவு செய்தே குடும்பத்தை நடத்த முடியவில்லை. பாதி சம்பளத்தில் எப்படி குடும்பம் நடத்த முடியும் என்று எல்லோரும் கேட்பீர்கள் என்பதை நான் அறிவேன்.
நீங்கள் வாழ்க்கையில் உண்மையாக முன்னேறவேண்டுமென்று நினைத்தால் இதைச் செய்தே ஆகவேண்டும். எப்படி செய்வது என்பதை அவரவர்கள் முடிவு செய்துகொள்ளவேண்டும்.

மீதி பாதி சம்பளத்தை பேங்கில் போட்டுவிடவேண்டும். அது நம் பணம் அல்ல என்று தீர்மானமாக இருக்க வேண்டும். அப்படி சேரும் பணத்தில் பாதி ஏதாவது அவசரச் செலவுகள் வரும்போது தீர்ந்துவிடும் மீது பாதிதான் சேமிப்பாக வளரும். இந்த கட்டுப்பாடான மனநிலை இல்லையென்றால் இப்போதுள்ள வாழ்க்கை முறைதான் உங்களுக்கு சாஸ்வதமாக அமையும்.