புதன், 31 டிசம்பர், 2014

தொழில் நுட்பப் பதிவர்களுக்கு ஓர் வேண்டுகோள்.

                                                
புதிதாக சந்தைக்கு வரும் தொழில் நுட்பங்களை மக்களுக்கு அடையாளம் காட்டுவதில் தொழில் நுட்பப் பதிவர்களின் பங்கு பாராட்டிற்குரியது. ஆனால் அதே சமயம் அவர்களுக்குப் பொறுப்பும் அதிகம் என்பதை அவர்கள் உணரவேண்டும். பதிவு போடுவதற்காக ஏதோ ஒன்றைப் பதிவிட்டு விட்டு, மற்றதெல்லாம் அவரவர்கள் பாடு என்று போவது நல்ல வழியல்ல.

என்னுடைய "மீண்டும் கையைச் சுட்டுக்கொண்டேன்"  என்கிற பதிவிற்கு வந்த பின்னூட்டங்களைப் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதில் பலரும் குறிப்பிட்ட ஒரு விஷயம் என்னவென்றால், "எந்தத் தளத்தில் கூறிய எந்த புரொக்ராமை தரவிறக்கும்போது அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டது, அதை எங்களுக்கும் சொன்னால் நாங்களும் எச்சரிக்கையாக இருப்போமே" என்பதாகும்.

நான் அதை வெளிப்படையாகச் சொல்லாததற்குக் காரணம் ஒரு பதிவர் தன்னையறியாமல் தவறு செய்திருக்கலாம். அதைச் சொல்லி அவருடைய மனதை புண்படுத்தக்கூடாது என்பதால்தான். ஆனால் பதிவுலக மக்கள் தொழில் நுட்ப விஷயங்களுக்கு தங்களுக்கு ஒரு வழி காட்டுதல் வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

ஆகவே தொழில் நுட்பம் பற்றி எழுதும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். இனி வரும் காலத்தில் நீங்கள் எழுதும் பதிவுகளில் கூறும் புரொக்ராம்களை நீங்களே சோதித்து அதில் உள்ள சாதக பாதகங்களையும் குறிப்பிட்டு எழுதினால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.

இது ஒரு வேண்டுகோள் மட்டுமே. இவன் யார் எங்களுக்கு நாட்டாமை செய்ய என்று யாராவது நினைத்தால் இந்தப் பதிவை எழுதியதற்காக என்னை மன்னித்து விடவும். அப்படி மன்னிக்க முடியாவிட்டால் ஏதாவது நல்ல சாபம் கொடுக்கவும். "துபாய் சென்று தங்கக்காரைப் பார்த்து வயிற்றெரிச்சலில் வேகவும்" என்கிற மாதிரி சாபம் கொடுக்கவும்.