தொழில் நுட்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொழில் நுட்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

வெற்றி, வெற்றி, வெற்றி

                              Image result for விண்டோஸ் 10
வெற்றி நமதே. ஒருவாறாக விண்டோஸ் 10 ஐ எனது கணினியில் நிறுவி விட்டேன். இதற்காக ஐந்து நாட்கள் ஆராய்ச்சி செய்து மூன்று இரவுகள் தூக்கம் விழித்து பாடுபட்டேன். 

இந்த விண்டோஸ் 10 பதிப்பை வெளியிடுவதற்கு பல நாட்கள் முன்பாகவே உங்களுக்கு இந்த பதிப்பு வேண்டுமா? வேண்டும் என்றால் முன்பதிவு செய்து கொள்ளவும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார்கள். நானும் ஆவலுடன் முன்பதிவு செய்து கொண்டேன். ஜூலை மாதம் 29ந் தேதி இந்தப் பதிப்பு உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது. வெளியிட்டவுடன் முன்பதிவு செய்தவர்களுக்கெல்லாம் இந்த பதிப்பை நாங்களாகவே உங்கள் கணினிக்கு அனுப்பி விடுவோம். இந்தப் பதிப்பின் கோப்புகள் எல்லாம் வந்து சேர்ந்தவுடன் உங்களுக்கு ஒரு அறிவிப்பு வரும். அந்த அறிவிப்பு வந்தவுடன் நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் மவுஸினால் ஒரே ஒரு கிளிக் செய்தால் போதும் என்றெல்லாம், ஈமு கோழிக்காரன் சொன்னது போல் ஆசை வார்த்தைகள் சொன்னார்கள். 

நானும் இதை முழுதாக நம்பினேன். ஜூலை 29ந் தேதி வந்தது. இணையத்தளங்களில் எல்லாம் சொர்க்கத்திற்கு ரோடு போட்டாயிற்று. அவரவர்கள் தங்கள் தங்கள் வாகனத்தில் சொர்க்கத்திற்குப் புறப்பட வேண்டியதுதான் என்று பயங்கரமாக விளம்பரங்கள் வந்தன. நானும் வாயை ஆவென்று திறந்து வைத்துக் கொண்டு காத்திருந்தேன். ஒரு நாள் ஆயிற்று, இரண்டு நாள் ஆயிற்று. ரோட்டையும் காணோம், வாகனத்தையும் காணோம். 

என்ன ஆயிற்று என்று விசாரித்தால், மைக்ரோசப்ட் காரன் மெதுவாகச் சொல்கிறான். இந்த விண்டோஸ் 10 க்கு ஏகப்பட்ட கிராக்கி. லட்சக்கணக்கான் பேர் முன் பதிவு செய்திருக்கிறார்கள். நாங்கள் இந்தப் புரொக்ராமை கொஞ்சம் கொஞ்சமாக, அலை அலையாக எல்லோருக்கும் அனுப்புகிறோம். உங்களுக்கு வந்து சேர சில நாட்கள் அல்லது சில வாரங்கள் அல்லது சில மாதங்கள்  ஆகலாம். நீங்கள் பொறுமை காக்க வேண்டும் என்கிறான். எப்படி இருக்கு பாருங்க கதை. எனக்கு வாழ்க்கையே வெறுத்துப்போச்சு.

எனக்குள் இருக்கும் ராட்சதனை மைக்ரோசாப்ட் காரன் உசுப்பி விட்டு விட்டான். அந்த ராட்சதன் சும்மா இருப்பானா? இரவு பகலாக சல்லடை போட்டுத் தேடி ஒரு குறுக்கு வழி இருப்பதைக் கண்டு பிடித்தான். பார்க்க- http://drpkandaswamyphd.blogspot.in/2015/08/windows-10-installation.html உடனே அந்த வழியில் போய் இந்த விண்டோஸ் 10 ஐ என் கணினிக்குக் கொண்டு வந்து நிறுவியாயிற்று. அனாலும் இந்தக் குறுக்கு வழியில் கல்லும் முள்ளும் அதிகம். மிகவும் ஜாக்கிரதையாகவும் மெதுவாகவும்தான் நடக்க முடியும். எப்படியோ தீவிர முயற்சி செய்து லட்சியத்தை அடைந்து விட்டேன்.

இந்த Teething Trouble என்பார்களே, அந்த தொந்திரவு இருக்கிறது. அந்தப் பற்களையெல்லாம், எனக்குப் பல் பிடுங்கின மாதிரி பிடுங்கி எறிந்து விட்டால் புது வேலைக்காரி ஒழுங்காக வேலை செய்வாள் என்று எதிர்பார்க்கறேன். பாருங்கள், இப்போ இந்தப் பதிவில எழுத்துக்களை பழைய மாதிரி கொண்டு வர முடியவில்லை. ஆனாலும் விடமாட்டேன். எப்படியாவது, எதையாவது நோண்டி சரி செய்து விடுவேன். அது வரைக்கும் பொறுத்துக் கொள்ளுங்கள்.

எப்படியோ இந்த ரகளையில் தமிழ் மணம் ரேங்க் 6 லிருந்து 8 ஆக உயர்ந்துள்ளது ஒன்றே ஆறுதலான விஷயம்.

புதன், 31 டிசம்பர், 2014

தொழில் நுட்பப் பதிவர்களுக்கு ஓர் வேண்டுகோள்.

                                                
புதிதாக சந்தைக்கு வரும் தொழில் நுட்பங்களை மக்களுக்கு அடையாளம் காட்டுவதில் தொழில் நுட்பப் பதிவர்களின் பங்கு பாராட்டிற்குரியது. ஆனால் அதே சமயம் அவர்களுக்குப் பொறுப்பும் அதிகம் என்பதை அவர்கள் உணரவேண்டும். பதிவு போடுவதற்காக ஏதோ ஒன்றைப் பதிவிட்டு விட்டு, மற்றதெல்லாம் அவரவர்கள் பாடு என்று போவது நல்ல வழியல்ல.

என்னுடைய "மீண்டும் கையைச் சுட்டுக்கொண்டேன்"  என்கிற பதிவிற்கு வந்த பின்னூட்டங்களைப் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதில் பலரும் குறிப்பிட்ட ஒரு விஷயம் என்னவென்றால், "எந்தத் தளத்தில் கூறிய எந்த புரொக்ராமை தரவிறக்கும்போது அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டது, அதை எங்களுக்கும் சொன்னால் நாங்களும் எச்சரிக்கையாக இருப்போமே" என்பதாகும்.

நான் அதை வெளிப்படையாகச் சொல்லாததற்குக் காரணம் ஒரு பதிவர் தன்னையறியாமல் தவறு செய்திருக்கலாம். அதைச் சொல்லி அவருடைய மனதை புண்படுத்தக்கூடாது என்பதால்தான். ஆனால் பதிவுலக மக்கள் தொழில் நுட்ப விஷயங்களுக்கு தங்களுக்கு ஒரு வழி காட்டுதல் வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

ஆகவே தொழில் நுட்பம் பற்றி எழுதும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். இனி வரும் காலத்தில் நீங்கள் எழுதும் பதிவுகளில் கூறும் புரொக்ராம்களை நீங்களே சோதித்து அதில் உள்ள சாதக பாதகங்களையும் குறிப்பிட்டு எழுதினால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.

இது ஒரு வேண்டுகோள் மட்டுமே. இவன் யார் எங்களுக்கு நாட்டாமை செய்ய என்று யாராவது நினைத்தால் இந்தப் பதிவை எழுதியதற்காக என்னை மன்னித்து விடவும். அப்படி மன்னிக்க முடியாவிட்டால் ஏதாவது நல்ல சாபம் கொடுக்கவும். "துபாய் சென்று தங்கக்காரைப் பார்த்து வயிற்றெரிச்சலில் வேகவும்" என்கிற மாதிரி சாபம் கொடுக்கவும்.

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

அமேசான் கிண்டிலும் டேப்ளெட்டுகளும்

       

                          டேப்ளெட்                                   அமேசான் கிண்டில்

நான் ஒரு அமேஸான் கிண்டில் வாங்கினதைப் பற்றி ஒரு நகைச்சுவைப் பதிவு எழுதியது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் தெரியாதவர்கள் இங்கே சென்று படித்துக் கொள்ளலாம்.

அதில் தமிழ் இளங்கோ கிண்டிலுக்கும் டேப்ளெட்டுக்கும் பயன்பாட்டில் என்ன வித்தியாசம் என்று எழுதுங்களேன் என்று கேட்டிருந்தார். பதிவு எழுத டாபிக் கிடைக்காமல் காய்ந்து கொண்டிருப்பவனுக்கு இது போதாதா? அதனால்தான் இந்தப் பதிவு.

இரண்டும் பார்ப்பதற்கு ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனால் அவைகளின் பயன்பாடுகள் வெவ்வேறு. டேப்ளட் ஒரு மினி கம்ப்யூட்டர். கம்ப்யூட்டரில் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் இதில் செய்யலாம். இன்டெர்நெட் மேயலாம். கூடுதலாக போன் மாதிரியும் கேமரா மாதிரியும் பயன்படுத்தலாம். பாட்டுக் கேட்கலாம். புத்தகம் படிக்கலாம். இன்னும் எத்தனையோ ...லாம், ...லாம். ஆனால் கொள்ளளவு (Capacity) கம்மி. பேட்டரி லைஃப் கம்மி.

டேப்ளெட்டுகள் எத்தனையோ கம்பெனிகள் தயாரிக்கின்றன. ஆனால் கிண்டில் அமேசான் மட்டுமே தயாரிக்கிறது.

அமேசான் கிண்டில் என்பது அமேசான்காரனின் விளம்பரக் கருவி.முக்கியமாக புக் ரீடர் மட்டுமே. கண்களுக்கு சோர்வு வராமல் புத்தகங்களைப் படிக்கலாம். கேம்ஸ் விளையாடலாம். பாட்டுக் கேட்கலாம். வை-பை மூலம் மட்டுமே இன்டர்நெட் தொடர்பு கிடைக்கும். போன் இல்லை. கேமரா இல்லை. பேட்டரி லைஃப் நீங்கள் உபயோகிப்பதைப் பொறுத்து சில மணி நேரங்கள் முதல் சில நாட்கள் வரை தாங்கும்.

நான் இதை வாங்கியது புத்தகங்கள் படிக்க மட்டுமே.

 பத்திரிகைகளில் விளம்பரம் வருவது மாதிரி இதில் அதை வாங்குங்கள், இதை வாங்குங்கள் என்று விளம்பரங்கள் சொல்லிக்கொண்டே இருக்கும். இது அமேசான்காரனின் விளம்பர உத்தி.

மொத்தத்தில் டேப்ளெட் குடும்ப்பப் பெண். கிண்டில் விலைமாது.

புதன், 19 அக்டோபர், 2011

பதிவுகளில் போட்டோக்களை பெரிதாகப் பார்க்க

பதிவுகளில் பலரும் போட்டோக்கள் போடுகிறார்கள். நானும் போட்டுக்கொண்டு இருக்கிறேன். அவைகளின் மேல் கர்சரை வைத்து இடது சிங்கிள் கிளிக் பண்ணினால் போட்டோக்கள் பெரிதாகவும் நன்றாகவும் தெரிகின்றன.
மேலும் அந்தப் பதிவில் உள்ள எல்லாப் போட்டோக்களும் கீழே தம்ப்நெய்ல் அளவில் தெரிகின்றன. அதில் எதை வேண்டுமானாலும் கிளிக் செய்து பெரிதாக்கிப் பார்க்கலாம். அல்லது மௌசை இடது கிளிக் செய்தாலும் அல்லது மௌஸ் ரோலரை சுழற்றினாலும் படங்கள் மாறுகின்றன.

இத்துடன் நான்கு படங்கள் இணைத்திருக்கிறேன். சோதனை செய்து பார்க்கவும்.





இதை பலர் ஏற்கனவே அறிந்திருக்கலாம். அவர்கள் இந்தப் பதிவைப் பார்த்து கேலி செய்யலாம். அவர்களுக்கு கேலி செய்ய ஒரு பதிவு போடுவதில் மகிழ்கிறேன். ஆனால் நான் இந்த நுட்பத்தை இப்போதுதான் அறிகிறேன். என் போல் இருப்பவர்களின் தகவலுக்காக இந்த தகவலைப் பதிவிடுகிறேன்.

தகவல் தொழில்நுட்பப் பதிவர்களின் மன்னிப்பைக் கோருகிறேன். (அவர்களின் சாம்ராஜ்யத்தில் அத்து மீறி நுழைந்ததற்காக)