வியாழன், 8 அக்டோபர், 2015

பதிவர் சங்கம் தேவையா?

புலவர் இராமாநுசம் அவர்கள் நீண்ட நாட்களாகவே பதிவர்களுக்கு ஒரு சங்கம் தேவை என்று வலியுறுத்திக்கொண்டு வருகிறார். நடக்கப்போகும் புதுக்கோட்டை பதிவர் சந்திப்பில் இதைப்பற்றி விவாதிக்கலாமா? இது பற்றி நான் முன்பு ஒரு முறை பதிவிட்டதை மீள் பதிவு செய்கிறேன்.

பதிவுலகம் ஒரு மாயாலோகம். இங்கு பெரும்பான்மையோருக்கு நிஜமுகம் கிடையாது. கூகுளாண்டவர் புண்ணியத்தாலே நாம் எல்லோரும் எதையெதையோ எழுதிக்கொண்டிருக்கிறோம். கூகுள் பஸ் புஸ் ஆனதைப்போல பதிவுகளும் நித்திய கண்டம் பூர்ணாயுசாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

நாம் எழுதும் எழுத்துக்கள் விரசமாகவோ, புரட்சிகரமாகவோ இல்லாத வரை நம்மைக் கேட்பார் இல்லை. இதில் நமக்கு என்ன குறை இருக்கிறது அல்லது வரப்போகிறது என்று யாருக்கும் ஒரு கருத்தும் கிடையாது. இதில் சங்கம் வைத்து என்ன செய்யப் போகிறோம் என்று எனக்குப் புரியவில்லை.

தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களுக்கு முதலாளிகளிடமிருந்து பாதுகாப்பு தேவைப் பட்டதால் உருவான அமைப்புகள். இதைத் தொடர்ந்து பல்வேறு துறைகளிலும் அவரவர்கள் பாதுகாப்பைக் கருதி சங்கங்கள் உருவாக்கப் பட்டன. கோவையில் நடைப் பயிற்சியாளர்களும் கூட சங்கம் வைத்திருக்கிறார்கள். இவைகளுக்கெல்லாம் ஒரு பாதுகாப்பு நோக்கம் இருக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு பல விதமான பாதுகாப்புகள் தேவைப்படுகின்றன.

ஆனால் கனவுலகப் பயணிகளான பதிவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு தேவைப்படுகிறது? பதிவர்கள் சந்தித்து கலந்துரையாட வேண்டுமென்றால் அதற்கு ஒரு அமைப்பு உருவாக்குவது தேவை. இந்த மாதிரியான அமைப்புகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஈரோடு பதிவர் சங்கமம் ஒரு நல்ல முன்மாதிரியாக செயல்படுகிறது. நெல்லையில் திரு. சங்கரலிங்கம் ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

சென்னையில் பதிவர் சந்திப்பு அவ்வப்போது நடக்கிறது என்பது பதிவுகளிலிருந்து தெரிகிறது. அங்குதான் பதிவர்கள் அதிகம் இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் சென்னைப் பதிவர்கள் ஒரு சங்கம் ஆரம்பிக்க முயன்று அந்த முயற்சி வெற்றி பெறவில்லை என்பது பல பதிவர்கள் அறிந்ததே.

பதிவர்கள் கலந்துரையாடல்களுக்காக மட்டும், எந்த வித சட்ட கட்டுப்பாடுகளும் இல்லாத அமைப்புகள்தான் வெற்றிகரமாக செயல்படும்.

21 கருத்துகள்:

  1. தொடர்ந்து சிறப்பான பதிவுகள் எழுதும் தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்...
    பதிலளிநீக்கு
  2. //நாம் எழுதும் எழுத்துக்கள் விரசமாகவோ, பிரட்சிகரமாகவோ இல்லாத வரை நம்மைக் கேட்பார் இல்லை. இதில் தமக்கு என்ன குறை இருக்கிறது அல்லது வரப்போகிறது என்று யாருக்கும் ஒரு கருத்தும் கிடையாது. இதில் சங்கம் வைத்து என்ன செய்யப் போகிறோம் என்று எனக்குப் புரியவில்லை.//

    சங்கம் வைத்தால் இட்லி, வடை, பூரி, பொங்கல், டீ, காபி எல்லாம் கூட்டமாக சாப்பிடலாம்.
    பதிலளிநீக்கு
  3. V.Radhakrishnan said...

    சங்கம் வைத்தால் இட்லி, வடை, பூரி, பொங்கல், டீ, காபி எல்லாம் கூட்டமாக சாப்பிடலாம்.

    சங்கம் வைத்தால் இதெல்லாம் கிடைக்காது, ராதாகிருஷ்ணன்.
    பதிலளிநீக்கு
  4. தான் தன் சுகம் தன்குடும்பம் என இல்லாது
    பொது நல நோக்கில் சிந்திக்கவும் கருத்துக்களை
    எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வெளியிடவும் செய்கிறவர்கள்
    தங்கள் நலன்களுக்கென அல்லது தங்கள்
    கருத்துரிமைக்கு எதிராக வரும் விஷயங்களை
    தடுக்கவாவது ஒரு அமைப்பு இருப்பது
    சரியெனத்தான் எனக்குப் படுகிறது
    த.ம 3
    பதிலளிநீக்கு
  5. ஏன் பதிவர்களுக்காக ஒரு சங்கம் முழுமையாக அமைக்கப் பெறக்கூடாது..?

    http://sattaparvai.blogspot.com/2011/11/100_21.html
    பதிலளிநீக்கு
  6. பாதுகாப்பு காரணத்தால் அல்ல; அனைத்து பதிவர்களும் ஓரிடத்தில் கூடி கலந்துரையாடலாம்.
    பதிலளிநீக்கு
  7. பாதுகாப்பு காரணத்தால் அல்ல; அனைத்து பதிவர்களும் ஓரிடத்தில் கூடி கலந்துரையாடலாம்.
    பதிலளிநீக்கு
  8. திருவாரூர் உள்ளிட்ட "தஞ்சை, நாகை மாவட்ட எழுத்தாளர்கள் கூட்டமைப்பு" வைத்து மாதநதோறும் சந்திப்புகள் செய்தோம். பெரும் எழுத்தாளர்களை அழைத்து சில ஆண்டு விழாக்கள் நடத்தினோம். சுமார் 12, 13 ஆண்டுகளுக்குப் பின் அந்த அமைப்பே இல்லை.
    பதிலளிநீக்கு
  9. Palaniappan Kandaswamy

    அதென்ன முழுப்பெயராக மாற்றியுள்ளீர்களே? இதற்கு பின்னால் ஏதும் நுண்ணரசியல் உண்டோ?
    பதிலளிநீக்கு
  10. சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது நம் நாடு...

    கழ(ல)கம் தான் ஆரம்பிக்கக்க்கூடாது,,
    பதிலளிநீக்கு
  11. //ஜோதிஜி திருப்பூர் said...
    Palaniappan Kandaswamy

    அதென்ன முழுப்பெயராக மாற்றியுள்ளீர்களே? இதற்கு பின்னால் ஏதும் நுண்ணரசியல் உண்டோ?//

    இதுதான் இனடர்நேஷனல் ஸடைல் என்று ஒரு அமெரிக்க அன்பர் எடுத்துக் காட்டினார். நல்ல சாமாசாரம் என்று உடனே எடுத்துக் கொண்டேன். வேறு ஒன்றும் இல்லை. ஜோதிஜி.

    தவிர பதிவுலகில் PhD யாவது DSc யாவது. எல்லாம் எண்ணுதான். எதற்கும் என்னுடைய முந்தைய பதிவையும் பார்த்து விடுங்களேன்.
    பதிலளிநீக்கு
  12. //இராஜராஜேஸ்வரி said...
    சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது நம் நாடு...
    கழ(ல)கம் தான் ஆரம்பிக்கக்க்கூடாது,,//

    சென்னையில் போன வருடம் ஒரு சங்கம் ஆரம்பிக்க போட்ட முதல் கூட்டத்திலேயே கலகம் வந்து சங்கம் என்ற சங்கதியையே விட்டுவிட்ட கதை தெரியுமுங்களா?
    பதிலளிநீக்கு
  13. அன்பின் கந்தசாமி அய்யா - சில சட்டப் பிரச்னைகள் வரும்போது - உதவுவதற்கு ஒரு சங்கம் இருப்பின் நலமாக இருக்கும் எனச் சிந்திக்கின்றனர். ஆனால் இணையயத்தில் உலவும் கருத்துகளையும் - பதிவர்களின் எண்ணிக்கையையும் பார்க்கும் போது சட்டச் சிக்கல்கள் பெரிதாக ஒன்றும் இல்லை. தற்போதைய நிலைக்குச் சங்கம் தேவை இல்லை. தேவைப்படும் போது அதனைப் பற்றிச் சிந்திக்கலாம். பதிவிற்கு நன்றி அய்யா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
    பதிலளிநீக்கு
  14. //cheena (சீனா) said...
    அன்பின் கந்தசாமி அய்யா - சில சட்டப் பிரச்னைகள் வரும்போது - உதவுவதற்கு ஒரு சங்கம் இருப்பின் நலமாக இருக்கும் எனச் சிந்திக்கின்றனர். ஆனால் இணையயத்தில் உலவும் கருத்துகளையும் - பதிவர்களின் எண்ணிக்கையையும் பார்க்கும் போது சட்டச் சிக்கல்கள் பெரிதாக ஒன்றும் இல்லை. தற்போதைய நிலைக்குச் சங்கம் தேவை இல்லை. தேவைப்படும் போது அதனைப் பற்றிச் சிந்திக்கலாம். பதிவிற்கு நன்றி அய்யா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

    பதிவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும். சட்டச் சிக்கல்கள் வராமல் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். பதிவர்களில் பல சட்ட வல்லுநர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பதிவுகளில் இதைப்பற்றி விழிப்புணர்வு பதிவுகள் போட்டால் பயனுள்ளதாக அமையும்.

    நீங்கள் வலைச்சரம் மூலமாக ஒரு வேண்டுகோள் வைக்க முடியுமானால் நன்றாக இருக்கும்.
    பதிலளிநீக்கு
  15. தவறு இல்லையென்றே நான் கருதுகிறேன்,பின்னாளில்
    பதிவர்களுக்கு சட்டரீதியான பிரச்சனைகள் வரலாம்,அது போன்ற சூல்நிலைகள் உருவாகின்றது எனவே கருதுகின்றேன்,பதிவர் சங்கமத்தில் கூடி இதை பற்றி அய்யா விவாதியுங்கள்....அங்கு சந்திப்போம் நன்றி!
    பதிலளிநீக்கு
  16. நாம் நன்றாகத் தானே போய்க் கொண்டுள்ளோம். இதில் சங்கம் ஏன்?.சங்கம் வந்து ஊர் இரண்டுபட வேண்டாம்.
    வேதா. இலங்காதிலகம்.
    பதிலளிநீக்கு
  17. நான் புதியவள் என்ன கருத்து சொல்வது என்று தெரியவில்லை..


    உங்கள் கருத்துக்காக

    காதல் - காதல் - காதல்
    பதிலளிநீக்கு
  18. //எனக்கு பிடித்தவை said...
    நான் புதியவள் என்ன கருத்து சொல்வது என்று தெரியவில்லை..
    உங்கள் கருத்துக்காக
    காதல் - காதல் - காதல்//

    புதியவர்களுக்குத்தான் புதுப் புதுக் கருத்துகள் தோன்றுமாமே! ஒன்றும் வேண்டாம், இப்படியான கருத்து ஒன்று பதிவுலகத்தில் இருக்கிறது என்று தெரிந்துகொண்டால் போதும்.
    பதிலளிநீக்கு
  19. கைபுள்ள ரேஞ்ஜில் சங்கம் ஆகிவிட போகிறது.

    ஆணீயே புடுங்க வேணாம். be care full.என்ன சொன்னேன்ங்க !
    பதிலளிநீக்கு

புதன், 7 அக்டோபர், 2015

நெல்லை பதிவர் சந்திப்பு

இது ஒரு மீள்பதிவு


நெல்லை பதிவர்கள் சந்திப்பு

திரு.சங்கரலிங்கத்திற்கு ஒரு ஜே!

நெல்லைப் பதிவர் சந்திப்புக்குப் போய் வந்தேன். திரு சங்கரலிங்கம் பிரமாதமாக ஏற்பாடு செய்திருந்தார். திருமதி சித்ரா சாலமன் உறுதுணையாய் இருந்தார். அவர் அமெரிக்காவிலிருந்து இந்த சந்திப்புக்காகவே வந்திருந்தார். நிகழ்ச்சித் தொகுப்பு தனியாக வெளியிடப்படும். இந்தப் பதிவு ஒரு ஆஜர் சொல்வதற்காக மட்டுமே.


என்னுடைய பயண ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்த திரு சங்கரலிங்கம் அவர்களுக்கு என் நன்றி.

திரு சங்கரலிங்கம் பதிவர்களை வரவேற்கிறார்.


பலாச்சுளை சங்கர் அவர் கருத்துகளைக் கூறுகிறார்.
(நெல்லையிலிருந்து புறப்படும்போது பலாச்சுளை வாங்கிச் சாப்பிட்டேனா, அந்த ஞாபகத்தில் பலாபட்டறைக்குப் பதிலாக பலாச்சுளை என்று பதிவிட்டுவிட்டேன். திரு. சங்கர் மன்னிக்வேண்டும்.)



இந்த பதிவர் சந்திப்பின் முழு விவரங்கள் அறிய திரு சங்கரலிங்கம் அவர்களின் தளத்தைப் பார்க்கவும்.

பதிவர் சந்திப்புகள் - ஈரோடு - 2011

ஈரோட்டில் பதிவர் சந்திப்பு 2009. 2010, 2011 ஆகிய மூன்று வருடங்கள் மிக சிறப்பாக நடைபெற்றன. முதல் சந்திப்பிற்கு நான் போகவில்லை. அடுத்த இரண்டு சந்திப்புகளுக்கும் நான் சென்று வந்தேன்.

இதற்கு முன்பு சென்னைப் பதிவர்கள் மாதம் ஒரு முறை கடற்கரையில் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் என்று "டோண்டு ராகவன்" பதிவுகளிலிருந்து கேள்விப்பட்டிருக்கிறேன்.

2012 ம் ஆண்டு புலவர் திரு ராமானுஜம் ஐயா அவர்களின் முயற்சியில் ஒரு பதிவர் சந்திப்பு நடந்தது. இதுதான் முதல் பதிவர் சந்திப்பு என்று பலர் தவறாக எண்ணுக்கொண்டிருக்கிறார்கள். ஈரோட்டில் 2009 ம் ஆண்டே பதிவர் சந்திப்பு ஆரம்பித்து விட்டது.

திருநெல்வேலியில் உணவு ஆபீசர் முயற்சியில் ஒரு பதிவர் சந்திப்பு நிகழ்ந்தது. நான் கலந்து கொண்டேன். இதைப் பற்றிய என் பதிவை நாளை மீள்பதிவாகப் போடுகிறேன்.

2013ம் ஆண்டு சென்னையில் இரண்டாவத் தடவையாக பதிவர் சந்திப்பு நடந்தது. நான் கலந்து கொண்டேன்.

போன வருடம் மதுரையில் நடந்த பதிவர் சந்திப்பிற்கு நான் செய்த ரயில் டிக்கட் ரிசர்வேஷன் குளறுபடியால் போகவில்லை.

இந்த வருடம் புதுக்கோட்டைக்குப் போக எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டேன்.

இப்போது நான் கலந்து கொண்ட ஈரோடு பதிவர்கள் சந்திப்பைப்பற்றிய என்னுடைய பதிவை இங்கு மீள் பதிவாகப் போடுகிறேன்.

ஈரோடு பதிவர் சங்கமம் 2011

பதிவர் சங்கமத்திற்கு போய்விட்டு இப்போதுதான் வீடு திரும்பினேன். (மாலை 4.30). இருநூறு பேருக்கு மேல் பதிவர்கள் மற்றும் இணைய ஆர்வலர்கள் வந்திருந்தார்கள். இணையத்தில் சீரிய முறையில் பணியாற்றிய பதினைந்து பதிவர்களை பரிசு கொடுத்து மேடையில் அமர்த்தி அவர்களுடைய சேவைகளைக் குறிப்பிட்டு பாராட்டினார்கள். திரு ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பான தலைமையுரை ஆற்றினார்கள்.

நான் எடுத்த சில புகைப்படங்கள்.
(படங்களை கிளிக் செய்தால் பெரிதாகத் தெரியும்.)

கூட்டம் நடந்த ஹால்-






விருந்தினரின் ஒரு பகுதி-வலது ஓரத்தில் சிகப்பு ஜிப்பாவுடன் இருப்பவர்தான் பிரபல பதிவர் "தருமி" அவர்கள்.



வரவேற்புரை-




ஈரோடு கதிர் (விழா நாயகன்) சிறப்பு பதிவர்களை அறிமுகப்படுத்துகிறார்-


சிறப்பு பதிவர்கள் மேடையில்


தலைமையுரை - ஸ்டாலின் குணசேகரன்


செயலாளர் பாலாஜி நன்றி கூறுகிறார்


இனி நம்ம ஐட்டங்கள்.

காலை டிபன் - நான் சாப்பிட்ட இட்லிகளும் பூரிகளும்.




சீனா அய்யாவும் ஜாக்கி சேகரும்


மதிய உணவு-

சைவம்


நம்மோடது


தமிழ்நாட்டின் மூத்த பதிவரைப் பார்த்துக் கொள்ளுங்கள்.(நடுவில் இருப்பவர்) போனால் வராது.


அனைவருக்கும் வணக்கம். விவரங்கள் அதிகம் வேண்டுமென்பவர்கள் கதிர் பதிவு போடும் வரை பொறுத்திருக்கவும்.

செவ்வாய், 6 அக்டோபர், 2015

ஈரோடு பதிவர் சங்கமம் 2010

இது ஒரு மீள்பதிவு. புதுக்கோட்டைக்காரர்களை இப்படியெல்லாம் செய்யவேண்டும் என்று வற்புறுத்தும் பதிவல்ல.


இது ஈரோட்டில் நடந்த இரண்டாவது பதிவர் சங்கமம். முதல் சங்கமத்திற்கு நான் போகவில்லை. காரணம் அப்போதுதான் நான் பதிவுலகில் காலடி எடுத்து வைத்த புதிது.

ஈரோடு பதிவர் சங்கமம் - 2010



ஈரோடு பதிவர் சங்கமத்திற்கு போய்விட்டு வந்தேன். விழாவைப்பற்றி ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமானால் = விழா வெற்றி, மாபெரும் வெற்றி, வரலாறு காணாத வெற்றி, பதிவுலக சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வெற்றி. அவ்வளவுதானுங்க.

விரிவாக எழுதுவதற்கு முன்பாக எனக்குப்பிடித்ததைப்பற்றி முதலில் எழுதுகிறேன்.

செவிக்குணவு இல்லாத போழ்தில் சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும்.

செவிக்குணவு இன்னும் ஜீரணமாகவில்லை. ஆகவே அதை அப்புறம் பார்ப்போம்.

வயிற்றுணவைப் பற்றி முதலில் பார்த்து விடுவோம். பாருங்க. எழுத்தெல்லாம் எதுக்குங்க?

காலை சிற்றுண்டி களம் ?


முட்டைல என்னென்னமோ பார்த்திருப்பீங்க. முட்டை பூரிய பார்த்திருக்கீங்களா?


மதிய உணவு. இடமிருந்து வலமாக மூன்றாவது இருப்பதுதான் உலகிலேயே தலை சிறந்த பதிவர் ( நான்தானுங்க அது, ஹிஹீஹி..)


நாமக்கல்லில் ஒரு கோழிப்பண்ணையே காலி !

ஆனாப் பாருங்க, மீட்டிங் முடியறதுக்குள்ள அத்தனையும் ஜீரணமாகிட்டுதுங்க. புறப்படறப்ப கொஞ்சம் ஊட்டுக்கு கட்டிட்டிப் போலாம்னு பாத்தா சமையலறைல எல்லாத்தையும் கழுவிக் கமுத்துட்டுப் போயிட்டாங்க. நமக்கு கொடுப்பினை அவ்வளவுதான். ஆனா பாருங்க, அடுத்த வருஷம் உஷாரா மொதல்லயே பார்சல் பண்ணீடுவமில்ல !

திங்கள், 5 அக்டோபர், 2015

ஞானாலயா நூல் நிலையம், புதுக்கோட்டை

                                                    Image result for ஞானாலயா நூல் நிலையம், புதுக்கோட்டை

ஞானாலயா திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தன்னுடைய தனி முயற்சியினால் ஒரு நூல் நிலையம் உண்டு பண்ணி பொது மக்களுக்கும் மாணவர்களுக்கும் அருந்தொண்டு ஆற்றி வருவது பதிவர்கள் அனைவரும் அறிந்ததே.

வருகிற 11-10-2015 அன்று புதுக்கோட்டையில் நடக்கும் பதிவர் சந்திப்பிற்கு வரும் பதிவர்கள் தங்களிடம் உள்ள, அவர்களுக்கு இனிமேல் தேவைப்படாத புத்தகங்களைக் கொண்டு வந்தால் பெற்றுக்கொள்வார்களா எனத்தெரிந்தால், பதிவர்கள் தங்களிடம் அதிகப்படியாக இருக்கும் புத்தகங்களை கொண்டு வந்து கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

இது சம்பந்தமாக திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களை யாராவது தொடர்பு கொண்டு விவரங்கள் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

எந்த மாதிரியான புத்தகங்களைப் பெற்றுக் கொள்வார்கள்? பதிவர் சந்திப்பு நிகழும் மன்றத்திற்கு யாரையாவது நியமித்து புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள முடியுமா?  இந்த விவரங்களும் தெரிந்தால் நன்றாக இருக்கும்.

சனி, 3 அக்டோபர், 2015

விழாக்களும் தவறுகளும்





நேற்று (2-10-2015) கிருஷ்ணகிரியில் நான் இணைந்திருக்கும் ஓய்வு பெற்ற விவசாய வல்லுனர்கள் சங்கத்தின் ஆண்டு மகாநாடு நடந்தது. என்னையும் சேர்த்து சுமார் 350 பேர் கலந்து கொண்டனர். தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த எங்கள் சங்க உறுப்பினர்கள் மகாநாட்டு ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டனர். அனைத்து ஏற்பாடுகளையும் நன்றாகத் திட்டமிட்டு செயல் புரிந்தனர்.

ஆனாலும் விழா நடக்கும்போது நான் கண்ட சில குறைகளை இங்கே சுட்டிக்காட்டுகிறேன். இந்த தவறுகள் நமது பதிவர் மகாநாட்டிலும் ஏற்படலாம். இவைகளைத் தவிர்க்காவிட்டால் விழாவின் பெருமை கெடும் என்று கருதுகிறேன்.

வருகைப் பதிவு செய்த கல்லூரி மாணவிகள்
1.  ஒலி பெருக்கி ஏற்பாடுகள்

மகாநாடு ஒரு கல்யாண அரங்கில் நடைபெற்றது. அந்த அரங்கில் 1000 பேர் இருக்க முடியும். எங்கள் சங்க உறுப்பினர்கள் 350 பேர்கள் வந்திருந்தார்கள். ஏறக்குறைய அரங்கின் முக்கால் பங்கு நிறைந்திருந்தது. ஒலி பெருக்கி ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். ஆனால் அதன் தரம் மிகவும் மோசமாக இருந்தது. மேடையில் பேசுபவர்களின் பேச்சு ஒருவருக்கும் தெளிவாகக் கேட்கவில்லை.

ஒலி பெருக்கிகள் நல்ல தரம் வாய்ந்தவைகளாக இல்லாவிட்டால் விழாவில் கலந்து கொள்பவர்கள் விழா நிகழ்வுகளை சரியாக அனுபவிக்க இயலாமல் போகும்.

                                 

2. மூத்த உறுப்பினர்களைக் கௌரவித்தல்.

இதற்காக மிகவும் பொருட் செலவில் ஒவ்வொருவரின் பெயர் பொரித்த நினைவுப் பொருள் தயார் செய்து அவைகளை மேடையில் அலங்காரமாக வைத்திருந்தார்கள். அவைகளைக் கொடுப்பதற்காக  அந்த பெயர்களைப் படிக்கும்போது அவர்களில் பலர் கூட்டத்திற்கு வரவில்லை என்று தெரிந்தது. வந்திருந்தவர்களும் அரங்கின் பல இடங்களில் உட்கார்ந்திருந்தபடியால் இந்த நிகழ்ச்சியில் குழப்பமும் காலதாமதமும் கணிசமாக ஏற்பட்டது.

பரிசுப்பொருட்களையும் சரியாக அடையாளம் கண்டு காலதாமதமில்லாமல் எடுத்துக்கொடுக்க சுறுசுறுப்பானவர்களாகவும் சமயோசித புத்தி கொண்டவர்களுமான சிலரை மேடையில் இருக்க வைக்கவேண்டும்.


பரிசுப் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காட்சி
                                   
பரிசுகள் வாங்குபவர்களை முதலிலேயே கணக்கு எடுத்து அவர்களின் பெயர்களை மட்டும் படித்தால் நல்லது. தவிர அந்த பரிசு வாங்குபவர்களை அடையாளம் கண்டு முதலிலேயே மேடைக்குப் பக்கத்தில் அமர வைத்தால் வரிசையாக அவர்கள் வந்து பரிசு வாங்கிக்கொண்டு போக ஏதுவாக இருக்கும். இதை சரியாக திட்டமிடாவிட்டால் குழப்பமும் நேர விரயமும் மிஞ்சும். பரிசு பெற்ற, விழாவிற்கு வராத பதிவர்களின் பெயர்களை கடைசியில் ஒன்றாக வாசித்து விடலாம்.

3. கூட்டத்தினர் அமைதியாக இருக்கவேண்டியதின் அவசியம்.

எந்த ஒரு விழாவானாலும் சில, பல பிரபலங்களைக் கூப்பிட்டு மேடை ஏற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. அப்போதுதான் விழாவிற்கு ஒரு களை கட்டும். அப்படிக் கூப்பிட்டு மேடையில் இருக்கும் பிரபலங்களுக்கு நாம் செய்யும் மரியாதை அவர்கள் பேசும்போது அமைதியாக இருந்து அவர்கள் பேசும் பேச்சைக்கேட்பதே.

எங்கள் விழாவிற்கு வந்திருந்த பலர் தங்கள் நண்பர்களை பல நாட்கள், ஏன் பல வருடங்கள் கழித்து சந்திக்கின்றார்கள். அவர்களுடன் அளவளாவ வேண்டுமென்ற ஆவல் கட்டாயம் இருக்கும். ஆனால் அப்படி அளவளாவ விழா அரங்கு தகுந்த இடமல்ல. கூட்டத்தில் சிறுசிறு குழுக்களாக பக்கத்தில் அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டிருந்தால் மேடையில் பேசும் பேச்சாளருக்கு எப்படியிருக்கும்?

பதிவர்கள் சந்திப்பு அரசியல் கூட்டம் அல்ல. அரசியல் கூட்டங்களில் என்ன சலசலப்பு இருந்தாலும் பேச்சாளர்கள் அதைக் கண்டுகோள்ளாமல் பேசிக்கொண்டே போவார்கள். ஆனால் ஒரு படித்தவர்கள், பண்பாளர்கள் கலந்து கொள்ளும் ஒரு விழாவில் இப்படி சளசளவென்று பேசிக்கொண்டிருந்தால், பேசுபவருக்கு எப்படியிருக்கும்? அவருக்கு நாம் கொடுக்கும் மரியாதை இதுதானா?

நான் கலந்து கொண்ட எங்கள் சங்க மகாநாட்டில் விழா நிகழ்ச்சிகளின்போது ஒரே சந்தை இரைச்சல். மேடையில் பேசுபவர் என்ன பேசுகிறார் என்று தெரியாத அளவிற்கு சத்தம். பலமுறை மைக்கில் வேண்டுகோள் விடுத்தும் பலனில்லாமல் போய் விட்டது. ஆனால் இந்த விழாவில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் மூத்த குடிமக்கள். வயதானால் ஒருவன் மீண்டும் குழந்தையாகிறான் என்று கேட்டிருக்கிறோம். அதை நேற்று நான் கண்ணாரக் கண்டேன். அனவரும் குழந்தைகளை போல் இரைச்சல் போட்டுக் கொண்டு இருந்தார்கள்.

நான் பதிவர்கள் மகாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு விடுக்கும் ஒரு வேண்டுகோள் என்னவென்றால், விழா நிகழ்ச்சிகளின்போது முழு அமைதி காக்கவேண்டும். பல பெரிய அதிகாரிகளையும் பேச்சாளர்களையும் அழைத்து மேடையில் அமர்த்தி விட்டு அவர்கள் பேசும்போது அரங்கில் இரைச்சலாக இருந்தால் பதிவர்களின் பேரில் அவர்களுக்கு என்ன அபிப்பிராயம் ஏற்படும்?

அது தவிர விழாக் குழுவினர் இந்த சமயத்தில் என்ன மன நிலையில் இருப்பார்கள் என்பதையும் சிறிது கற்பனை செய்து பாருங்கள். நாம் கலந்து கொள்ளப்போவது திருமண விழா அல்ல. சக பதிவர்களைப் பார்த்ததும் மெய் மறந்து அவர்களுடன் அளவளாவ வேண்டும் என்ற ஆவல் ஏற்படுவது இயற்கையே. அந்த ஆவலை சாப்பிடும்போதோ அல்லது தேநீர் அருந்தும்போதோ நிறைவேற்றிக்கொள்ளலாம்.

அல்லது முதல் நாளே புதுக்கோட்டைக்கு வருபவர்கள் 10 ம் தேதி மாலை விழா அரங்கிற்கு வந்து விட்டால் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்டு அளவளாவ சௌகரியமாக இருக்கும்.

4. தேனீர் கொடுத்தல்.

விழா நடக்கும்போது எக்காரணம் கொண்டும் தேனீர் விநியோகிக்கக் கூடாது. இது எப்படியும் சலசலப்பைத் தோற்றுவித்து விழாவின் போக்கை கெடுக்கும். இந்த தேனீர் விநியோகம் அதற்கென்று தனிப்பட்ட நேரம் ஒதுக்கி அந்த நேரத்தில் கொடுப்பதுதான் உசிதம்.

5. பதிவர்களின் கடமை.

இந்த விழா பதிவர்களாகிய நாம் நடத்தும் விழா. திரு. முத்து நிலவன் தனிப்பட்டு நடத்தும் சொந்த விழா அல்ல. அவர் முன்னின்று விழா ஏற்பாடுகளை நமக்காகச் செய்கின்றார். இந்த விழாவில் பதிவர்களின் பெருமை அடங்கியிருக்கிறது. பதிவர்களாகிய நாம் மற்றவர்களைவிட மேம்பட்ட அறிவாளிகள் என்ற இறுமாப்புடன் வலம் வருகிறோம். அப்படி நினைக்கும் நாம் நடந்து கொள்ளும் பாங்கு அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ வேண்டுமல்லவா? இதை பதிவர் மகாநாட்டில் கலந்து கொள்ளும் அனைவரும் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டுகிறேன்.