புதன், 17 மே, 2017

5. நதிமூலம்-5

Image result for அவதாரங்கள்

உலகம் உய்வதற்காக பல அவதார  புருஷர்கள் நம் நாட்டில் அவதரித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தற்காலத்திற்கு பொருத்தமானவர்கள் அல்ல. தற்கால சமூகத்தை புணருத்தாரணம் செய்ய அவதரித்துள்ள அவதார புருஷர்கள் இன்றைய இன்டர்நெட் வலைத்தளங்களில்தான் இருக்கிறார்கள்.
அவர்கள் செய்யும் சேவையை நீங்களே அனுபவித்தால்தான் அதனுடைய பூரண இனபத்தைப்பெற முடியும். இருந்தாலும் என்னால் முடிந்த வரையில் விவரிக்கிறேன்.

மனிதனுக்கு எப்போதும் அடுத்தவர்களின் அந்தரங்கங்களை அறிந்து கொள்வதில் அலாதி ஆனந்தம். இந்த வலைத் தளங்கள் இந்த ஆசையை பூரணமாக நிறைவேற்றுகின்றன.

உதாரணத்திற்கு ஒரு தளத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று சொல்கிறேன்.

‘’நான் இன்று காலையில் எழுந்தேன். பல் விளக்கினேன். காபி குடித்தேன். நாயைக்குளிப்பாட்டினேன். நானும் குளித்தேன். டிபன் சாப்பிட்டேன். என் சமையல் அறையில் கரப்பான் பூச்சி வந்தது. கம்ப்யூட்டரில் இதை எழுதினேன். ........ இப்படியே இரவு தூங்கப்போவது வரை விலாவாரியாக விவரித்து விட்டு, பிறகு தூங்குவார்கள் (என்று நினைக்கிறேன்)’’

நல்ல வேளை அதற்குப்பிறகு நடப்பவற்றை தற்சமயம் விவரிப்பதில்லை. அதைப்பற்றியும் விவரிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அல்லது அப்படி எழுதியவை என் கண்ணில் படாது போயிருக்கலாம். 

ஆஹா தேச சேவை செய்ய இப்படியும் ஒரு வழி இருக்கிறதா, இத்தனை நாள் நமக்கு தெரியாமல் போய்விட்டதே, நம் ஓய்வு நாளை பயனுள்ளதாய் கழித்து போகுமிடத்திற்கு புண்ணியம் தேடிக்கொள்வோம் என்று முடிவு செய்து இந்த வலைத்தளத்தை ஆரம்பித்துள்ளேன்.

எவ்வளவு நாள் நடக்கும், எத்தனை பேர் இதைப்பார்ப்பார்கள் என்றெல்லாம் எனக்கு யோசனை இல்லை. எப்படியோ, பொழுது போவதற்கு ஒரு வழி பிறந்தது. மேலும் என் மாமனார் வீட்டார் நான் பஞ்சமா பாதகத்திலிருந்து மீண்டு விட்டேன்      (அதாவது சீட்டு விளையாடுவதிலிருந்து) என்ற சந்தோஷமும் அடையவும் இந்த வேலை காரணமாய் அமைந்தது. ஆகவே எல்லோருக்கும் சந்தோஷம் கொடுக்கலாம் என்று இந்த வலைத்தளத்தை ஆரம்பித்திருக்கிறேன். இது சந்தோஷத்தை கொடுக்குமா அல்லது கஷ்டத்தை கொடுக்குமா என்பது போகப்போகத்தான் தெரியும்.

இதுதான் இந்த வலைத்தளத்தின் நதிமூலம்..............தொடரும்..

Image result for அவதாரங்கள்