தாசியும் கிளியும் தனித்தனியாக சபதம் போட்டதை போன பதிவில் பார்த்தோம். இப்போது யாருடைய சபதம் நிறைவேறியது என்று பார்ப்போம்.
தாசி அபரஞ்சியிடம் மாமூலாகப் போய் வருபவர்கள் ஏழு பேர்களுண்டு. அவர்கள், அந்த ஊர் ராஜா, முக்கிய மந்திரி, சேனாதிபதி, ஒற்றர் படைத்தலைவன், கோவில் தர்மகர்த்தா, மாணிக்கஞ்செட்டியார் ஆகியோர். இவர்கள் வாரத்தில் ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொருத்தராக முறை வைத்துக்கொண்டு, வாரந்தோறும் அவள் வீட்டுக்கு, இரவு மூன்றாம் ஜாமத்தில் போயிருந்து, விடிவதற்கு ஒரு ஜாமம் முன்பாகவே தங்கள் வீட்டுக்குத்திரும்பி விடுவார்கள். தாசியின் வழக்கு நடந்த அன்று மாணிக்கஞ்செட்டியாரின் முறை. தாசி வழக்கு முடிந்து வீட்டுக்குப்போனதும் வேலைக்காரிகளைக் கூப்பிட்டு, இன்று பொழுது சாய்ந்ததும் வாசற்கதவைச் சாத்தி தாள்போட்டு பந்தனம் பண்ணிவிடுங்கள் என்று சொல்லிவிட்டு படுக்கப்போய் விட்டாள்.
அன்று இரவு வழக்கம்போல் மாணிக்கஞ்செட்டியார் தாசி வளவுக்குப்போக, என்றுமில்லாதபடி வாசற்கதவு பந்தனம் பண்ணியிருந்தது. செட்டியார் கதவைத்தட்ட, யாரது என்ற குரல் கேட்டது. செட்டியார், நான்தான் மாணிக்கஞ்செட்டியார் என்று சொல்ல, தாசி கதவுக்குப்பின்னால் இருந்துகொண்டு, நீர் உமது கடையில் இருக்கும் கிளியைக்கொண்டுவந்து கொடுத்தால் கதவு திறக்கப்படும், இல்லையேல், நீர் அப்படியே உமது வீட்டுக்குப் போய்க் கொள்ளலாம் என்று சொன்னாள். செட்டியாருக்கு மோகம் தலைக்கேறி- யிருந்தபடியால், யாதொன்றும் ஆலோசிக்காமல் நேரே கடைக்குப்போய் கடையைத் திறந்து கிளிக்கூண்டை எடுத்துக்கொண்டு தாசி வீட்டுக்கு நடக்கலானான்.
செட்டியார் அர்த்தராத்திரியில் கடையைத்திறந்து கூண்டை எடுத்துப்போவதைக்கண்ட கிளி யோசனை செய்தது. ஆஹா, இன்று இந்தச்செட்டி தாசி வீட்டுக்குப்போயிருக்காற்போல் தெரிகிறது. தாசியானவள் நம்மை எடுத்துக்கொண்டு வரும்படி சொல்லியிருக்க வேண்டும். அதனால்தான் இந்தச்செட்டி இந்நேரத்தில் நம்மை எடுத்துக்கொண்டு போகிறான். இப்போது இவனுக்கு மோகம் தலைக்கேறி இருப்பதால் நாம் என்ன சொன்னாலும் கேட்கமாட்டான், விதிப்படி நடக்கட்டும் என்று ஒன்றும் பேசாமலிருந்தது.
செட்டியார் தாசி வீட்டுக்குப் போய் கதவைத்தட்டினவுடன் தாசி கிளி கொண்டுவந்தீரோ என்றாள். இவன் ஆம் என்று சொல்ல, தாசியானவள் உடனே கதவைத்திறந்து கிளிக்கூண்டை வாங்கி தாதியிடம் கொடுத்து பத்திரப்படுத்தச் சொல்லிவிட்டு, செட்டிக்கு கைலாகு கொடுத்து அழைத்துப்போய், கைகால் கழுவ நீர் மொண்டு ஊற்றி, பின்பு அம்சதூளிகா மஞ்சத்திற்கு கூட்டிக்கொண்டு போய் அமர வைத்து, குடிப்பதற்கு ஏலம், பனங்கற்கண்டு, குங்குமப்பூ போட்டுக்காய்ச்சிய பால் கொடுத்து, வெற்றிலை, பாக்கு மடித்து, அத்துடன் வாசனைத் திரவியங்களும் சேர்த்து வாயில் ஊட்டி, விடியும்வரை சரச சல்லாபமாக இருந்தாள்.
விடிவதற்கு ஒரு நாழிகை இருக்கும்போது செட்டி எழுந்திருந்து அவன் வீட்டிற்குப்போனான். தாசியும் எழுந்திருந்து போய் கிளியைப்பார்த்தாள். “ஏ கிளியே, உன்னுடைய நிலையைப் பார்த்தாயா? இன்று மதியம் நீ என்னுடைய வயிற்றுக்குள் போகப்போகிறாய், அதற்குள் எத்தனை ஆர்ப்பாட்டம் பண்ணினாய்” என்று பலவிதமாக ஏசினாள். கிளி இவளுடன் என்ன பேச்சு வேண்டியிருக்கிறது? என்று வாளாவிருந்தது. பிறகு தாசியானவள் வழக்கமான காலைக்கடன்களை முடித்து, குளித்து, ஆடை அலங்காரங்கள் செய்து கோவிலுக்குப் புறப்பட ஆயத்தமானாள். போகுமுன் வீட்டு வெள்ளாட்டியைக் கூப்பிட்டு இதோ பார், இன்று மதியத்திற்கு இந்தக்கிளியைக்கொன்று தலையை ரசமாகவும், உடலைக்கறியாகவும் சமைத்து வை, ஜாக்கிரதையாக செய், என்று திட்டப்படுத்திவிட்டு கோவிலுக்குப் போனாள். தாசி அன்றாடம் அந்த ஊர் பெருமாள் கோவிலுக்குப் போகும் வழக்கமுண்டு.
தாசி கோவிலுக்குப் போனவுடன் வெள்ளாட்டி கிளியைச் சமைக்கத் தேவையான மசாலெல்லாம் அரைத்து வைத்துவிட்டு, கூண்டைத் திறந்து கிளியைப்பிடிக்கப்போனாள். கிளி இந்த சமயத்தை விட்டால் தமக்கு வேறு சமயம் கிடைக்காது என்று யோசித்து வெள்ளாட்டி தன்னைப்பிடிக்க வரும்போது படபடவென்று இறகுகளைப்பலமாக அடித்து, மூக்காலும், கால் நகங்களாலும் கை, முகம் ஆகியவைகளில் பிராண்ட, வெள்ளாட்டி பயந்துபோய் கிளியைப்பிடித்த பிடியை விட்டுவிட்டாள். உடனே கிளி பறந்து போய் வெளியில் சென்று பெருமாள் கோவிலில் வாழும் பல கிளிகளுடனே ஒன்றாய்ச் சேர்ந்துவிட்டது. வெள்ளாட்டி பதறிப்போனாள். அய்யோ. எஜமானிக்குத் தெரிந்தால் நம் உயிர் உடலில் தங்காதே, என்ன செயவேன் என்று கொஞ்ச நேரம் பிரலாபித்துவிட்டு, மனம் தேறி, உடனே கடைத்தெருவுக்கு ஓடிப்போய் இரண்டு காசு கொடுத்து ஒரு கவுதாரியை வாங்கி வந்து, கொன்று, தலையை ரசமாகவும், உடலைக் கறியாகவும் சமைத்து வைத்துவிட்டு, அந்தக் கவுதாரியின் சமைக்காத பாகங்களனைத்தையும் கண்காணாத இடத்தில் புதைத்து விட்டு, வீட்டுக்கு வந்து எப்போதும் போல இருந்தாள்.
தாசி கோயில் வழிபாடுகளை முடித்துவிட்டு வீடு திரும்பியவுடன் வெள்ளாட்டியைக்கூப்பிட்டு, கிளியை சமைத்தாயிற்றா? என்று விசாரித்தாள். வெள்ளாட்டி ஆம் என்று சொல்ல அப்படியானால் நான் சாப்பிடுகிறேன் என்று சொல்லி, கைகால் முகம் கழுவி, சாப்பிட உட்கார்ந்தாள். வெள்ளாட்டி, உடனே தலைவாழை இலை போட்டு சோறு வைத்து, பண்ணின கறியையும் இலையில் வைத்து, ரசத்தை ஒரு கிண்ணத்தில் ஊற்றி பக்கத்தில் வைத்தாள்.
தாசியானவள், ரசத்தை சோற்றில் ஊற்றிப்பிசைந்து, ஒரு வாய் சோற்றை வாயில் போட்டு, கறியில் ஒரு துண்டை எடுத்து கையில் வைத்துக்கொண்டு, “ஏ கிளியே, நீயா என் தலையை மொட்டை அடிப்பேனென்றாய்” என்று சொல்லி அந்தக்கறியை ஒரு கடி கடிப்பாள். அதை சோற்றுடன் விழுங்கிவிட்டு, பின்னும் ஒரு வாய் சோற்றை வாயில் போட்டு, ஒரு கறியைக்கையில் எடுத்துக்கொண்டு, “ஏ கிளியே, நீயா என் முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்துகிறேனென்றாய்” என்று சொல்லி அந்தக்கறியைக்கடித்து, அந்த வாய்சோற்றை முழுங்குவாள். இப்படியாக அந்தச்சோறு, கறி, ரசம் முழுவதையும் சாப்பிட்டு முடித்து கை கழுவி, தாம்பூலம் போட்டுவிட்டு திருப்தியாக, தன் சபதம் நிறைவேறியது என்ற எண்ணத்துடன் படுத்து தூங்கினாள்.
கோயிலில் கிளிக்கூட்டத்துடன் இருந்த விக்கிரமாதித்தன் இனி என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான. இப்படி இருக்கையில் தாசி அபரஞ்சிக்கு நெடுநாளாய் ஒரு அபிலாக்ஷை உண்டு. அது என்னவென்றால், தான் எப்படியாவது கூண்டோடே வைகுந்தம் போகவேண்டும் என்கிற ஆசைதான். இதற்காகத்தான் அவள் அனுதினமும் பெருமாள் கோயில் சென்று வேண்டிக்கொள்வது. இதைப்பார்த்த விக்கிரமாதித்தன் ஒரு நாள் கோவிலுக்குள் சென்று பெருமாள் சிலைக்குப்பின்னால் மறைந்து கொண்டான். அன்று கோவிலில் யாரும் இல்லை. தாசி வந்து பெருமாளைக் கும்பிட்டுவிட்டு தன் வேண்டுதலைச்சொன்னாள். “பெருமாளே, நான் எத்தனை நாளாக கூண்டோடு வைகுந்தம் போகவேண்டுமென்று வேண்டிக் கொண்டிருக்கிறேன், இதற்காக எத்தனை தானதருமம் செய்திருக்கிறேன், நீ மனமிரங்க மாட்டாயா” என்று உருக்கமாக வேண்டிக்கொண்டாள். அப்போது பெருமாள் சிலைக்குப்பின்னால் இருந்த விக்கிரமாதித்தன், பெருமாள் பேசுவதுபோல் பேசினான்.
“அகோ வாரும் அபரஞ்சியே, உன் பக்திக்கு மெச்சினோம், உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்” என்றது. அபரஞ்சி மெய் சிலிர்த்து, வாய் குழறி, “நாராயணா, கோவிந்தா, மதுசூதனா, உன் திருவடியை அடைவதைத்தவிர வேறென்ன வேண்டும், என்னை இந்தக்கூண்டோடே உன் வைகுண்டத்திற்கு அழைத்துக்கொள், அதைத்தவிர வேறொன்றும் வேண்டேன்” என்று பெருமாளைப் பலவாறாகத் துதித்து நின்றாள். அப்போது கிளியாகிய விக்கிரமாதித்தன் கூறலுற்றான். “ஆஹா, உன் ஆசையை நிறைவேற்றுகிறோம். இன்று முதல் உன் சொத்துக்களை முழுவதும் தானதருமம் செய்துவிட்டு, இன்றைக்கு எட்டாம் நாள் உச்சிப்பொழுதில் நீ உன் தலைமுடியை முழுதுமாக நீக்கிவிட்டு, முகம் முழுவதும் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி இங்கு வரவேண்டும். அது ஏனென்றால் நீ இந்த ரூபத்திலேயே தேவலோகம் வந்தாயென்றால் உன்னைப்பார்க்கும் தேவர்களெல்லாம் உன் அழகில் மயங்கி உன் பின்னாலேயே வர ஆரம்பித்து விடுவார்கள். அதனால்தான். நீ தேவலோகம் வந்து அங்குள்ள ஆகாய கங்கையில் மூழ்கி எழுந்தாயானால் உன் கேசம் இன்னும் பன்மடங்காக வளர்ந்து, உன் தேக காந்தியும் இன்னும் அதிகமாக ஜொலிக்கும்.
பிறகு இங்கு நீ இந்தக்கோலத்தில் வந்த பிறகு, ஒரு கழுதை மேல் ஏறி இந்தக்கோவிலை நாராயணா, கோவிந்தா என்று சொல்லிக்கொண்டு மூன்று முறை வலம் வந்து கொடிமரத்தின் கீழ் நிற்பாயாகில் நாம் உனக்கு தேவலோகத்திலிருந்து புஷ்பகவிமானம் அனுப்பிவைக்கிறோம். நீ அதில் ஏறி நம் லோகத்திற்கு வந்து சேர்வாயாக” என்று சொல்லி முடித்தது.
தாசியும் நம் நெடுநாள் வேண்டுதலுக்கு பெருமாள் இன்றுதான் செவி சாய்த்தார் என்று சந்தோஷப்பட்டு, நேராக அரச சபைக்கு சென்று, ராஜாவிடம் கோவிலில் நடந்த விசேஷங்களையெல்லாம் சொல்லி, “இன்றைக்கு எட்டாம் நாள் பெருமாள் என்னைக்கூண்டோடே வைகுண்டத்திற்கு அழைத்துக்கொள்வதாக அருள் புரிந்திருக்கிறார். ராஜா அவர்கள் 56 தேசத்து அரசர்களுக்கும் ஓலை அனுப்பி இந்த வைபவத்தைக்காண வருமாறு கேட்டுக்கொள்ளவேண்டும்” என்று சொன்னாள். ராஜாவும் சரியென்று ஒத்துக்கொண்டு எல்லா தேசத்திற்கும் ஓலை அனுப்ப ஏற்பாடு செய்தார்.
பிறகு தாசியானவள் வீட்டிற்கு வந்து அக்கம்பக்கத்திலுள்ளோருக்கு சேதி சொல்லிவிட்டு, மறுநாளிலிருந்து தன் சொத்துக்களையெல்லாம் தானதருமம் பண்ண ஆரம்பித்தாள். ஏழு நாட்கள்களில் இவ்வாறு தன் சொத்துக்களைப்பூராவும் தானம் செய்து முடித்துவிட்டாள். இந்த ஏழு நாட்களுக்குள் அபரஞ்சி கூண்டோடு வைகுந்தம் போகப்போகிறாள் என்கிற செய்தி எல்லா ஊர்களுக்கும் காட்டுத்தீ போல பரவி ஜனங்கள் கூட்டம்கூட்டமாக வர ஆரம்பித்தார்கள். ராஜா அனுப்பிய ஓலையும் எல்லா தேசங்களுக்கும் போக, சகல தேசத்து ராஜாக்களும் இந்த அதிசயத்தைப்பார்க்க கூடிவிட்டார்கள். உச்சினிமாகாளிபுரத்திற்கும் இந்த ஓலை போய்ச்சேர்ந்தது. அதைப்பார்த்த பட்டி, இதென்ன நாம் இதுவரை கேளாத அதிசயமாக இருக்கிறது, யாரும் கூண்டாடே வைகுந்தம் போவது கிடையாதே, இதில் நம் ராஜாவின் லீலை ஏதாகிலும் இருந்தாலும் இருக்கலாம் என்று அவனும் இந்த அதிசயத்தைப்பார்க்க வந்து சேர்ந்தான்.
எட்டாம் நாள் பொழுது விடிந்தது. அபரஞ்சி எழுந்திருந்து நாவிதனை வரச்சொல்லி தன் தலைமுடியை நீக்கினாள். வண்ணானிடம் சொல்லி அவன் கழுதையைக் குளிப்பாட்டி பெருமாள் கோவிலுக்கு கொண்டு வரச்சொல்லி ஏற்பாடு செய்தாள். பிறகு முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்திக்கொண்டு, கோவிலுக்கு வேலைக்காரிகள் துணைக்கு வர, வந்து சேர்ந்தாள். கோவிலில் எள் போட்டால் எள் கீழே விழமுடியாத அளவிற்கு கூட்டம் ஜேஜேவென்று அலை மோதியது. பட்டியும் வந்து ஒரு ஓரமாக நின்றிருந்தான். வண்ணான் கழுதையைத் தயாராக வைத்திருந்தான். தாசியும் அந்த ஊர் ராஜாவிடம் சென்று வணங்கி விடை பெற்றுக்கொண்டு, கழுதை மேல் ஏறி, நாராயணா, கோவிந்தா என்று சொல்லிக்கொண்டு கோவிலை மூன்று முறை வலம் வந்து, கொடிமரத்தினடியில் வந்து நின்றாள். அப்போது சரியாக உச்சிப்பொழுதாகியது.
எல்லோரும் புஷ்பக விமானம் வருவதை எதிர்பார்த்து வானத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். (நியாயமாக இங்கு தொடரும் போடவேண்டும். ஆனால் எல்லோருடைய வேண்டுகோளுக்கும் செவிசாய்த்து தொடருகிறேன்). அப்போது விக்கிரமாதித்தனாகிய கிளி கொடிமரத்தின் மீது வந்து உட்கார்ந்து பின்வருமாறு சொல்லத்தொடங்கியது.
“அகோ வாரும் சகல தேசத்து ராஜாக்களே, பொதுஜனங்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம். எல்லோரும் நான் சொல்வதைக் கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கள். இதோ நிற்கிறாளே இந்த தாசிக்கும் எனக்கும், ஒரு விவகாரம் ஏற்பட்டது. அது என்னவென்றால், இவள் கொண்டுவந்த ஒரு வழக்கில் நான் ஆகாயத்திற்கும் பூமாதேவிக்கும் பொதுவாக ஒரு தீர்ப்பு சொன்னேன். அதை இவள் ஒப்புக்கொள்ளாமல் என்னைக்கொன்று கறி சமைத்து தின்கிறேனென்று சபதஞ்செய்தாள். அதற்கு நான் இவளை இந்தக்கோலம் செய்கிறேனென்று சபதம் செய்தேன். யாருடைய சபதம் ஜெயித்தது என்று நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறியது. கூடியிருந்த ஜனங்கள் எல்லோரும் கைகொட்டி சிரித்தார்கள். இதைப்பார்த்த தாசிக்கு அவமானம் தாங்கமாட்டாமல் அங்கேயே கீழேவிழுந்து பிராணணை விட்டாள். கிளியும் பட்டியின் தோள்மீது சென்று உட்கார்ந்து கொண்டது. பட்டியும் ஓகோ, இது நம் ராஜனின் லீலைதான் என்று புரிந்துகொண்டு, ராஜனைக்கூட்டிக்கொண்டு தன் ஊருக்குப்போனான்.
ஊருக்குப்போனபின் விக்கிரமாதித்தன் தன் உடம்பிற்குள் எவ்வாறு பிரவேசம் செய்தான் என்பது ஒரு தனிக்கதை.
முற்றும்.
// (நியாயமாக இங்கு தொடரும் போடவேண்டும். ஆனால் எல்லோருடைய வேண்டுகோளுக்கும் செவிசாய்த்து தொடருகிறேன்). //
பதிலளிநீக்குஅஃகஃகா!
கதை, நெம்ப பிரமாதமுங்க....
//ஊருக்குப்போனபின் விக்கிரமாதித்தன் தன் உடம்பிற்குள் எவ்வாறு பிரவேசம் செய்தான் என்பது ஒரு தனிக்கதை.//
அதயுந்தேன் சொல்லுங்க சித்த...
// ஊருக்குப்போனபின் விக்கிரமாதித்தன் தன் உடம்பிற்குள் எவ்வாறு பிரவேசம் செய்தான் என்பது ஒரு தனிக்கதை. //
பதிலளிநீக்குஐயா இந்த கதை எப்ப வரும்?
விக்கிரமாதித்தன் அவன் உடலில்
பதிலளிநீக்குபுகுந்த கதையை சீக்கிரம்
எழுதுங்க (தாத்தா) அய்யா.
நல்லா சொல்லியிருக்கீங்க. ஆனா மறுபடியும் சஸ்பென்ஸா?. ஆனா இந்த முறையில் எழுதினால்தான் படிக்க சுவை கூடும். ஆனா இதுபோல ஒரு கதை முடித்து, அடுத்த பதிவு இது என சஸ்பென்ஸ் வைப்பது படித்தவர்களுக்கு தொய்வை ஏற்ப்படுத்தாது. இது வால்பையன் அருண் எனக்கு சொன்ன கருத்து அய்யா. மிக்க நன்றி. இன்றைய பதிவு போலவே எழுதுங்கள். நன்றி.
பதிலளிநீக்குthis is an excellent vikramadithyan story
பதிலளிநீக்குஉங்கள் உற்சாகத்தை விட எனக்கு இன்று ஒரு மகிழ்ச்சியான தினம். ஒரு இடுகை என்பது தெளிவாக அழகாக நல்ல எழுத்துருக்களுடன் நான் பார்த்த படித்த சில இடுகைகளில் இதுவும் ஒன்று.
பதிலளிநீக்குநல்வாழ்த்துகள் ஐயா.
ராகவன் நைஜீரியா சொன்னது:
பதிலளிநீக்கு//ஐயா இந்த கதை எப்ப வரும்?//
பழமைபேசி சொன்னது:
//அதயுந்தேன் சொல்லுங்க சித்த...//
சீக்கிரம் சொல்லீடறனுங்க
சைவகொத்துப்பரோட்டா சொன்னது:
பதிலளிநீக்கு//விக்கிரமாதித்தன் அவன் உடலில்
புகுந்த கதையை சீக்கிரம்
எழுதுங்க (தாத்தா) அய்யா.//
சீக்கிரம் எழுதீடுறனுங்க. தாத்தாவே நல்லா இருக்குதுங்க.
பித்தனின் வாக்கு சொன்னது:
பதிலளிநீக்கு//நல்லா சொல்லியிருக்கீங்க. ஆனா மறுபடியும் சஸ்பென்ஸா?. ஆனா இந்த முறையில் எழுதினால்தான் படிக்க சுவை கூடும். ஆனா இதுபோல ஒரு கதை முடித்து, அடுத்த பதிவு இது என சஸ்பென்ஸ் வைப்பது படித்தவர்களுக்கு தொய்வை ஏற்ப்படுத்தாது. இது வால்பையன் அருண் எனக்கு சொன்ன கருத்து அய்யா. மிக்க நன்றி. இன்றைய பதிவு போலவே எழுதுங்கள். நன்றி.//
நன்றி.நன்றி.நன்றி.
infopediaonlinehere said:
பதிலளிநீக்கு//this is an excellent vikramadithyan story//
Thank you very much.
ஜோதிஜி சொன்னது:
பதிலளிநீக்கு//உங்கள் உற்சாகத்தை விட எனக்கு இன்று ஒரு மகிழ்ச்சியான தினம். ஒரு இடுகை என்பது தெளிவாக அழகாக நல்ல எழுத்துருக்களுடன் நான் பார்த்த படித்த சில இடுகைகளில் இதுவும் ஒன்று.
நல்வாழ்த்துகள் ஐயா.//
நன்றிகள் பல. இன்று வரும் பெரும்பாலான பதிவுகள் கருத்துத் தெளிவு இல்லாமல் இருப்பது வருத்தத்திற்கு உரிய விஷயம்.
இது மாதிரி இன்னும் போடுங்க!!.
பதிலளிநீக்கு'''ஊருக்குப்போனபின் விக்கிரமாதித்தன் தன் உடம்பிற்குள் எவ்வாறு பிரவேசம் செய்தான் என்பது ஒரு தனிக்கதை.'''''
பதிலளிநீக்குஇந்த கதை எப்ப போடுவீங்க.....
கதை அருமை,
பதிலளிநீக்குவிக்கிரமாதித்தன் தன் உடம்பிற்குள் எவ்வாறு பிரவேசம் செய்தான்- அடுத்த கதை தொடரட்டும்.
வாழ்த்துக்கள்.
கதை அருமை ...
பதிலளிநீக்குபகிர்வுக்கு மிக்க நன்றி
அழகும் சுவையும் சேர்ந்த சொற்சித்திரம்.
பதிலளிநீக்கு' நீதான் மாட்டி விட்டாய் ' என்று என்னை
சிரச்சேதம் பண்ணாமல் இருந்தால் சரிதான்.
மேலும் எழுவீர்களா? அப்புறம் என்னை திட்டக்கூடாது.
இது ஜவ்வாக இழுத்துக்கொண்டு போகுமே!?
கக்கு-மாணிக்கம் சொன்னது:
பதிலளிநீக்கு//அழகும் சுவையும் சேர்ந்த சொற்சித்திரம்.
' நீதான் மாட்டி விட்டாய் ' என்று என்னை
சிரச்சேதம் பண்ணாமல் இருந்தால் சரிதான்.
மேலும் எழுவீர்களா? அப்புறம் என்னை திட்டக்கூடாது.
இது ஜவ்வாக இழுத்துக்கொண்டு போகுமே!?//
ஒவ்வொண்ணா எழுதறேன் மாணிக்கம், அடுத்த கதை சிரச்சேதம் பண்ற கதைதான். விக்கிரமாதித்தன் கதை படிக்க வந்துட்டு சிரச்சேதத்திற்கு எல்லாம் அஞ்சலாமா? அம்மன் தீர்த்தமும், பிரம்பும், கந்தசாமியும் இருக்கும் வரை எந்த சேதத்திற்கும் பயப்படத் தேவையில்லை.
ரொம்ப அருமையான கதை.., இன்ரஸ்டிங்கா இருந்தது.
பதிலளிநீக்குகதை நல்லாயிருக்கு...
பதிலளிநீக்குStarjan and அஹமது இர்ஷாத்,
பதிலளிநீக்குவருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி
இப்படி கதை கேட்டு எத்தனை நாள் ஆச்சு.. .பொளந்து கட்டிடீங்கோ.
பதிலளிநீக்குதாராபுரத்தான் சொன்னது:
பதிலளிநீக்கு//இப்படி கதை கேட்டு எத்தனை நாள் ஆச்சு.. .பொளந்து கட்டிடீங்கோ.//
எல்லாருஞ் சொல்ரதப் பார்த்தா இந்தப்பதிவ கதை சொல்ற பதிவாகவே மாத்திரலாம் போல இருக்குதுங்கோ? எப்படியோ வம்பு தும்பு இல்லாமெ போனா சரித்தானுங்க.
நல்ல கதை,நல்ல பதிவு,தொடரட்டும் உங்கள் சேவை
பதிலளிநீக்குசுவையாகச் சொன்னீர்கள். இத்தகைய கதைகளை எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் படித்து ரசிக்கலாம்.
பதிலளிநீக்குரொம்ப நாளாச்சு விக்ரமாதித்தன் கதை படித்து!
பதிலளிநீக்குஆஹா..விக்ரமாதித்தன் கதை படித்து எத்தனை நாளாயிற்று!!
பதிலளிநீக்குதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Dr.எம்.கே.முருகானந்தம் சொன்னது:
பதிலளிநீக்கு//சுவையாகச் சொன்னீர்கள். இத்தகைய கதைகளை எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் படித்து ரசிக்கலாம்.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டாக்டர்.
என்னுடைய சிறு வயது முதல் படித்து வருகிறேன். இருந்தாலும் அதன் வசீகரம் மாறவில்லை.
ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி சொன்னது:
பதிலளிநீக்கு//ஆஹா..விக்ரமாதித்தன் கதை படித்து எத்தனை நாளாயிற்று!!//
நன்றி,விக்கிரமாதித்தன் கதைகள் சாகா வரம் பெற்றவை.
அடுத்த கதை இன்னும் வர்லீங்களா?
பதிலளிநீக்குபழமைபேசி அவர்களுக்கு, என்னுடைய கம்ப்யூட்டருக்கு பை-பாஸ் ஆபரேஷன் செய்திருக்கிறது. இன்னும் நான்கு நாள் ரெஸ்ட் வேண்டும். அதனால்தான் இந்த இடைவெளி. மன்னிக்கவும்.
பதிலளிநீக்குகந்தசாமி சார், உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
பதிலளிநீக்குStarjan said:
பதிலளிநீக்கு//கந்தசாமி சார், உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.//
மிக்க நன்றி, ஸ்டார்ஜன் அவர்களே.
படித்த கதை . மீண்டும் அதை படிப்பதில் ஒரு த்ரில் இருக்கத்தான் செய்கிறது . நன்றாக எழுதுகிறீர்கள்
பதிலளிநீக்குLK said:
பதிலளிநீக்கு//படித்த கதை . மீண்டும் அதை படிப்பதில் ஒரு த்ரில் இருக்கத்தான் செய்கிறது . நன்றாக எழுதுகிறீர்கள்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
சீக்கிரம் சொல்லிடுங்க
பதிலளிநீக்குடாக்டர். இல்லையின்னா இன்னொரு டாக்கடர்கிட்ட வைத்தியத்துக்கு போகவேண்டீ வரும்.
கதை மிக அழகாய் நேர்த்தியாய் சொல்லுறீங்க.
அதற்குதான் பெரியவங்க வேணுமுங்கிறது. பக்குவமா எதையும் எடுத்துச்சொல்ல..
அன்புடன் மலிக்கா சொன்னது:
பதிலளிநீக்கு//சீக்கிரம் சொல்லிடுங்க
டாக்டர். இல்லையின்னா இன்னொரு டாக்கடர்கிட்ட வைத்தியத்துக்கு போகவேண்டீ வரும்.
கதை மிக அழகாய் நேர்த்தியாய் சொல்லுறீங்க.
அதற்குதான் பெரியவங்க வேணுமுங்கிறது. பக்குவமா எதையும் எடுத்துச்சொல்ல..//
அதுக்குள்ள நான் வேலைக்குப் போனதப்பத்தியும் கொஞ்சம் சொல்லீடறனுங்க. நிச்சயமா விக்கிரமாதித்தன உட்றமாட்டேனுங்க.