கக்கு-மாணிக்கம் அவர்கள் ஒரு பதிவில் தாசி அபரஞ்சி கதையை எழுதியிருந்தார்கள். மாணிக்கம், அதில் கோயில் குருக்கள் ஒருவர் ஒரு இக்கட்டில் சிக்கியதோடு கதையை நிறுத்திவிட்டார்கள். கதையை எப்போதும் தொங்கலில் விடப்படாது. அந்தக்கதையை நான் முடிக்கட்டுமா என்று கேட்டதிற்கு “தாராளமா செய்யுங்கோ” என்று பர்மிஷன் கொடுத்துவிட்டார். அதனால்தான் இந்தப்பதிவு.
முன்னொரு காலத்தில் உச்சினி மாகாளிபுரம் என்ற ஊரைத் தலைநகரமாகக் கொண்ட ஒரு ராஜ்ஜியத்தை விக்கிரமாதித்தன் என்ற வீரதீர பராக்கிரமம் பொருந்திய ராஜா ஆண்டு கொண்டிருந்தான். அவனுக்கு மதியூகம் மிகுந்த பட்டி என்ற மகா மந்திரி துணையாக இருந்தான். அவர்கள் இருவரும் நாடாறு மாதம், காடாறு மாதம் என்று தங்கள் ஆட்சிக்காலத்தைப் பிரித்து நாட்டை ஆண்டு வந்தார்கள்.
இப்படி இருக்கையில் அந்த ஊரில் உள்ள ஒரு கம்மாளனுக்கும் ராஜாவிற்கும் நட்பு உண்டாயிற்று. பட்டி, ராஜாவிடம் “கம்மாளன் நட்பு கூடாது, கம்மாளன் காரியத்தின் மேல்தான் கண்ணாயிருப்பான்” என்று பலமுறை எடுத்துச்சொல்லியும், ராஜா கேட்கவில்லை. தனக்குத் தெரிந்த எல்லா வித்தைகளையும் (கூடுவிட்டு கூடு பாயும் வித்தை உட்பட) அந்தக்கம்மாளனுக்கு சொல்லிக்கொடுத்து விட்டான். பட்டிக்கு இது பிடிக்காவிட்டாலும் “ராஜாவிற்கு எதிராக நாம் என்ன செய்யமுடியும், நாம் சொல்லவேண்டியதைச் சொல்லியாகிவிட்டது, வேறு என்ன செய்யமுடியும், நடப்பது நடக்கட்டும், எதற்கும் நாம் ஜாக்கிரதையாகவே இருப்போம்” என்று மனதில் எண்ணிக்கொண்டு இருந்தான்.
இப்படியிருக்கையில் ராஜா காடாறு மாதம் போகவேண்டிய நாள் வந்தது. வழக்கமாக பட்டியையும் கூட்டிக்கொண்டு போகும் விக்கிரமாதித்தன் இந்த முறை பட்டியை நாட்டிலேயே இருந்து ராஜ்ஜிய பரிபாலனம் செய்து கொண்டிருக்கும்படி கூறிவிட்டு, தனியாகவே காட்டுக்குப் போய்விட்டான். சிறிது நாள் கழித்து இதைத் தெரிந்துகொண்ட கம்மாளன் தானும் புறப்பட்டுப் போய் விக்கிரமாதித்தனுடன் சேர்ந்துகொண்டான். கம்மாளனுக்கு எப்படியாவது விக்கிரமாதித்தன் உடம்பில் புகுந்து இந்த ராஜ்ஜிய சுகங்களையெல்லாம் அனுபவிக்கவேண்டும் என்கிற ஆசை மனதில் இருந்துகொண்டேயிருந்தது. ஆனால் அதை வெளிக்காட்டாமல் கபடமாகவே ராஜாவுடன் நட்பாக இருந்தான். இப்போது ராஜா தனியாகக் காட்டுக்குப்போயிருப்பதால், ஆஹா, நம் திட்டத்தை நிறைவேற்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது என்று சந்தோஷப்பட்டுத்தான் காட்டுக்குப்போய் விக்கிரமாதித்தனுடன் சேர்ந்துகொண்டான்.
ஒருநாள் சாப்பாட்டுக்குப்பிறகு விக்கிரமாதித்தன் ஒரு மரத்தடியில் இந்தக்கம்மாளனின் மடியில் தலை வைத்துப்படுத்துக் கொண்டிருந்தான. அப்போது அந்த மரத்தில் பல கிளிகள் வசித்துக்கொண்டிருந்தன. அவற்றில் ஒரு ஆண் கிளி இறந்துபோக அதன் ஜோடி பெண் கிளியானது அந்த ஆண் கிளியின் மேல் விழுந்து பிரலாபிப்பதைப் பார்த்த விக்கிரமாதித்தனுக்கு அந்தப் பெண் கிளியின்பேரில் மிகுந்த கருணை உண்டாயிற்று. உடனே தன்னுடைய கூடுவிட்டு கூடு பாயும் வித்தையை உபயோகித்து அந்த ஆண் கிளியின் உடலில் பிரவேசித்து அந்தப்பெண் கிளிக்கு ஆறுதலாயிருந்தான்.
நீண்டநேரமாக விக்கிரமாதித்தன் உடலில் அசைவு எதுவும் இல்லாதிருப்பதைப் பார்த்த கம்மாளன் மேலே கிளிகளைப்பார்த்தவுடன் நடந்தவைகளை யூகித்துவிட்டான். ஆஹா, நாம் வெகுநாளாக எதிர்பார்த்த சந்தர்ப்பம் இப்போது வந்துவிட்டது என்று சந்தோஷப்பட்டு உடனே தன்னுயிரை விக்கிரமாதித்தன் உடலில் புகுத்தி, எழுந்து, தன்னுடைய உடலுக்குத் தீ வைத்து எரித்துவிட்டு நேராக உச்சினிமாகாளிபுரம் வந்து சேர்ந்தான்.
இதைப்பார்த்த பட்டிக்கு யோசனை என்ன வந்தது என்றால் “நமது ராஜாவென்றால் காடாறு மாதம் முடிவதற்கு முன்னால் நாட்டுக்கு திரும்பமாட்டாரே, இதில் ஏதோ சூது இருக்கிறது. அதைக்கண்டு பிடிப்போம்” என்று அந்தக்கம்மாளன் ஊரில் இருக்கிறானா என்று ஆட்களை விட்டு விசாரித்தான். அந்தக்கம்மாளன் ஊரில் இல்லையென்று தெரியவந்தது. ஆஹா, இது அந்தக்கம்மாளன் வேலையாகத்தான் இருக்கவேண்டும், நம் மன்னர் நாம் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் கேட்காமல் மோசம் போய்விட்டாரே? என்று மனதுக்குள் வியாகூலம் மேலிட்டு, ஆனாலும் இப்போது என்ன செய்யமுடியும், “பதறாத காரியம் சிதறாது” என்றபடி பொறுத்திருப்போம் என்று மனதைத் தேற்றிக்கொண்டு கம்மாளனாகிய ராஜாவை வரவேற்று ஆகவேண்டிய காரியங்களைப்பார்த்திருந்தான்.
ராஜா தன்னுடைய காரியங்களை முடித்துவிட்டு வருவதற்குள் அந்தப்புரத்திற்கு ஆள் அனுப்பி, நம் ராஜா மோசம் போனார் போல் தெரிகிறது. அதனால் நான் மறுபடியும் சொல்லி அனுப்பும் வரையிலும் நீங்கள் எல்லோரும் விரதம் இருப்பதாகவும், விரதம் முடிந்தபிறகுதான் ராஜா அந்தப்புரத்துக்குள் வரலாம் என்பதாகவும் சொல்லிவிடுங்கள் என்று திட்டம் செய்தான். கம்மாளன் வந்தவுடன் அவனிடம் இந்த விபரத்தைச்சொல்லி, அவனுக்கு வேறு விடுதி ஏற்பாடு செய்து ஏராளமான பணிப்பெண்களை ஏற்பாடு செய்து அனுப்பிவைத்தான். அவனும் சந்தோஷமாகச்சென்று பலவிதமான லீலாவிநோதங்களில் ஈடுபட்டு ராஜ்ஜியத்தை எள்ளளவும் சட்டை பண்ணாமல் சந்தோஷமாக இருந்தான்.
அவன் சந்தோஷத்தை நாம் இப்போது கெடுக்கவேண்டாம்....மீதி அடுத்த பதிவில்
நல்லாக் கொண்டு போயி, வசமா ஒரு ‘இக்கு’ல நிறுத்திக் கலக்குறீங்க அய்யா!
பதிலளிநீக்குவாங்க பழமைபேசி,
பதிலளிநீக்குஎப்பூடி நம்ம டெக்னிக்கு? நல்லா இருக்கில்ல?
சோளப்பணியாரம்லாம் சாப்பிட்டு தெம்பா இருக்காப்ல தெரியுது.
இப்படி கதை கேட்டு ரொம்ப நாளு ஆச்சுங்கோ..
பதிலளிநீக்குபழைய கதைகளின் எதோ ஒரு சாதியை இழிவு படுத்துவதற்காகவே ஒரு சாதியின் பெயர் கையாளப் பெற்றிருக்கும், சாதி அமைப்பில் இருந்தாலும் மக்கள் அனைத்து சாதியினரையும் மதித்து நடக்கவில்லை, சகித்துக் கொண்டு தான் வாழ்ந்திருக்கிறார்கள் என்று புரிகிறது.
பதிலளிநீக்கு:)
ரொம்ப நல்லாவே கதை சொல்றீங்க!!!
பதிலளிநீக்குஅடிக்கடி கதை எழுதுங்களேன்.
கம்மாளன்னா அர்த்தம் புரியலையே, என்ன ஐயா ?
பதிலளிநீக்குகோவி.கண்ணன் சொன்னது:
பதிலளிநீக்கு//பழைய கதைகளின் எதோ ஒரு சாதியை இழிவு படுத்துவதற்காகவே ஒரு சாதியின் பெயர் கையாளப் பெற்றிருக்கும், சாதி அமைப்பில் இருந்தாலும் மக்கள் அனைத்து சாதியினரையும் மதித்து நடக்கவில்லை, சகித்துக் கொண்டு தான் வாழ்ந்திருக்கிறார்கள் என்று புரிகிறது.
:)//
அப்படித்தான் தெரிகிறது. போன நூற்றாண்டின் பாதிவரை கதைகளில் சாதிப்பெயர் இருந்திருக்கிறது. புதுகைப்பித்தனின் "கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்" கதை படித்திருப்பீர்கள். பழைய கதை என்பதால் அப்படியே கொடுத்துள்ளேன்.
நாய்க்குட்டி மனசு சொன்னது;
பதிலளிநீக்குகம்மாளன்னா அர்த்தம் புரியலையே, என்ன ஐயா ?//
எனக்கும் இதுவரை அது என்னவென்று சரியாகப்புரியவில்லை. அது ஒரு சாதிப்பெயராக இருக்கலாம்?
நான் நினைத்தது சரிதான். ஒரு முழுமையான அனுபவம் உள்ளவர்களிடமிருந்து வரும் எந்த ஒரு செய்தியும் சுவையாகவே இருக்கும்.அதுவும் கதை என்றால் கேட்கவே வேண்டாம்.
பதிலளிநீக்குபழங்கால கதைகளில் சாதியீய (அணைத்து சாதிகளும் )குறியீடுகள் மிக சாதாரணமாக காணப்படும்.தற்காலத்தில் அவைகளை படிக்கும் போது வித்தியாசமாகவே இருக்கும்.தாசி அபரஞ்சி கதை விக்ரமாதித்தன் கதைகளில் வரும் ஒரு உப கதைதான்.
இதனைத்தான் அந்நாளில் எஸ் .எஸ். வாசன், (அன்றைய ஜெமினி ஸ்டுடியோ அதிபர் )
திரைப்படமாக எடுத்து அந்நாளில் 'உயர் சாதியாக ' கருதப்பட்ட பிராமணர்களிடமிருந்து நிறைய எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் பெற்றுக்கொண்டார் என்று அறியப்படுகிறது.
எத்தனை முறைதான் இந்த விரமாதித்தன் கதைகளை படித்தாலும், சொல்ல கேட்டாலும் அதில் கிடைக்கும் இனிமையான அனுபவம், மிக்க அபாரமான கற்பனையும்,அறிவுதிரனுடன் அக்கதைகள் அமைக்கப்பட்ட முறைகள் எல்லாம் நம்மை வியக்க வைக்கும்.
பாவம் இன்ற இளையவர்கள். இவர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு கதை சொல்லும் முறை நமது நாட்டில் மிக பழங்காலமாக இருந்து வந்துள்ளது தெரியுமோ என்னவோ?!
தற்கால 'காமிக்ஸ்'மற்றும் Harry Potter serials போன்றவைகளை அறிந்துள்ளவர்கள் நம்நாட்டு விக்ரமாதித்தன் கதைகளை அறிவார்களா என்பது சந்தேகமே.
கக்கு-மாணிக்கம்,
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி
தாராபுரத்தான் அவரகளுக்கு நன்றி.
பதிலளிநீக்குஎந்த துறையில் வேலை செய்தீர்கள் என்று தெரிய ஆவல்.
கம்மாளன்னா அர்த்தம் புரியலையே, என்ன ஐயா ?
பதிலளிநீக்குகம்மாளன் என்றால் தச்சு தொழில் செய்யும் ஆசாரிமார்...
’’’’கம்மாளன் காரியத்தின் மேல்தான் கண்ணாயிருப்பான்”’’’’’
முற்றிலும் உண்மை ...நாங்கள் இதில் அனுபவ பட்டிருக்கிரோம்..
காரியம் முடிந்ததும் கழன்று விடுவார்கள்....
நல்ல கதை தொடருங்கள்....
உங்கள் கதையில் பட்டி என்பது ஒரு ஆளுடய பெயரா?
பதிலளிநீக்குஏன் முரளி படத்தை உங்கள் பதிவில் போட்டு இருகிரீகள்....
malar said:
பதிலளிநீக்கு//உங்கள் கதையில் பட்டி என்பது ஒரு ஆளுடய பெயரா?
ஏன் முரளி படத்தை உங்கள் பதிவில் போட்டு இருகிரீகள்....//
பட்டி என்பது மந்திரியின் பெயர். மலயாளப் "பட்டி" க்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.
ஒரு ராஜா படம், சாதாரண உடையில் போடலாம் என்று கூகுளில் தேடும்போது இந்தப்படம் கிடைத்தது. போட்டுவிட்டேன். முரளி என்பது யார் என்று எனக்குத்தெரியாது. எதற்கும் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளலாம் என்று படத்தை எடுத்துவிட்டேன். மலருக்கு நன்றி.
வணக்கமுங்க.. சுய புராணம்... இயற்கையிலேயே சேவை உணர்வு கொண்ட குடும்பத்தில் பிறந்த நான்...மக்களைத் தேடிச் சென்று சேவை செய்து வரும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் 35 வருட காலம் பணியாற்றி ஓய்வு பெற்று ஓய்வுக்கே ஓய்வு கொடுத்து வருகிறேன் அய்யா.
பதிலளிநீக்குநன்றி, தாராபுரத்தான் அவர்களே,
பதிலளிநீக்குவாய்ப்பு அமைந்தால் சந்திப்போம்.
காசிலிங்கம்பாளையம் காங்கிரஸ் பிரமுகர் பழனிசாமிக்கவுண்டர் மகன் டாக்டர்.கே.பி.ராமசாமி (அக்ரி) அவர்கள் என் நண்பர். உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.
கதையும் நடையும் நன்றாக இருக்கிறது. நான் கேட்க நினைத்ததை மலர் கேட்டுவிட்டார். அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்கு-தோழன் மபா
தமிழன் வீதி சொன்னது:
பதிலளிநீக்கு//கதையும் நடையும் நன்றாக இருக்கிறது. நான் கேட்க நினைத்ததை மலர் கேட்டுவிட்டார். அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.
-தோழன் மபா//
வருகைக்கு நன்றி. இதோ அடுத்த பதிவு!