ஞாயிறு, 13 மார்ச், 2011

ஆஹா, தேர்தல் வந்து விட்டது


எல்லோரும் தேர்தலைப்பற்றி பதிவுகள் போட்டுக்கொண்டிருக்கும்போது நான் மட்டும் சும்மா இருந்தால் நன்றாக இருக்குமா? ஆகவேதான் இந்தப் பதிவு.
 
சமீபத்தில், 1951 ம் வருடம் டிசம்பர் மாதம். நான் SSLC பாஸ் ( நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள், “பாஆஆஆஆஆஆஆஆஆஸ்” ) செய்துவிட்டு காலேஜில் இன்டர்மீடியேட்டில் சேர்ந்து படித்துக்கொண்டிருந்தேன். அரை வருடப் பரீட்சை முடிந்து லீவு விட்டிருந்தார்கள். வழக்கம்போல் அந்தக் காலத்து ஆர்.எஸ்.புரத்தை சர்வே எடுத்துக் கொண்டிருந்தேன். (நான் ஆர். எஸ். புரத்தில்தான் குடியிருந்தேன்). திடீரென்று யாரோ என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டார்கள். திரும்பிப் பார்த்தால் ஹைஸ்கூலில் என்னுடன் படித்த வகுப்புத் தோழன். அவன் நன்றாக வளர்ந்து ஆஜானுபானுவாக இருப்பான். என்னை விட நான்கு வயது பெரியவன். அஸ்திவாரம் நல்ல ஸ்ட்ராங்க்.

“என்னடா செய்து கொண்டிருக்கிறாய்” என்றான். “காலேஜ் லீவு, சும்மா சுற்றிக்கொண்டு இருக்கிறேன்” என்றேன். அப்படியானால் என் கூட வா என்று ஒரு ஆபீசுக்கு கூட்டிக்கொண்டு போனான். அங்கு ஒரு பத்துப் பதினைந்து பேர் என்னென்னமோ காகிதங்களை வைத்துக்கொண்டு அங்கும் இங்கும் ரொம்ப பிஸியாக போய்க் கொண்டு இருந்தார்கள். காலியாக இருந்த ஒரு டேபிளில் என்னை உட்காரச் சொல்லிவிட்டு, ஒருவரிடம் என்னைக் காண்பித்து ஏதோ சொல்லிவிட்டு வெளியில் போய் விட்டான். அந்த நபர் என்னிடம் ஒரு லிஸ்டைக் கொடுத்து கார்பன் வைத்து நான்கு காப்பி எடுக்கச் சொல்லிவிட்டு, அவர் வேறு வேலையைப் பார்க்கப் போய்விட்டார். 

பேப்பர், கார்பன் எல்லாம் ஏகப்பட்டது கிடந்தன. நானும் மும்முரமாக காப்பி எடுக்க ஆரம்பித்தேன். அப்படியே சுற்றுமுற்றும் பார்த்ததில் தெரிந்தது – அது ஒரு தேர்தல் ஆபீஸ் என்று. என்னுடன் படித்தவர்கள், மற்றும் தெரிந்தவர்கள் சிலர் இருந்தார்கள். விசாரித்ததில் தெரிந்தது – நாங்கள் எல்லோரும் தேர்தல் தொண்டர்கள். அந்தக்காலத்தில் காங்கிரஸ் ஒன்றுதான் எங்களுக்குத் தெரிந்த ஆரசியல் கட்சி. ஊரில் செல்வாக்கான காங்கிரஸ்காரர்கள் பலர் உண்டு. எல்லோருக்கும் சீட் கொடுக்க முடியாதல்லவா? அப்படி சீட் கிடைக்காத வெங்கிடசாமி நாயுடு என்பவர் சுயேச்சையாக கூஜா சின்னத்தில் நின்றார். அந்த தேர்தல் ஆபீஸ் அவருக்காக அந்தப் பகுதியில் பிரசாரம் செய்ய எற்படுத்தப்பட்ட ஆபீஸ். அவருக்கு பிற்காலத்தில் கூஜா வெங்கிடசாமி நாயுடு என்ற பெயர் நிலைத்து விட்டது.

எங்களுக்கு தினம் மூன்று ரூபாய் கூலி அல்லது கௌரவமாக சம்பளம். காலை, மாலை இரு வேளை டிபன். காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை. இந்த டிபனுக்கு பக்கத்தில் இருந்த ஒரு ஓட்டலில் அக்ரிமென்ட். அதாவது என் நண்பன் ஒரு சீட்டு கொடுப்பான். அதை அங்கு கொடுத்தால் ஒரு வடை அல்லது போண்டா, மற்றும் ஒரு காப்பி கொடுப்பார்கள். அதற்கு அளவாக பணத்தை எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுப்பான். எனக்கு மட்டும் பணத்தை எழுதாமல் காலியாகக் கொடுப்பான். நான் இஷ்டம்போல் சாப்பிட்டுவிட்டு பில் வந்ததும் அந்தப் பணத்தை அந்தச் சீட்டில் எழுதிக் கொடுத்துவிட்டு வந்து விடுவேன். இது எனக்கு ஸ்பெஷல் சலுகை.

எங்கள் வேலை என்னவென்றால், அந்த பகுதியில் உள்ள வீதிகளுக்கு ஒவ்வோன்றாகச் சென்று அங்குள்ள வோட்டர்களிடம் துண்டுப் பிரசுரங்களைக் கொடுப்பது. வோட்டர்கள் லிஸ்டை வைத்துக்கொண்டு வோட்டர்கள் லிஸ்ட் பிரகாரம் சரியாக இருக்கிறார்களா என்று செக் செய்வது, இத்தியாதிகள். வோட்டர்களிடம் ஓட்டுக்கேட்பதற்கு, பெரிய மனிதர்கள் அடங்கிய ஒரு குழு தனியாக வேலை செய்தது. இதற்காக எங்களுக்கு இரண்டு பேர்களுக்கு ஒரு குதிரை வண்டி வாடகைக்கு அமர்த்திக் கொடுத்திருந்தார்கள். தேர்தலுக்கு முந்தைய வாரம் முழுவதும் இந்த வேலைதான்.

நடுநடுவில் டிபன் சாப்பிட ஓட்டலுக்குப் போவது, மதிய உணவிற்கு வீட்டுக்குப் போவது எல்லாம் இந்த குதிரை வண்டியில்தான். தேர்தலுக்கு முன் தினம் இரவு டூட்டியும் பார்த்தோம். தேர்தல் அன்று வீடு வீடாகச் சென்று வோட்டர்களை ஒட்டுப் போட அழைத்துப் போகச்சொன்னார்கள். ஆனால் ஒருவரும் குதிரை வண்டியில் வரவில்லை. நாங்கள் தொண்டர்கள் மட்டும் குதிரை வண்டியில் அங்குமிங்கும் சுற்றிக்கொண்டு இருந்தோம். ஒரு வழியாகத் தேர்தல் நடந்து முடிந்தது.

கூஜா வெங்கிடசாமி நாயுடு இந்த தேர்தலுக்காக ஏகப்பட்ட செலவு செந்திருந்தார். சுமார் ஏழு லட்சம் ரூபாய் செலவு செய்ததாகக் கேள்விப்பட்டோம். அதாவது இன்றைய மதிப்பிற்கு ஏறக்குறைய ஏழு கோடி ரூபாய்க்குச் சமம். இவ்வளவு செலவு செய்தும் மக்களுடைய காங்கிரஸ் பக்தியை மாற்ற முடியவில்லை. இவருக்கு டெபாசிட் கூடக் கிடைக்கவில்லை. இவர் இவ்வளவு செலவு செய்து தோற்றுப் போனதைப் பற்றி கோவை மக்கள் வெகு காலம் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

இதுதான் நான் தேர்தல் தொண்டனாகப் பணியாற்றிய வரலாறு. அப்போது எனக்கு வயது 17. ஓட்டுப்போட அருகதை அற்றவனாக இருந்தேன்.

23 கருத்துகள்:

  1. பகிர்வுக்கு நன்றி வாத்யாரே அப்போ உங்களுக்கு அரசியல் அத்துப்படின்னு சொல்லுங்க!

    பதிலளிநீக்கு
  2. தேர்தல் ஜுரம் அய்யாவுக்கும் வந்துடுச்சு போல....

    எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை ரெண்டு!

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு.
    ஆனால் காலங்கள் மாறி விட்டன. இப்போது நிலைமை வேறு. நீங்கள் கற்பனை கூட செய்ய முடியாது.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. எப்படி இருந்த காங்கிரஸ் இப்போ ....

    பதிலளிநீக்கு
  5. களப்பணி ஆற்றிய கந்தசாமி அய்யாவின் தியாகத்தை இந்த நாட்டுக்கு கொண்டு வராமல் வாத்தியார் பணிக்கு திருப்பிய விதி செய்த சதியை வன்மையாக கண்டிக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  6. அட 17 வயதிலேயே தேர்தல் தொண்டு. உங்கள் நினைவுகளை மீட்டு எடுத்துத் தந்ததற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  7. பணம் அந்த காலத்திலயே விளையாடி உள்ளது ...!

    பதிலளிநீக்கு
  8. தகிடுதத்தம் திறந்தவெளி பல்கலைக் கழகம்!
    டிப்ளமோ இன் நாமம் போடுதல்:சர்டிபிகேட் இன் பட்டைநாமம்
    :ஒரு வருட கிடா வெட்டுதல் :டாக்டரேட் இன் ஜெபமாலை
    : ஒரு வார பாத்தியா ஓதுதல்- அனைத்தும் இலவசக் கல்வி!
    சத்துணவு: குச்சி மிட்டாய்: குருவி ரொட்டி:

    பதிலளிநீக்கு
  9. சார், நீங்கள் தேர்தல் வேலை பார்த்தீர்கள்;
    ஆனால், ஓட்டு போடவில்லை.
    இருந்தாலும் உங்களுக்கு நான்
    ஓட்டு போட்டுவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  10. // காலியாக இருந்த ஒரு டேபிளில் என்னை உட்காரச் சொல்லிவிட்டு, ஒருவரிடம் என்னைக் காண்பித்து ஏதோ சொல்லிவிட்டு வெளியில் போய் விட்டான்//

    டேபிள் சரிவராது; உட்கார சேர்தான் வேண்டும்
    என்று நீங்கள் கேட்டிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  11. ஜோதிஜி said...

    //களப்பணி ஆற்றிய கந்தசாமி அய்யாவின் தியாகத்தை இந்த நாட்டுக்கு கொண்டு வராமல் வாத்தியார் பணிக்கு திருப்பிய விதி செய்த சதியை வன்மையாக கண்டிக்கின்றேன்.//

    அப்படி அரசியல்ல நுழைந்திருந்தா அப்துல் கலாமுக்கு அப்புறம் இந்நாட்டின் ஜனாதிபதி ஆகியிருப்பேன். அதிர்ஷ்டம் இல்லாமப்போச்சுங்க.

    பதிலளிநீக்கு
  12. ஆஜர்... ஏழுலட்சம் என்பது இன்கம் டாக்ஸ் சுக்காக இருக்குமோ. ?

    பதிலளிநீக்கு
  13. இன்றைய அரசியல் பற்றியும் உங்களது அலசல்களை வேண்டுகிறோம்..

    பதிலளிநீக்கு
  14. //அரசியல்ல நுழைந்திருந்தா அப்துல் கலாமுக்கு அப்புறம் இந்நாட்டின் ஜனாதிபதி ஆகியிருப்பேன். அதிர்ஷ்டம் இல்லாமப்போச்சுங்க.//

    உண்மைதான் இன்னுமொரு அப்துல் கலாமை நாடு இழக்க வேண்டிதாயிற்று...

    பதிலளிநீக்கு
  15. நீங்க ஜனாதிபதி ஆனால், நான் வேணா, பிரதம மந்திரியா இருக்கட்டுமா?
    எனக்கு அனுபவம் இருக்கு..எங்க வீட்ல யார் என்ன .. எந்த தப்பு செஞ்சாலும் நான் தான் பொறுப்பு!

    பதிலளிநீக்கு
  16. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

    //நீங்க ஜனாதிபதி ஆனால், நான் வேணா, பிரதம மந்திரியா இருக்கட்டுமா?
    எனக்கு அனுபவம் இருக்கு..எங்க வீட்ல யார் என்ன .. எந்த தப்பு செஞ்சாலும் நான் தான் பொறுப்பு!//

    அப்ப நீங்க இப்பவே பிரதம மந்திரிதான் !

    பதிலளிநீக்கு
  17. G.M Balasubramaniam said...

    //ஆஜர்... ஏழுலட்சம் என்பது இன்கம் டாக்ஸ் சுக்காக இருக்குமோ. ?//

    இந்த நுணுக்கங்களெல்லாம் அப்போ எனக்குத் தெரியாதுங்க. அவரு இப்போ அப்புறம் என்ன ஆனாருன்னும் கவனிக்கலீங்க.

    பதிலளிநீக்கு
  18. எனக்கு குறிப்படப்பட்டுள்ள தேர்தல் நினைவுக்கு வருகிறது
    நான் வசித்துவந்த ராஜவீதியில் ஒரு தேர்தல் அலுவலகம் கூஜா
    வேட்பாளர் திறந்திருந்தார். அங்கும் நிறய தேர்தல் பணி
    பாவம் கூஜா மிக எளிதாக தோல்வி கண்டார்.
    தேர்தல் ஒரு திருவிழா போன்று இருந்தது
    அவை எல்லாம் மிகவும் ஒரு தலை பட்சமாக இருந்தது
    எப்படி இருப்பினும் இந்த பதிவு எனது இளமை நினைவுகளை
    திரும்பி பார்க்க வைத்துள்ளது
    மிக்க நன்றி
    பாலகோபால்

    பதிலளிநீக்கு