நேரம் ஆக, ஆக, என் கவலை அதிகரித்தது என்று சொன்னேனல்லவா? அப்போது கடவுள் என் முன்னால் பிரசன்னமானார். பசித்தவனுக்கு கடவுள் ரொட்டி ரூபமாகக் காட்சியளிப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள் அல்லவா? அது மாதிரி எனக்கு கடவுள் ஒரு ஆப்பிரிக்க இளைஞன் ரூபத்தில் காட்சியளித்தார்.
அந்த இளைஞன் அங்கு காப்பி சாப்பிட்டுவிட்டு தான் வந்திருந்த காரில் புறப்பட ஆயத்தமானார். நான் வெட்கம், மானம் எல்லாவற்றையும் விட்டு விட்டு (கடவுளிடம் வெட்கம், மானம் என்ன வேண்டியிருக்கிறது) அவரிடம் போய் பக்கத்து ஊர் பெயரைச்சொல்லி, "அந்த வழியாகப் போவீர்களா?" என்று கேட்டேன். அவர் "ஆமாம்" என்றார். நான் "எனக்கு அந்த ஊர் வரை லிப்ட் கொடுக்க முடியுமா" என்று கேட்டேன். அவர் "தாராளமாக" என்று சொல்லி என்னை அவர் காரில் ஏற்றிக்கொண்டார்.
அந்த ஊர் வந்ததும் என்னை இறக்கி விட்டார். அவருக்கு மிகவும் நன்றி சொல்லிவிட்டு, இறங்கினேன். அப்படியே நான் வணங்கும் முருகனுக்கும் ஒரு நன்றி சொல்லிவிட்டு அங்குள்ள பஸ் நிலையத்திற்கு சென்றேன். அங்கிருந்து ஆம்ஸ்டர்டாமிற்கு நிறைய பஸ்கள் இருந்தன.
கொஞ்சம் நேரம் இருந்ததாலும், தங்கும் ஓட்டலுக்குப் போக நிச்சயமான வழி பிறந்து விட்டதாலும், பக்கத்திலுள்ள ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோருக்குப் போனேன். காரணம் போகப்போகத் தெரியவரும். அங்கு சுற்றிப்பார்க்கும்போது தின்பண்டங்கள் விற்கும் பகுதியில் நம்ம ஊர் வேர்க்கடலை பொட்டு நீக்கி, வெள்ளை வெளேர் என்று பாக்கட் பண்ணி வைத்திருந்தார்கள். அரை கிலோ பாக்கட் இரண்டு வாங்கிக்கொண்டேன். ஆப்பிள் ஜூஸ் "டேட்ராபேக்" என்று சொல்லப்படும் பாக்கெட்டில் இருந்தது. அதில் இரண்டு ஒரு லிட்டர் பேக்கட் வாங்கிக்கொண்டேன்.
இந்த இரண்டும் எதற்காக என்றால்............... உண்மையைச் சொல்ல கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது. இருந்தாலும் இத்தனை வயசுக்கப்புறம் கூச்சத்தை விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன். ஆகவே உண்மையைச் சொல்லுகிறேன்.
வெளி நாடுகளில் எல்லா ஓட்டல்களிலும் "பெட் & பிரேக்பாஸ்ட்" என்ற முறைதான் கடைப்பிடிக்கப்படுகிறது. நம் நாட்டிலும் இப்போது தெரிய ஓட்டல்களில் இந்த முறை வந்து விட்டது. ஆகவே காலை உணவு என்னைப் போன்றவர்களுக்கு இலவசமாக கிடைத்து விடுகிறது. அங்கு ஓட்டல்களில் சாப்பிடும் பொருள்கள் என்ன விலைக்கு விற்கிறார்கள் என்று வெளிநாடு போய் வந்தவர்களுக்குத் தெரியும். எல்லாம் யானை விலை குதிரை விலைதான்.
ஆகவே மதியமும் இரவும் ஓட்டல்களில் சாப்பிடுவதென்றால் ஏகப்பட்ட செலவு செய்யவேண்டி வரும். தவிர ஓட்டலில் மெனு கார்டைப் பார்த்து ஆர்டர் செய்தால் என்ன கொண்டு வருவார்களென்று தெரியாது. புது ஊரில் தனியாகப் போய் ஓட்டலில் சாப்பிடவும் பயம். அது போக ஒரு சாப்பாட்டிற்கு 500 ரூபாய் (1990 ல்) செலவு செய்ய யாருக்கு மனசு வரும்? யாருக்கு வருமோ வராதோ, எனக்கு மனசு வரவில்லை. ஆகவே நான் என்ன செய்வேன் என்றால் காலை ஓட்டலில் கொடுக்கும் இலவச பிரேக்பாஸ்ட்டை ஒரு பிடி பிடித்துவிடுவேன். இது மாலை வரை தாங்கும். மதியம் நடுவில் ஏதாவது ஒரு ஜூஸ் வாங்கி சாப்பிட்டால் போதும்.
இரவு உணவுக்கு ஏதாவது செய்தாக வேண்டும். அதற்குத்தான் நிலக்கடலையும் ஆப்பிள் ஜூஸும். இவை எல்லாம் விலை சலீசாக ஸ்டோரில் கிடைக்கின்றன. இரண்டு கை கடலையைச் சாப்பிட்டு விட்டு ஒரு டம்ளர் ஜூஸ் குடித்து விட்டால் அன்றைய இரவிற்குப் போதும். இப்படியாகத்தான் என் வயிற்றுப் பாட்டை வெளி நாடுகளில் சமாளித்தேன்.
இப்படியாக எனது நெதர்லாந்து டூரை முடித்து அடுத்து இஸ்ரேலுக்குச் சென்று விட்டு இந்தியா திரும்பினேன். தொடரை அவசரமாக முடித்துவிட்டேன் என்று வருந்தவேண்டாம். எதுவும் அளவோடு இருந்தால்தான் சுவைக்கும்.
இஸ்ரேல் பயணத்தை ஒரு வரியிலேயே முடித்து விட்டீர்களே ஐயா
பதிலளிநீக்குஇல்லை ஜெயக்குமார். இஸ்ரேல் பயணத்தில் சொல்லவேண்டிய கருத்துகள் மூன்று இருக்கிறது. அதை மூன்று பதிவுகளாக எழுதுவேன்.
நீக்குமூன்று பதிவுகள் என்றால் ஒரே வாரத்தில் முடிந்து விடுமே. அதனால் என்ன அடுத்த தொடர் பதிவுக்கு ஒரு தலைப்பு கண்டுபிடித்து விடுங்கள்
நீக்குதிருச்சி தாரு
நெதெர்லாண்ட் பயணம் பற்றிய தொடர் சுவையாய் இருந்தது.வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதொடரை சுருக்கமாக முடித்துவிட்டாலும், நிச்சயம் இஸ்ரேல் பயணம் பற்றி சுவையான இன்னொரு தொடர் பதிவை தருவீர்கள் என நம்புகிறேன்.
அவசியம் அது பற்றி எழுதவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இஸ்ரேல் பயணத்தில் மறக்கமுடியாத இஸ்ரேலின் பிரதமர் கோல்டா மேயர், என்டெபி விமான நிலைய நிகழ்வுகள், சுற்றிலும் எதிரி நாடுகள் சூழ்ந்திருக்க எப்படி தன்னிறைவோடு இருக்க முடிகிறது என்பதை பற்றியெல்லாம் எழுதுவீர்கள் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம்
நீக்குசேலம் குருப்ரியா
பயனுள்ள அனுபவ பகிர்வுகள்..!
பதிலளிநீக்குமுதல் பதிவில் ஒரு மாதத்திற்கு இந்த பதிவை இழுக்கபோகிறேன் என்றீர்கள். நன்றாகத்தானே சென்று கொண்டிருந்தது. பின்னூட்டங்களும் நன்றாகவே இருந்தன. இவ்வளவு சிறப்பாக சென்று கொண்டிருந்த பயணத்தொடரை டக்கென்று முடித்தது ஏனென்று புரியவில்லையே
பதிலளிநீக்குசேலம் குரு
கரும்பு ருசியாக இருந்தாலும் வேருடன் சாப்பிடக் கூடாது அல்லவா? எதுவும் அப்டித்தான்.
நீக்குஎன்னங்க அய்யா இது. இன்னும் சுவாரஸ்யமான மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த பதிவுகள் வரும் என்று நினைத்தோம். இப்படி முடித்துவிட்டீர்களே. திண்டுக்கல் தனபாலன் அவர்கள் இழுவை என்று சொன்னதால் நிறுத்தி விட்டீர்களா?
பதிலளிநீக்குஇரண்டு மூன்று நிகழ்வுகளுடன் நிறுத்திட்டீங்களே. சிங்கம்-2 , விஸ்வரூபம்-2 மாதிரி இந்த தொடருக்கும் இரண்டாம் பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
திருச்சி அஞ்சு
இரண்டாம் பகுதியெல்லாம் வேண்டாம். பெரும்பாலும் இரண்டாம் பகுதிகள் சோபிப்பதில்லை. அய்யாதான் இஸ்ரேல் தொடர் சொல்லிவிட்டாரே. அதை படிப்போம்
நீக்குதிருச்சி காயத்ரி மணாளன்
ஐயையோ எங்க அய்யாவை யாரோ மிரட்டி விட்டார்கள். நெதர்லாந்த் மக்கள் திருடர்கள் என்று சொன்னதால். அது நிந்தாஸ்துதி என்று புரிந்து கொள்ளாமல் நெதர்லாந்த் எம்பசியில் இருந்து வந்து தொடரை நிறுத்த சொல்லி உத்திரவு போட்டுவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குதிருச்சி தாரு
தற்கெல்லாம் பயப்படுகிறவரா அய்யா அவர்கள். எம்பசிக்கு ஒரு கதை சொல்லி தப்பித்து விடுவார். தப்பிக்கவே முடியாத 'பார்யாள்' என்ற எம்பசியிலிருந்து தாக்கீது வந்திருக்கும் என்று நினைக்கிறேன். என்ன அய்யா அவர்களே சரிதானே?
நீக்குசேலம் குரு
எவ்வளவு ஆவலாக இருந்தோம். சினிமாவில் பார்ப்பது போன்று நிகழ்வுகளை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் வர்ணனை. பதிவுக்கு பதிவு சஸ்பென்ஸ். நன்றாகத்தானே போய்கொண்டிருந்தது.
பதிலளிநீக்குஆறு பதிவுகள் முடிந்தவுடனே நிறுத்த காரணம் என்னவென்று புரியவே இல்லையே. அய்யா அவர்கள் இந்த காரணத்தை - திடீர் என்று தொடரை முடித்ததற்கான காரணத்தை - சொல்லியே ஆக வேண்டும் .
திருச்சி காயத்ரி மணாளன்
சட்டியில் இருந்தது தீர்ந்து விட்டது அம்மணி. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.
நீக்கு//கடவுளிடம் வெட்கம், மானம் என்ன வேண்டியிருக்கிறது //
பதிலளிநீக்குஉண்மைதான். நாம் கடவுளிடம் முழுமையாக சரணடைந்து விட்டால் நாமும் அவருள் ஒன்றிவிடுகிறோம். அப்புறம் வெட்கமாவது மானமாவது. அதைஎல்லாம் தப்பு செய்கிறவன் பார்க்கவேண்டியது. அவனே பார்க்காத போது நமக்கு உதவி தேவை படும்போது உதவி கேட்டுவிட வேண்டியதுதான்.
சேலம் குருப்ரியா
தனியொரு ஆளாக எதையும் சாதிக்க முடியாது. அதுவும் பாஷை தெரியாத வெளியூரில் இரவு நேரத்தில் வயதான காலத்தில் உதவி கேட்பது தப்பேயில்லை.
நீக்குதிருச்சி அஞ்சு
//கொஞ்சம் நேரம் இருந்ததாலும், தங்கும் ஓட்டலுக்குப் போக நிச்சயமான வழி பிறந்து விட்டதாலும், பக்கத்திலுள்ள ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோருக்குப் போனேன்//
பதிலளிநீக்குகொஞ்ச நேரத்துக்கு முன்பு இருந்த நிலை என்ன பயந்த பயம் என்ன. 'கோவணத்துல ஒரு காசிருந்தா கோழி கூவ ஒரு பாட்டு வரும்' என்பதற்கு உண்மையான ஒரு உதாரணம் இந்தான்.
சேலம் குரு
பெரும் இக்கட்டில் இருந்து தப்பித்து வந்தவரை பாராட்டாமல் கோவணம் காசு கோழி பாட்டு என்று கூறிக்கொண்டு இருக்கிறீர்களே. நடந்ததை பின்தள்ளிவிட்டு தைரியமாக அடுத்த காரியத்தில் இறங்கியதை பாராட்டியே ஆகவேண்டும்.
நீக்குபிடியுங்கள் எங்கள் பாராட்டுக்களை
திருச்சி தாரு
நான் உண்மையைக் கூறிவிட்டேன். உதாரணம் எதுவாக இருந்தால் என்ன? காரியம் நடந்ததல்லவா?
நீக்கு//பக்கத்திலுள்ள ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோருக்குப் போனேன். காரணம் போகப்போகத் தெரியவரும் //
பதிலளிநீக்குஇதை படித்தவுடன் இன்னொரு பத்து பதிவுகளுக்காவது தொடர் நீளும் என்று நினைத்தேன். டக்கென்று முடித்து விட்டீர்களே.
திருச்சி அஞ்சு
பின்னே சச்சின் டெண்டுல்கர் மாதிரி எப்படா முடிப்பார் என்ற அளவுக்கு நீட்ட சொல்கிறீர்களா. இதுதான் சரி
நீக்குசேலம் குருப்ரியா
நன்றாகவே சமாளித்தீர்கள் ஐயா...
பதிலளிநீக்குஅடுத்த தொடரை விரைவில் எதிர்ப்பார்க்கிறேன்...
//இந்த இரண்டும் எதற்காக என்றால்............... உண்மையைச் சொல்ல கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது. இருந்தாலும் இத்தனை வயசுக்கப்புறம் கூச்சத்தை விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன். ஆகவே உண்மையைச் சொல்லுகிறேன்.//
பதிலளிநீக்குஇதற்கு கூச்சப்படவே வேண்டியதில்லை. அரசுமுறையில் அல்லது கம்பெனி வழியாக வெளிநாடு செல்லும் எல்லோருக்கும் இதே கதிதான். shoe string பட்ஜெட்டில்தான் அனுப்புவார்கள். செலவும் செய்ய முடியாது. எப்போதோ ஒருமுறை போகும்போது ஞாபகத்திற்கு வீட்டிற்கும், நண்பர்களுக்கும் ஏதாவது வாங்கிகொண்டு வரவேண்டும். இப்படி பணத்தை மிச்சம் பிடித்தால்தான் உண்டு. எனவே நீங்கள் தைடியமாகவே சொல்லலாம்
திருச்சி காயத்ரி மணாளன்
மிகச் சரியாகச் சொன்னீர்கள்.
நீக்கு//எல்லாம் யானை விலை குதிரை விலைதான்.//
பதிலளிநீக்குமுதன்முறையாக பிரான்சு சென்றபோது விமானநிலையத்தில் இருந்து ஓட்டலுக்கு சென்று விட்டோம். இரவு உணவு இல்லை என்றுவிட்டான். வெளியே சென்றால் எட்டு மணிக்கெல்லாம் கடைகள் சாத்தப்பட்டுகொண்டிருந்தன. அவசர அவசரமாக சாப்பிட ஏதாவது (சைவம்) கிடைக்குமா என்று பார்த்தால் சின்னதாக நடுவில் காய் வைத்து இரண்டு பிரெட் ஸ்லைஸ் கொடுத்தான். 1989இல் அது 50 ரூபாய். ஓட்டலுக்கு வந்து பாதி சாப்பிட்டுவிட்டு மீதியை பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டோம். அதுதான் இருப்பதிலேயே குறைவான விலையாம்.
பிசினஸ் ஆட்களாக இருந்தால் ஒழிய வெளிநாட்டுப்பயணம் ஒரு வேதனைதான் ஆனால் ஒரு சுகமான வேதனை.
சேலம் குரு
காரணம் நாம் வளர்ந்த பொருளாதார சூழ்நிலைதான்.
நீக்குநாம் சுதந்திரம் அடைந்த போது ஒரு ரூபாய்க்கு ஒரு டாலர் கிடைத்ததாக கூறுவார்கள். இப்போது 62 ரூபாய்கள் ஆகி விட்டது. இதுவே ஒரு ரூபாய்க்கு 62 டாலர்கள் (சிரித்து விடாதீர்கள்) என்ற நிலை இப்போது இருக்குமானால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.
நீக்குஅமெரிக்கா நம்மிடம் அமெரிக்கையாக அமர்ந்திருக்கும்.
லங்கா தகனம் கண்டிப்பாக நடந்திருக்கும்.
சீனா வீணா போயிருக்கும்
பாக்கிஸ்தானிடம் நம்மிடம் வாலாட்ட எந்த வாலும் பாக்கி இல்லாமல் போயிருக்கும்
ம்ம் எல்லாம் இந்த பாழாப்போன அரசியல்வாதிகளால் கனவாகபோய்விட்டது
சேலம் குரு
/இரண்டு கை கடலையைச் சாப்பிட்டு விட்டு ஒரு டம்ளர் ஜூஸ் குடித்து விட்டால் அன்றைய இரவிற்குப் போதும். இப்படியாகத்தான் என் வயிற்றுப் பாட்டை வெளி நாடுகளில் சமாளித்தேன் //
பதிலளிநீக்குவேறு வழியே இல்லை அய்யா. காலை சாப்பாடு ஓட்டலில் கொடுத்து விடுவான். என்னதான் சாப்பிட்டாலும் பசி எடுக்க ஆரம்பித்துவிடும். மதியம் எந்தப்பக்கம் திரும்பினாலும் அசைவம்தான் இருக்கும். கஷ்டப்பட்டு கிடைக்கும் காபியையும் பழ சாற்றையும் குடித்துக்கொண்டு சாயங்காலம் அறைக்கு வந்தவுடனே கொண்டு சென்றிருக்கும் அரிசி, பருப்பு பொடிகள் வைத்து எதாவது வெந்ததும் வேகாததுமாக எதோ ஒன்று செய்து சாப்பிட்டு முடித்தால்தான் உடம்பில் உயிரே வரும். இங்கு என்னவோ வீட்டில் எங்க வூட்டுக்காரர் அயல்நாட்டுக்கு போயிருக்கிறார் அவங்க அலுவலகத்தில் செலக்ட் செய்து அனுப்பியிருக்கிறார்கள் என்று பெருமை வேறு. அங்கு அவஸ்தை படுவது என்னவோ நமக்குத்தானே தெரியும்.
சேலம் குருப்ரியா
நான் அயல்நாடு சென்றிருக்கும் போது இப்படித்தான் ஒரு நிகழ்ச்சி நடந்தது. நான் சைவம் ஆகையால் எந்த ஓட்டலுக்கு சென்றாலும் நன்கு விசாரித்த பிறகுதான் சாப்பிடுவேன். பாரிசில் ஒரு ஓட்டலில்
நீக்குநான் - சைவம் இருக்கிறதா
பேரர் - அப்பா மட்டன் வேண்டாமா
நான் - கூடாது
பேரர் - அப்ப சிக்கன் கொண்டு வரலாமா
நான் - கூடவே கூடாது
பேரர்- அப்ப சரி. இங்கு அருமையான பிஷ் கிடைக்கும். நாளா சூடா பிரை செய்து கொண்டு வருகிறேன்.
நான் - அய்யயோ அதுவெம் வேண்டாம்
பேரர் - (பொறுமை இழந்தவராய்) சரிதான் அப்ப நீங்க சைவம் என்று எதைத்தான் சொல்லுவீர்கள்
நான் விளக்கினேன்.
பேரர் - அப்ப அருமையான டிஷ் ஒன்று இருக்கிறது. இருங்கள் எடுத்து வருகிறேன்
நான் ஆவலாக காத்திருந்தேன்
பெற்ற சிரித்த முகத்துடன் ஒரு ஐட்டத்தை சில்வர் பாயிலில் சுற்றி எடுத்து வந்தார். பெருமையுடன் தட்டில் வைத்து விட்டு இது இந்த ஊர் ஸ்பெஷாலிட்டி என்றார்.
பிரித்து பார்த்தவுடன் எனக்கு தலை சுற்றியது
காட்டிகொள்ளாமல் ஒரு விள்ளல் விண்டு வாயில் போட்டேன். கீழே துப்பாத குறையாக கஷ்டப்பட்டு விழுங்கி வைத்தேன். பேரர் சந்தோஷத்துடன் சென்றார். கொண்டு வந்த ஐட்டம் என்ன தெரியுமா? நன்கு வேக வைத்து, உப்பு போடாத ஒரு முழு உருளை கிழங்கு. அது அந்த ஊரில் அவ்வளவு SOUGHT AFTER உணவாம். தலயில் அடித்துக்கொண்டேன்
சேலம் குரு
நான் ஒருமுறை ஆஸ்திரேலியா சென்றிருந்த போது இதே மாதிரி கதைதான் நடந்தது. சாப்பிட்ட எல்லாமே உப்புச்சப்பற்று இருந்தன. இதை புரிந்துகொண்ட காண்டீன் பொறுப்பாளர் அடுத்த நாள் ஒரு சாஸ் பாட்டிலை கொண்டு வந்தார். இது மிளகாய் சாஸ். ரொம்ப காரமாக இருக்கும். பார்த்து சாப்பிடுங்கள். உங்களுக்கு சரியான டேஸ்டாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்றார். ருசி பார்த்தவுடனே புரிந்து போய்விட்டது. அதுவும் அந்த அளவு காரமில்லை. எனவே பெருமாள் கோயிலில் பிரசாதம் கையில் வாங்கி உறிஞ்சி குடிப்பது போல அந்த சாஸை உள்ளங்கையில் ஊற்றி குடிப்பதை பார்த்த அந்த பொறுப்பாளர் அசந்து போய்விட்டார். ஒரு சிறு துளி எடுத்து வாயில் வைத்தவர் முகமெல்லாம் சிவந்து போய்விட்டது. தண்ணீர் தண்ணீர் என்று புலம்ப ஆரம்பித்து விட்டார். இந்த காரத்தை எப்படித்தான் சாப்பிடுகிரீர்களோ உங்கள் வயிறு எப்படி இதை பொருத்துகொள்கிறது என்று ஆச்சரியப்பட்டுவிட்டார் அதனால் உப்பற்ற வேகவைத்த உருளை கிழங்கு அங்கு sought after dish ஆக இருப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை
நீக்குதிருச்சி தாரு
அடாடா.. அதுக்குள்ள முடிச்சுட்டீங்களே....
பதிலளிநீக்கு//நான் வெட்கம், மானம் எல்லாவற்றையும் விட்டு விட்டு (கடவுளிடம் வெட்கம், மானம் என்ன வேண்டியிருக்கிறது) அவரிடம் போய் பக்கத்து ஊர் பெயரைச்சொல்லி, "அந்த வழியாகப் போவீர்களா?" என்று கேட்டேன். //
பதிலளிநீக்குரஸித்தேன்.
>>>>>
//இரவு உணவுக்கு ஏதாவது செய்தாக வேண்டும். அதற்குத்தான் நிலக்கடலையும் ஆப்பிள் ஜூஸும். இவை எல்லாம் விலை சலீசாக ஸ்டோரில் கிடைக்கின்றன. இரண்டு கை கடலையைச் சாப்பிட்டு விட்டு ஒரு டம்ளர் ஜூஸ் குடித்து விட்டால் அன்றைய இரவிற்குப் போதும். இப்படியாகத்தான் என் வயிற்றுப் பாட்டை வெளி நாடுகளில் சமாளித்தேன்.//
பதிலளிநீக்குஆஹா, அருமையாகத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள், ஐயா. எனக்கும் இதுபோதும். ஆனால் அளவு சற்றே அதிகமாக கூடுதலாகத் தேவைப்படும்.
>>>>>
//இப்படியாக எனது நெதர்லாந்து டூரை முடித்து அடுத்து இஸ்ரேலுக்குச் சென்று விட்டு இந்தியா திரும்பினேன். தொடரை அவசரமாக முடித்துவிட்டேன் என்று வருந்தவேண்டாம். //
பதிலளிநீக்குவருந்துகிறேன். ஜவ்வு மிட்டாய் அதற்குள் தீர்ந்து விட்டதே என வருந்துகிறேன். நீங்க சொன்னது ஒன்று - இப்போ செய்தது மற்றொன்று. ;(
//எதுவும் அளவோடு இருந்தால்தான் சுவைக்கும்.//
அதுவும் சரிதான். பகிர்வுக்கு நன்றிகள்.
நல்ல சாப்பாட்டு ராமனிடம் போய் சாப்பிட்டது போதுமா என்று கேட்டால் அவன் என்ன சொல்லுவான்? இப்போதுதான் டேஸ்ட் பார்த்திருக்கிறேன். இனிமேல்தான் சாப்பிட ஆரம்பிக்கவேண்டும் என்பானல்லவா. அப்படிப்பட்ட நிலையில்தான் நாங்கள் இருந்தோம். ஆனால் நீங்கள் சாப்பாடு தீர்ந்து போய்விட்டது என்றுவிட்டீர்கள்.
நீக்குசீக்கிரம் பதிவை முடித்து விட்டீர்கள். பசியுடன் அடுத்த தொடர் பதிவுக்கு காத்திருக்கிறோம்.
திருச்சி அஞ்சு
நினைத்தாலே இனிக்கும் நினைவுகள். நீங்கள் வெஜ் ஆ நான் வெஜ் ஆ. வெஜிடேரியன்கள் பாடு இன்னும் மோசமாக இருக்கும் .
பதிலளிநீக்குநான் நான்-வெஜ் சாப்பிடுவேன். பிலிப்பைன்ஸில் நான்-வெஜ் சாப்பிட்ட கதையை ஒரு தனி பதிவாகப் போடுகிறேன்.
நீக்குஅப்படியென்றால் அதுவும் நல்ல சுவாரஸ்யமாக இருக்கும் என்று, நாக்கில் நீர் வடிய - நான் வெஜ்ஜை நினைத்தும் உங்கள் நிகழ்ச்சியை பதிவிடும் நடையை நினைத்தும் - காத்திருக்கிறோம்
நீக்குசேலம் குருப்ரியா
//இந்த இரண்டும் எதற்காக என்றால்............... உண்மையைச் சொல்ல கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது.//
பதிலளிநீக்குஇதில் தவறேதும் இல்லை ஐயா... அந்தக்காலத்திலேயே ஐநூறு என்றால் மிக மிக அதிகம் தான்... நாற்பது ரூபாய்க்கு மேல் காலை உணவு சாப்பிட்டாலே எனக்கு மனசு கேட்காது... அடுத்த இஸ்ரேல் தொடருக்காகக் காத்திருக்கிறேன்.... த.ம.4
நான் சிறுவயதில் (ஐந்து வயது) அப்பாவுடன் ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் இந்த மாதிரி ஏசி இருக்காது.
நீக்குஓட்டல்கள் எல்லாம் சுமாராகத்தான் இருக்கும். அன்று இரண்டு இட்லி பத்து காசு. இன்று என்னுடைய குழந்தைகள் அப்படிப்பட்ட ஓட்டல்களுக்கு எட்டிக்கூட பார்க்கமாட்டேன் என்கிறார்கள் (இன்னும் அப்படிப்பட்ட ஓட்டல்கள் இருக்கத்தான் செய்கின்றன திருச்சியில் ஆதிகுடி, மாயவரம் லோட்கே என்று சில உள்ளன) ஒரு சுமாரான ஓட்டலுக்கு சென்றாலே இரப்டு இட்லி 28 ரூபாய் (திருச்சி சங்கீதா ஓட்டல்) நினைத்துப்பாருங்கள். விலைவாசி எவ்வளவுதான் உயர்ந்திருக்கட்டும். பத்து காசுக்கு வாங்கிய இட்ட 28 ரூபாய் ஆனதுஎந்த விதத்தில் நியாயம் என்றே புரியவில்லை.
நீங்கள் சொன்ன மாதிரி மனசு கேட்கவில்லை
சேலம் குரு
சரியாகத்தான் சொன்னீர்கள். அன்று 'வாங்க ஒரு காபி சாப்பிட்டுக்கொண்டே பிரச்சனையை பற்றி பேசலாம்' என்பார்கள். இன்றோ காபி குடிப்பதே ஒரு பிரச்சனையாகி விட்டது.
நீக்குஅழுக்கு தண்ணீரில் காபி குடித்த டம்ளரை கழுவும் ரோடு கடையிலேயே காபி எட்டு ரூபாயாகிவிட்டது. ஒரு டோல் கேட் அருகே தூரத்து சொந்தக்காரர் ஒருவர் கஷ்டப்பட்டு ஒரு உணவகம் திறந்திருந்தார். எப்படி பிசினஸ் போகிறதென்று பார்ப்பதற்கு சென்றிருந்தேன். நல்ல கூட்டம்.
கார் முன்னே கட்சி கொடி (எந்த கட்சி என்று வேண்டாமே) கட்டிய சில கார்கள் நின்றிருந்தன. உள்ளே உட்கார இடமில்லை.
அரை மணி நேரத்தில் கூட்டம் காலி ஆனது. ஆனால் நண்பன் முகமோ சோகமாயிருந்தது. கேட்காமலே புலம்பிவிட்டான். சாப்பிட்டது ஒரு அமௌண்டுக்கு கொடுத்தது மிக கம்மி அமௌண்ட். கேட்டால் கட்சிக்கு நிதி என்று நினைத்துகொள் என்று பதில் வந்ததாம். இது தவிர ஏதாவது அரசியல் கூட்டம் நடந்தால் போதுமாம். வசூலுக்கு ஆட்கள் வந்துவிடுவார்கள் என்றான் நண்பன்.
இந்த காசையெல்லாம் மற்றவர்களிடம்தானே வசூல் செய்ய வேண்டும். இந்த ஓட்டலை நடத்துவதற்கே ஏகப்பட்ட காசு கொடுக்க வேண்டியிருந்ததாம். அதுதான் ஒரு கரண்டி மாவை ஊற்றி தோசை கொடுத்து விட்டு 40 ரூபாய் வாங்குகிறேன் என்றான். ஓட்டல் பண்டங்களுக்கு விலை அதிகமாக இருப்பதற்கு விலைவாசி மட்டும் காரணமில்லை எண்டது புரிந்தது.
திருச்சி காயத்ரி மணாளன்
// இரண்டு கை கடலையைச் சாப்பிட்டு விட்டு ஒரு டம்ளர் ஜூஸ் குடித்து விட்டால் அன்றைய இரவிற்குப் போதும். இப்படியாகத்தான் என் வயிற்றுப் பாட்டை வெளி நாடுகளில் சமாளித்தேன். //
பதிலளிநீக்குநல்ல அனுபவம். அடுத்து இஸ்ரேல். என்ன சொல்லப் போகிறீர்கள் என்று ஆவலாய் இருக்கிறேன்.
சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குஇஸ்ரேல் பயணத்தைப் பற்றியும் சொல்லலாமே ஐயா...
பதிலளிநீக்குகண்டிப்பாக சொல்கிறேன்.
நீக்குதொடர் பதிவை நாங்கள் விரும்புவதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. ஒரு வாரத்துக்கு நாலைந்து பதிவுகள் வந்துவிடும். இல்லையென்றால் ஒன்றிரண்டுதான் வருகின்றன.
பதிலளிநீக்குஅந்த நாலைந்தும் சுவாரஸ்யமாக வேறு இருப்பதால் மிகுந்த ஆவலோடு அடுத்த தொடரை - இஸ்ரேல் பற்றியது என்று சொல்லியிருக்கிரீர்கள் - எதிர்பார்க்கிறோம். மற்றும் அடுத்த தொடரை ஜவ்வு மாதிரி இழுத்து விடுவேன் என்றும் சொல்லியிருக்கிறீர்கள் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறோம். சட்டென்று முடித்து விடாதீர்கள்
சேலம் குரு
இஸ்ரேல் பற்றிய தொடரைப் படிக்கச் செல்லுகிறேன்.
பதிலளிநீக்கு