திங்கள், 23 மார்ச், 2015

சுட்ட கத்தரிக்காய் சட்னி

                                  Image result for கத்தரிக்காய்

அந்தக் காலத்தில நான் சிறுவனாக இருந்த போது பள்ளி விடுமுறை நாட்களில் என் பாட்டி வீட்டுக்குப் போவேன். அதாவது என் பாட்டி இருந்த தோட்டத்து வீட்டுக்குப் போவேன். அந்த தோட்டம் என் மாமா விவசாயம் செய்து கொண்டிருந்த தோட்டம்.

அப்ப எல்லாம் தோட்டங் காட்டுகளில் விவசாயம் செய்தவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையின் தேவைகளுக்கு எங்கும் வெளியில் செல்வதில்லை. அவர்களுக்குத் தேவையான தானியங்கள், காய்கறிகள், பால், எண்ணை வகைகள் இவை அனைத்தையுமே அவர்கள் தங்கள் தோட்டத்தில் விளைவித்துக் கொண்டார்கள். உடுத்துவதற்கான துணிகள் மற்றும் பாத்திர பண்டங்கள், நகைகள் இவைகள் மட்டுமே வெளிச் சந்தையில் வாங்குவார்கள்.

அன்றாட வாழ்வில் பணப்புழக்கம் என்பது மிகவும் அரிதாக இருந்தது. வருடத்திற்கு ஒரு முறைதான், அதாவது தீபாவளி சமயத்தில்தான் துணிமணிகள், நகைநட்டுகள் எல்லாம் வாங்குவார்கள். பிறகு பணம் செலவு செய்யவேண்டிய சந்தர்ப்பங்களே ஏறக்குறைய இல்லை. உப்பு, தீப்பெட்டி, சில எண்ணை வகைகள் இவைகள்தான் வெளியிலிருந்து வாங்கவேண்டி வரும். இவைகளை வியாபாரிகள் தோட்டம் தோட்டமாகக் கொண்டு வருவார்கள். அதற்கு ஈடாகத் தோட்டத்துக்காரர்கள் தோட்டத்தில் விளைந்துள்ள ஏதாவது தானியம் அல்லது பருத்தி ஆகியவைகளைக் கொடுப்பார்கள்.

இப்படிப்பட்ட காலத்தில் நான் என் பாட்டி (மாமா) தோட்டத்தில் விடுமுறையைக் கழித்தேன் என்றால் எப்படி இருக்கும் என்று யூகித்துக் கொள்ளுங்கள். காசு கண்ணிலேயே படாது. அப்படி ஏதாவது காசு வைத்திருந்தாலும் அதை வைத்துக் கொண்டு என்ன பண்ணுவது? அக்கம் பக்கம் காத தூரத்திற்கு எந்த விதமான கடைகளும் கிடையாது.

மிக அதிசயமான தின்பண்டம் என்பது தேங்காய் ஒப்புட்டுத் தான். அப்படி என்றால் என்னவென்று தெரியாதவர்கள் பின்னூட்டத்தில் சொன்னால் ஒரு செய்முறைப் பதிவு போடுகிறேன். ஞாயிற்றுக் கிழமை இட்லி பலகாரம் கிடைக்கும். இட்லி ஒரு பலகாரமாக இருந்த காலம் அது. இல்லையென்றால் தினமும் காலையில் தயிர் விட்டுக் கரைத்த பழைய சோளச்சோறுதான் காலை டிபன்.

ஏன் ஞாயிற்றுக்கிழமையில் இட்டிலி என்றால் அது வார விடுமுறை என்பதால் அல்ல. விவசாயிகளுக்கு எல்லா நாட்களும் ஒரே மாதிரிதான். சனிக்கிழமைதோறும் தவறாமல் எண்ணைக் குளியல் உண்டு. வீட்டில் காய்ச்சிய விளக்கெண்ணை ஒரு அரை லிட்டர் எடுத்துக் காய வைத்து எங்கள் எல்லோர் தலையிலும் ஊற்றி விடுவார்கள். ஒரே வயதில் ஏறக்குறைய ஐந்தாறு பேர் இருப்போம்.

தலையிலிருந்து வழியும் எண்ணையை அப்படியே கையினால் உடம்பு முழுவதும் பூசிக்கொள்ள வேண்டியதுதான். கோவணம் எல்லாம் கிடையாது. அப்படியே ஒரு அரை மணி நேரம் இருந்த பிறகு ஒவ்வொருவராகக் குளிப்பாட்டி விடுவார்கள்.  அரப்பு கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அதுதான் அன்றைக்கு ஷாம்பு. அரப்புக் கரைசலை கைநிறைய எடுத்து தலையில் வைத்து அரக்கித் தேய்த்து குளிப்பாட்டுவார்கள். அப்படித் தேய்க்கும்போது அரப்பு கண்ணுக்குள்ளும் வாய்க்குள்ளும் போகும். அதையெல்லாம் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்.

அன்று மதியச் சாப்பாடு நெல்லஞ்சோறும் செலவு அரைத்த ரசமும். செலவு என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்காக ஒரு குறிப்பு. மிளகு, சீரகம், கடுகு இவைகளைத்தான் செலவு சாமான்கள் என்று சொல்வது அந்தக் காலத்து வழக்கம். இப்போது அஞ்சறைப் பெட்டி என்று நாகரிக யுவதிகள் சொல்கிறார்களே, அதற்கு செலவுப் பெட்டி என்றுதான்  எங்கள் ஊரில் இன்றைக்கும் பெயர். மிளகு சீரகம் அரைத்துப் போட்டு வைக்கும் ரசத்திற்குப் பெயர்தான் செலவரைச்ச ரசம்.

இந்த ரசம் சாப்பிட்டால் சாப்பிட்ட சாப்பாடு எளிதில் ஜீரணமாகும். எண்ணை தேய்த்துக் குளித்த அன்று உடல் முழுவதும் லேசாகி உடம்பு வெடுக்கென்று இருக்கும். ஜீரண சக்தி குறைந்திருக்கும். அதனால் அன்று எளிதில் ஜீரணமாகக் கூடிய நெல்லஞ்சோறும் செலவரைச்ச ரசமும்தான் மதியம் சாப்பிடவேண்டும்.

அடுத்த நாள், அதாவது ஞாயிற்றுக் கிழமை மதியம் கட்டாயம் கறிச்சாப்பாடு உண்டு. கறி என்றால் ஆட்டுக் கறிதான். வேறு எதுவும் அந்தக் காலத்தில் கிடையாது. கோழிக்கறி உடம்புக்கு சூடு என்று பொதுவாக யாரும் சாப்பிடமாட்டார்கள். மதியச் சாப்பாடு கனமாக இருக்குமாதலால் அன்று காலை எளிதில் ஜீரணமாகக் கூடிய இட்லி செய்வார்கள்.

இட்லிக்கு இன்று மாதிரி விதவிதமான சட்னி சாம்பார் எல்லாம் கிடையாது. ஏதோ ஒன்று தொட்டுக் கொள்ளக் கிடைக்கும் அப்படிப்பட்ட ஒன்றுதான் சுட்ட கத்தரிக்காய்ச் சட்னி. தோட்டத்தில் எப்படியும் ஓரிரண்டு பாத்தியில் கத்தரிக்காய் நட்டிருப்பார்கள். அவ்வப்போது குழம்பிற்குப் பறிப்பதற்காக இந்த
ஏற்பாடு. குழம்பிற்கு எப்போதும் பிஞ்சுக்காய்களைத்தான் பறிப்பார்க்ள. இதில் எப்படியும் மறைவாக இருக்கும் சில காய்கள் தப்பி விடும். அவை நன்கு பெரிதாகி, குழம்பிற்கு லாயக்கற்றதாய் இருக்கும்.

ஞாயிறு அன்று அந்தக் காய்கள் நாலைந்தைப் பறித்து வந்து இட்லி வெந்து கொண்டிருக்கும் அடுப்புத் தணலில் வைத்து விடுவார்கள். அப்போதெல்லாம் விறகு அடுப்புதானே. இந்தக் காய்களை இரண்டொரு தடவை திருப்பிப் போடுவார்கள். அந்தக் காய்கள் தணலில் நன்றாக வெந்து விடும். அதை எடுத்து தோலை உரித்து ஒரு சட்டிக்குள் போட்டு நாலைந்து பச்சமொளகாய், கொஞ்சம் புளி, உப்பு எல்லாம் போட்டு, பருப்பு மத்தால் நன்கு கடைந்து விடுவார்கள்.

இதுதான் இட்லிக்கு சைட் டிஷ். சூடான இட்லிக்கும் இந்த சட்னிக்கும் இவ்வளவு பொருத்தமாக இருக்கும். இரண்டிலும் எண்ணை என்பதே கிடையாது. ஒவ்வொருவரும் குறைந்தது ஆறு ஏழு இட்லிகள் சாப்பிடுவோம். குறைவாகச் சாப்பிட்டால் "வளர்ற பசங்க சாப்பிறதப் பாரு, இன்னும் ரெண்டு இட்லி சாப்பிட்றா" என்று வலுவில் போட்டு விடுவார்கள். இப்படிச் சாப்பிட்டு வளர்ந்த ஒடம்பாக்கும் இது.

இதுதான் சுட்ட கத்தரிக்காய்ச் சட்னி. இந்தக்காலத்தில் பெங்களூர் கத்தரிக்காய் என்று பெரிதாக மார்க்கெட்டில் கிடைக்கிறது. அதை கேஸ் அடுப்பில் சுட்டு இந்த சட்னி பண்ணலாம். இட்லி தோசைக்குத் தொட்டுக்கொள்ள தேவாம்ருதமாக இருக்கும்.

37 கருத்துகள்:

  1. தேங்காய் ஒப்புட்டு என்றால் என்ன என்று தெரியாது.
    மிளகு சீரகத்துக்கு இப்படி ஒரு பெயரா?
    இதை கத்தரிக்காய்ச் சட்னி என்று சொல்வதை விட கொத்சு என்று சொல்வது பொருத்தமாக இருக்குமோ?
    நாங்கள் இதே போல கொத்சு செய்வோம். துவையல் அரைத்து சாதத்துடன் கலந்து சாப்பிடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேங்காய் ஒப்பிட்டுவிற்கு ஒரு பதிவு போட்றுவோம்!

      கொத்சு என்கிற வார்த்தை எங்கள் வழக்கத்தில் இல்லை. அநேகமாக இது கொத்சு வகையில் சேரலாம். நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

      நீக்கு
    2. ஒரு சிறு திருத்த விளக்கம்!

      //நாங்கள் இதே போல கொத்சு செய்வோம். துவையல் அரைத்து சாதத்துடன் கலந்து சாப்பிடுவோம்.//

      இரண்டும் தனித்தனி வார்த்தைகள்! கொத்ஸு வேறு. துவையல் வேறு. உளுத்தம்பருப்பு போன்ற சங்கதிகள் சேர்த்து அரைத்து துவையல் தயார் செய்து அதில் சுட்ட கத்தரிக்காயைப் பிசைந்து விட்டு சாதத்தில் கலந்து சாப்பிடுவோம்!

      நீக்கு
    3. சிதம்பரம் பக்கத்தில் கத்தரிக்காய் கொஸ்து செய்வார்கள். மிகவும் சுவையாய் இருக்கும். இதற்கு சிதம்பரம் கொஸ்து என்ற பெயரே உண்டு. இன்றைக்கும் கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை போன்ற ஊர்களில் நடக்கும் கல்யாணங்களில் காலை சிற்றுண்டியில் இட்லியோடு நிச்சயம் இந்த கொஸ்து இருக்கும்.

      நீக்கு
    4. @ ஸ்ரீராம் , போளியைத்தான் ஒப்புட்டு என்பார்கள்.

      நீக்கு
    5. ஸ்ரீராம், டீச்சர் கரெக்ட்டா பாயின்ட்ட புடிச்சிட்டாங்க.

      நீக்கு
    6. ஒண்ணொண்ணையும் பேரை மாத்தி மாத்தி சொல்றாங்களே...!!!

      :))))))))

      நீக்கு
    7. அதுதாங்க தமில் மொளியோட செறப்பு. எப்படி வேணா சொல்லலாம், எப்படி வேணா எளுதலாம், யாரும் கேக்க மாட்டாங்கோ?

      நீக்கு
  2. அன்றைக்கு நடந்த சின்ன வயது நிகழ்வுகளை அழகாகச் சொன்னீர்கள். படிக்கும்போதே பழைய நினைவுகள் வந்து போயின. அந்தக்காலச் சாப்பாடு; எண்ணெய்க் குளியல். உங்கள் இளமையின் ரகசியம் தெரிந்து கொண்டேன்.

    நாங்கள் சோழநாடு - சோறுடைத்த பரம்பரை. எனவே சோளச்சோறு இல்லை. பழைய சோறுதான். விளக்கெண்ணெய்
    இல்லை. நல்லெண்ணெய் குளியல். மற்றபடி நீங்கள் சொன்ன உங்கள் அனுபவங்கள் எனக்கும் உண்டு. நீங்கள் சொன்ன சுட்ட கத்தரிக்காய் சட்னியை இந்த பக்கம், கத்தரிக்காய் மசியல் என்பார்கள்.

    த.ம.3

    பதிலளிநீக்கு
  3. வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
    முரமுரென வேயினித்த மோரும் – திறமுடனே
    புல்வேளூர்ப் பூதன் புகழ்ந்துபரிந் திட்டசோ(று)
    எல்லா உலகும் பெறும். 35

    புல்வேளூரில் வாழ்ந்த பூதன் ஔவையைப் பாராட்டி விருந்தளித்தான். அந்த விருந்து இந்த உலகையே பரிசாக நல்கியதற்கு இணையாக மதிக்கத்தக்கது. (வழுதுணங்காய் = கத்தரிக்காய்

    ஐயா!
    ஔவையார் மெச்சிய வாட்டு. இந்தக் சுட்ட கத்தரிக்காய்ச் சட்னி என்பது என் அபிப்பிராயம். இந்தியாவில் சட்டினி என்பதை, இலங்கையில் சம்பல் என்போம்.
    இந்தக் கத்தரிக்காய்ச் சம்பல் அடிக்கடி சாப்பிட்டுள்ளேன். இங்கு தணல் அடுப்பு இல்லை. எனினும் "ஓவனில்" வைத்துச் சுட்டுச் செய்வோம்.
    அன்றைய சுவை கிடைப்பதில்லை. காரணம் நம் ஊர் கத்தரிக்காயே தனி!.
    எனக்கு மிகப் பிடிக்கும்.
    இப்பதிவிலுள்ள பல சொற்களைப் படிக்கவே மகிழ்வாக உள்ளது. அரப்பு முழுக்கு, ஆட்டுக்கறிக் குழம்பு, மிளகு ரசம்( ஆட்டெலும்பு போட்டது)!
    நீங்கள் சாப்பாட்டு ரசிகர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழர்கள் எங்கு இருந்தாலும் அவர்களின் உணவுப் பழக்கங்களில் இருக்கும் ஒற்றுமை ஆச்சரியம்தான்

      உங்கள் அனுபவங்களை இங்கு நினைவு கூர்ந்ததிற்கு நன்றி.

      நீக்கு
  4. சுட்ட கத்தரிக்காய் சட்னி - ஞாயிற்றுக் கிழமை இட்லி பலகாரம் கிடைக்கும். இட்லி ஒரு பலமாரமாக இருந்த காலம் அது. இல்லையென்றால் தினமும் காலையில் தயிர் விட்டுக் கரைத்த பழைய சோளச்சோறுதான் காலை டிபன்.= எனது பக்கத்தில் பகிர்கிறேன். அருமையான, பழமையான தகவல்கள் அடங்கிய பதிவு. நன்றி சார் திரு Palaniappan Kandasamy

    பதிலளிநீக்கு
  5. பதிவு வந்த வேகத்தில் 5 வாக்குகளா?
    அசர அடிக்கிறீங்க நைனா!
    விரைவில் தங்கள் இலக்கை அடைய (தமிழ்மணத்தில் முதலிடம்) வாழ்த்துகளுடன் தம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னங்க, நானும் என்னென்னமோ தகிடுதத்தம் எல்லாம் பண்ணிப் பாக்கறேன்? தமிழ் மணம் ரேங்க் மேல போகமாட்டேங்குதே? இரண்டொருத்தரைப் போட்டுத் தள்ளினால்தான் மேலே போக முடியும் போல இருக்குதுங்க?

      நீக்கு
  6. எண்ணெய் குளியல் + அரப்பு : அனுபவம் உண்டு...!

    அடுத்து பதிவு தேங்காய் ஒப்புட்டு பற்றி அறிய ஆவலுடன்...

    பதிலளிநீக்கு
  7. கத்திரிக்காய் துகையலில் கொஞ்சம் சின்ன வெங்காயம் வெந்த பாசிபருப்பு ஒரு ஸ்பூன், தனியா கொஞ்சம் போட்டால் சிதம்பரம் கொத்சு தயார். இது சாதாரணமாக வெண் பொங்கலுக்கு சைடு டிஷ்.

    ஒப்புட்டு

    -- south-indian-recipe.blogspot.com/.../opputu-poli..

    பார்க்கவும்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேதான் ஒப்புட்டு. பரவாயில்லையே, ஜெயக்குமார், உடனே கண்டுபிடித்து விட்டீர்களே. எனக்கு ஒரு வேலை மிச்சம். (அப்படியே ஒரு பதிவிற்கான ஐடியாவும் போச்சு) பரவாயில்லை. வேற எத்தனையோ ஐடியா இருக்கு?

      நீக்கு
    2. பதிவுக்கு 2 ஐடியா.

      1. அன்னபூர்ணா பாமிலி ரோஸ்ட்.

      2. அங்கண்ணன் கடை பிரியாணி.

      இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது அடுத்த வடை மசால் வடை. எலியையும் பிடிக்கும் வோட்டையும் பிடிக்கும்.
      --
      Jayakumar

      நீக்கு
  8. வர வர உங்கள் வலைப்பூ சமையல் பூவாகி வருகிறது. இப்போது அதற்குத்தான் மவுசா? பதிவு ரசிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மார்க்கெட்டுல எது ஓடுதோ அதை விக்கறதுதானே புத்திசாலித்தனம்?

      நீக்கு
  9. சுட்ட கத்திரிக்காய சமாச்சாரம் நான் விரும்பி உண்ட சமாச்சாரம். மனைவியிடம் சொன்னால் அப்படி ஒன்று இருந்ததா என்கிறார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படித்தான் பல நல்ல சமையல் ஐட்டங்களெல்லாம் மறைந்து விட்டன. நானும் ராகிக் களி சாப்பிடவேண்டும் என்று பல நாட்களாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். என் ஆசை நிறைவேறுவதாகக் காணோம்?

      நீக்கு
    2. ஐயா

      காந்திபுரம் சென்ட்ரல் ஜெயில் பக்கத்திலதானே. ஒரு நடை உள்ளே போனால் கிடைக்குமே.
      தப்பா நினைக்காதீங்க. அங்கே வார்டன் யாராவது உங்க பிரெண்ட் இல்லையா?

      அப்புறம் நீங்க காவி கட்டி "நித்யானந்தா" சாமியார் ஆகறத்துக்கு நாங்களும் விடமாட்டோம்.வீட்டுக்காரம்மாவும் விடமாட்டாங்க.
      --
      Jayakumar

      நீக்கு
    3. உங்களுக்கு விஷயமே தெரியாது போல இருக்குது. இப்ப எல்லாம் ஜெயில்ல களி போடறதில்லையாமே? நான் போய்க் கேட்டுட்டேன்.

      நீக்கு
  10. படிக்கும் போதே எச்சில் ஊருகிறது.
    த ம 8

    பதிலளிநீக்கு
  11. அய்யா நீங்கள் தமிழ்மணத்தின் முதலிடத்தில் ரொம்பவும் ஆர்வமாக இருப்பது போல தெரிகிறது. வேறு ஒன்றுமில்லை, உங்களுடைய அந்தக்கால சினிமா ரசிப்பை அல்லது அந்தக்கால திரையுலக கனவுக் கன்னிகள் பற்றி இரண்டு பதிவுகள் நகைச்சுவையாக (உங்கள் பாணியில்) தட்டி விடுங்கள். அப்புறம் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சும்மா வேடிக்கைக்காகத்தானுங்க. தமிழ் மணம் முதல் ரேங்க் வந்தால் எனக்கு என்ன ரெண்டு கொம்பா முளைக்கப்போகுது. ஆனாலும் தமிழ்ப் பதிவர்களின் ரசனை என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. தமிழர்கள் நாக்கு ருசிக்கு இவ்வளவு அடிமைகளா?

      நீக்கு
    2. அதற்குத்தான் rp rajanayahem இருக்காரே

      http://rprajanayahem.blogspot.in/


      --
      Jayakumar

      நீக்கு
    3. ஜெயக்குமார்,
      நீங்க கொஞ்சம் வில்லங்கமான ஆசாமியாத் தெரியுது? நெறய விஷயங்களை விரல் நுனியில் வைத்திருக்கிறீர்களே. இந்த பிளாக்கை இப்போதுதான் பார்க்கிறேன். பாவம், தமிழ் இளங்கோ! பாவம் பழனி. கந்தசாமி.

      ஜெயக்குமார், நான் காவித்துணிக்கு ஆர்டர் கொடுத்திட்டேன்.

      நீக்கு
    4. வலைச்சரத்தில் வலைப்பதிவர் திரு R P ராஜநாயஹம் அவர்கள் பற்றி நானும் எழுதி இருக்கிறேன். அவருடைய ஸ்டைல் வேறு. முனைவர் அய்யாவின் நகைச்சுவை ஸ்டைல் வேறு.

      நீக்கு
  12. கோஸ் மல்லி என்றும் கூறுவார்கள் .கத்திரிக்காய் படத்தை பார்க்கும் போது பி.டி .கத்திரிக்காய் போல இருக்கிறது. மரபணு மாற்றம் செய்த கத்திரிக்காய் பற்றி ஒரு பதிவு வந்தால் நன்றாக இருக்கும் .

    பதிலளிநீக்கு
  13. சட்னி சுவையோ இல்லையோ உங்கள் பதிவு சுவையாக உள்ளது!

    பதிலளிநீக்கு
  14. நேற்றுத்தான் காசுக்கு வாங்காமல் என் கிராமத்து வீட்டில் தோட்டத்தில் பறித்து உண்ட ஆரோக்கியமான உணவுகள் பற்றி மனதுருக எண்ணிக் கவலைப்பட்டேன். உங்க்கள் ஆக்கம் மனதை வருடுகின்றது.

    பதிலளிநீக்கு
  15. //அன்றாட வாழ்வில் பணப்புழக்கம் என்பது மிகவும் அரிதாக இருந்தது. வருடத்திற்கு ஒரு முறைதான், அதாவது தீபாவளி சமயத்தில்தான் துணிமணிகள், நகைநட்டுகள் எல்லாம் வாங்குவார்கள். பிறகு பணம் செலவு செய்யவேண்டிய சந்தர்ப்பங்களே ஏறக்குறைய இல்லை.//

    அது நாம் எளிமையாக வாழ்ந்ததோர் பொற்காலம். இன்று ஜவுளிக்கடைகள் + நகைக்கடைகளில் தினமுமே தீபாவளிபோல கூட்டமோ கூட்டமாக உள்ளது.

    பதிலளிநீக்கு