சட்னி வகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சட்னி வகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 23 மார்ச், 2015

சுட்ட கத்தரிக்காய் சட்னி

                                  Image result for கத்தரிக்காய்

அந்தக் காலத்தில நான் சிறுவனாக இருந்த போது பள்ளி விடுமுறை நாட்களில் என் பாட்டி வீட்டுக்குப் போவேன். அதாவது என் பாட்டி இருந்த தோட்டத்து வீட்டுக்குப் போவேன். அந்த தோட்டம் என் மாமா விவசாயம் செய்து கொண்டிருந்த தோட்டம்.

அப்ப எல்லாம் தோட்டங் காட்டுகளில் விவசாயம் செய்தவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையின் தேவைகளுக்கு எங்கும் வெளியில் செல்வதில்லை. அவர்களுக்குத் தேவையான தானியங்கள், காய்கறிகள், பால், எண்ணை வகைகள் இவை அனைத்தையுமே அவர்கள் தங்கள் தோட்டத்தில் விளைவித்துக் கொண்டார்கள். உடுத்துவதற்கான துணிகள் மற்றும் பாத்திர பண்டங்கள், நகைகள் இவைகள் மட்டுமே வெளிச் சந்தையில் வாங்குவார்கள்.

அன்றாட வாழ்வில் பணப்புழக்கம் என்பது மிகவும் அரிதாக இருந்தது. வருடத்திற்கு ஒரு முறைதான், அதாவது தீபாவளி சமயத்தில்தான் துணிமணிகள், நகைநட்டுகள் எல்லாம் வாங்குவார்கள். பிறகு பணம் செலவு செய்யவேண்டிய சந்தர்ப்பங்களே ஏறக்குறைய இல்லை. உப்பு, தீப்பெட்டி, சில எண்ணை வகைகள் இவைகள்தான் வெளியிலிருந்து வாங்கவேண்டி வரும். இவைகளை வியாபாரிகள் தோட்டம் தோட்டமாகக் கொண்டு வருவார்கள். அதற்கு ஈடாகத் தோட்டத்துக்காரர்கள் தோட்டத்தில் விளைந்துள்ள ஏதாவது தானியம் அல்லது பருத்தி ஆகியவைகளைக் கொடுப்பார்கள்.

இப்படிப்பட்ட காலத்தில் நான் என் பாட்டி (மாமா) தோட்டத்தில் விடுமுறையைக் கழித்தேன் என்றால் எப்படி இருக்கும் என்று யூகித்துக் கொள்ளுங்கள். காசு கண்ணிலேயே படாது. அப்படி ஏதாவது காசு வைத்திருந்தாலும் அதை வைத்துக் கொண்டு என்ன பண்ணுவது? அக்கம் பக்கம் காத தூரத்திற்கு எந்த விதமான கடைகளும் கிடையாது.

மிக அதிசயமான தின்பண்டம் என்பது தேங்காய் ஒப்புட்டுத் தான். அப்படி என்றால் என்னவென்று தெரியாதவர்கள் பின்னூட்டத்தில் சொன்னால் ஒரு செய்முறைப் பதிவு போடுகிறேன். ஞாயிற்றுக் கிழமை இட்லி பலகாரம் கிடைக்கும். இட்லி ஒரு பலகாரமாக இருந்த காலம் அது. இல்லையென்றால் தினமும் காலையில் தயிர் விட்டுக் கரைத்த பழைய சோளச்சோறுதான் காலை டிபன்.

ஏன் ஞாயிற்றுக்கிழமையில் இட்டிலி என்றால் அது வார விடுமுறை என்பதால் அல்ல. விவசாயிகளுக்கு எல்லா நாட்களும் ஒரே மாதிரிதான். சனிக்கிழமைதோறும் தவறாமல் எண்ணைக் குளியல் உண்டு. வீட்டில் காய்ச்சிய விளக்கெண்ணை ஒரு அரை லிட்டர் எடுத்துக் காய வைத்து எங்கள் எல்லோர் தலையிலும் ஊற்றி விடுவார்கள். ஒரே வயதில் ஏறக்குறைய ஐந்தாறு பேர் இருப்போம்.

தலையிலிருந்து வழியும் எண்ணையை அப்படியே கையினால் உடம்பு முழுவதும் பூசிக்கொள்ள வேண்டியதுதான். கோவணம் எல்லாம் கிடையாது. அப்படியே ஒரு அரை மணி நேரம் இருந்த பிறகு ஒவ்வொருவராகக் குளிப்பாட்டி விடுவார்கள்.  அரப்பு கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அதுதான் அன்றைக்கு ஷாம்பு. அரப்புக் கரைசலை கைநிறைய எடுத்து தலையில் வைத்து அரக்கித் தேய்த்து குளிப்பாட்டுவார்கள். அப்படித் தேய்க்கும்போது அரப்பு கண்ணுக்குள்ளும் வாய்க்குள்ளும் போகும். அதையெல்லாம் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்.

அன்று மதியச் சாப்பாடு நெல்லஞ்சோறும் செலவு அரைத்த ரசமும். செலவு என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்காக ஒரு குறிப்பு. மிளகு, சீரகம், கடுகு இவைகளைத்தான் செலவு சாமான்கள் என்று சொல்வது அந்தக் காலத்து வழக்கம். இப்போது அஞ்சறைப் பெட்டி என்று நாகரிக யுவதிகள் சொல்கிறார்களே, அதற்கு செலவுப் பெட்டி என்றுதான்  எங்கள் ஊரில் இன்றைக்கும் பெயர். மிளகு சீரகம் அரைத்துப் போட்டு வைக்கும் ரசத்திற்குப் பெயர்தான் செலவரைச்ச ரசம்.

இந்த ரசம் சாப்பிட்டால் சாப்பிட்ட சாப்பாடு எளிதில் ஜீரணமாகும். எண்ணை தேய்த்துக் குளித்த அன்று உடல் முழுவதும் லேசாகி உடம்பு வெடுக்கென்று இருக்கும். ஜீரண சக்தி குறைந்திருக்கும். அதனால் அன்று எளிதில் ஜீரணமாகக் கூடிய நெல்லஞ்சோறும் செலவரைச்ச ரசமும்தான் மதியம் சாப்பிடவேண்டும்.

அடுத்த நாள், அதாவது ஞாயிற்றுக் கிழமை மதியம் கட்டாயம் கறிச்சாப்பாடு உண்டு. கறி என்றால் ஆட்டுக் கறிதான். வேறு எதுவும் அந்தக் காலத்தில் கிடையாது. கோழிக்கறி உடம்புக்கு சூடு என்று பொதுவாக யாரும் சாப்பிடமாட்டார்கள். மதியச் சாப்பாடு கனமாக இருக்குமாதலால் அன்று காலை எளிதில் ஜீரணமாகக் கூடிய இட்லி செய்வார்கள்.

இட்லிக்கு இன்று மாதிரி விதவிதமான சட்னி சாம்பார் எல்லாம் கிடையாது. ஏதோ ஒன்று தொட்டுக் கொள்ளக் கிடைக்கும் அப்படிப்பட்ட ஒன்றுதான் சுட்ட கத்தரிக்காய்ச் சட்னி. தோட்டத்தில் எப்படியும் ஓரிரண்டு பாத்தியில் கத்தரிக்காய் நட்டிருப்பார்கள். அவ்வப்போது குழம்பிற்குப் பறிப்பதற்காக இந்த
ஏற்பாடு. குழம்பிற்கு எப்போதும் பிஞ்சுக்காய்களைத்தான் பறிப்பார்க்ள. இதில் எப்படியும் மறைவாக இருக்கும் சில காய்கள் தப்பி விடும். அவை நன்கு பெரிதாகி, குழம்பிற்கு லாயக்கற்றதாய் இருக்கும்.

ஞாயிறு அன்று அந்தக் காய்கள் நாலைந்தைப் பறித்து வந்து இட்லி வெந்து கொண்டிருக்கும் அடுப்புத் தணலில் வைத்து விடுவார்கள். அப்போதெல்லாம் விறகு அடுப்புதானே. இந்தக் காய்களை இரண்டொரு தடவை திருப்பிப் போடுவார்கள். அந்தக் காய்கள் தணலில் நன்றாக வெந்து விடும். அதை எடுத்து தோலை உரித்து ஒரு சட்டிக்குள் போட்டு நாலைந்து பச்சமொளகாய், கொஞ்சம் புளி, உப்பு எல்லாம் போட்டு, பருப்பு மத்தால் நன்கு கடைந்து விடுவார்கள்.

இதுதான் இட்லிக்கு சைட் டிஷ். சூடான இட்லிக்கும் இந்த சட்னிக்கும் இவ்வளவு பொருத்தமாக இருக்கும். இரண்டிலும் எண்ணை என்பதே கிடையாது. ஒவ்வொருவரும் குறைந்தது ஆறு ஏழு இட்லிகள் சாப்பிடுவோம். குறைவாகச் சாப்பிட்டால் "வளர்ற பசங்க சாப்பிறதப் பாரு, இன்னும் ரெண்டு இட்லி சாப்பிட்றா" என்று வலுவில் போட்டு விடுவார்கள். இப்படிச் சாப்பிட்டு வளர்ந்த ஒடம்பாக்கும் இது.

இதுதான் சுட்ட கத்தரிக்காய்ச் சட்னி. இந்தக்காலத்தில் பெங்களூர் கத்தரிக்காய் என்று பெரிதாக மார்க்கெட்டில் கிடைக்கிறது. அதை கேஸ் அடுப்பில் சுட்டு இந்த சட்னி பண்ணலாம். இட்லி தோசைக்குத் தொட்டுக்கொள்ள தேவாம்ருதமாக இருக்கும்.