சென்ற பதிவின் கடைசி வரிகள்.
என் பேங்க் கணக்கில் இருந்து எட்டாயிரம் ரூபாய் அவன் கணக்கிற்குப் போனது. கேமரா வருகிறது, வந்து கொண்டே இருக்கிறது என்று ஈமெயில் செய்திகள் மணிக்கொரு தரம் வந்தன. நானும் வாயில் ஈ போவது தெரியாமல் வாயைத் திறந்து வைத்துக்கொண்டு காத்திருந்தேன். கடைசியில் ஒரு நாள் கேமரா பார்சல் வந்தே விட்டது.
அதை வாங்கி புதுப்பெண்டாட்டியைக் கொண்டாடும் நாசூக்கில் பிரித்தேன். கேமராவைப் பார்த்ததும் ஒரு பெரிய அதிர்ச்சி.........
நான் கேட்ட மாடலுக்குப் பதிலாக அதற்கு இரண்டு படி கீழேயுள்ள மாடல் கேமராவை அனுப்பியிருந்தான். அதைப் பார்த்தவுடனேயே என் மனம் கீழே விழுந்த கண்ணாடிக்கோப்பை மாதிரி சுக்கு நூறாக உடைந்தது.
சிந்தனாகூலத்தில் ஆழ்ந்தேன். வீறுகொண்டெழுந்து போராடலாமா அல்லது தோல்வியை ஒப்புக்கொண்டு இந்த மாடல் கேமராவையே வைத்துக்கொள்ளலாமா என்று இரு யோசனைகளுக்கிடையில் கொஞ்ச நேரம் போராடினேன். நாம் பிறந்த இனம் என்ன? வளர்ந்த விதம் என்ன? ஒரு பிரச்சினையை எதிர் கொண்டு போராடாமல் தோல்வியை ஒப்புக்கொண்டால் வருங்கால சந்ததியினர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற தன்மான உணர்ச்சி பிரவாகமாக ஊற்றெடுத்தது.
போராடத் தயாரானேன். முதலில் அந்தக் கம்பெனிக்கு ஒரு செய்தி அனுப்பினேன். உடனே பதில் வந்தது. அந்த த் தவறான மாடல் கேமராவைத் திருப்பி அனுப்பி விடுங்கள். நாங்கள் உங்கள் பணத்தை அனுப்பி விடுகிறோம் என்றார்கள்.
நான் இரண்டு கேள்விகள் கேட்டேன்.
1. நான் அந்தக் கேமராவை எப்படித் திருப்பி அனுப்புவது? அதற்கு வேறு தண்டச்செலவு செய்யணுமா?
2. எனக்கு கேமராதான் வேண்டும், பணம் வேண்டாம். நான் இந்தக் கேமரா மீது மிகுந்த ஆசை கொண்டுள்ளேன். அது கிடைக்காவிட்டால் நான் வாழ்க்கையை வெறுத்து விடுவேன்.
முதல் கேள்விக்கு பதில் - நீங்கள் அந்தக் கேமராவை அது வந்த பெட்டியிலேயே வைத்து நன்றாக பேக் செய்து வைத்திருங்கள். எங்கள் ஆள் வந்து வாங்கிக்கொள்வான் என்றார்கள்.
இரண்டாவது கேள்விக்கு பதில் - நீங்கள் கேட்ட கேமராவையே அனுப்புகிறோம் என்றார்கள்.
நான் இந்த வேண்டாத கேமராவை நன்றாக பேக் செய்து வைத்துக்கொண்டு காத்திருந்தேன். ஒருத்தனும் வரவில்லை. மறுநாள் இன்டர்நெட்டில் தேடி அமேசான் கம்ப்ளெய்ன்ட் தளத்தைக் கண்டுபிடித்தேன். அதில் என்னுடைய பிரச்சினையை சொன்னேன். ஐந்து நிமிடத்தில் போனில் என்னைத் தொடர்பு கொண்டார்கள். நான் விபரம் கூறியவுடன் இன்று மாலைக்குள் அந்த பார்சலை எங்கள் ஆள் வந்து வாங்கிக்கொள்வான் என்றார்கள்.
மாலை வந்தது. பிறகு இரவும் வந்தது. ஒருவனையும் காணோம். தூங்கி எழுந்தேன். இதை விடக்கூடாது என்று திரும்பவும் கம்ப்ளெய்ன்ட் டிபார்ட்மென்டுக்கு புகார் அளித்தேன். அந்தப் புகாருக்கு பதில் கொடுத்த பெண்மணி இன்று கட்டாயம் அந்தப் பார்சலை வாங்க ஆள் வரும். நீங்கள் கவலைப்படவேண்டாம் என்று உறுதி அளித்தாள்.
இதில் என்ன வேடிக்கை என்றால் நான் இந்தியாவிலிருந்து புகார் அளித்தால் வேறு ஏதோ நாட்டிலிருந்து போன் பேசுகிறார்கள். அந்த நெம்பருக்கு திரும்ப பேச முயற்சித்தால் கனெக்ஷன் கிடைப்பதில்லை. சரி விதிப்படி நடக்கட்டும் என்று காத்திருந்தேன். அன்று மாலை ஒருவன் வந்து அந்தப் பார்சலை வாங்கிக்கொண்டு ஒரு ரசீது கொடுத்து விட்டுப் போனான்.
சரி, பாதி கிணறு தாண்டி விட்டோம் என்று நினைத்துக்கொண்டு காத்திருந்தேன். நான்கு நாள் ஆகியது. அந்தக் கம்பெனிக்காரனிடமிருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை. அவ்வளவுதான், நம் பணம் அரோகராதான் போலிருக்கிறது என்று முடிவு செய்து விட்டேன். இருந்தாலும் முயற்சிப்போம் என்று இன்டர்நெட்டை மேய்ந்ததில் இன்னொரு முனை கிடைத்தது. அதாவது இந்த மாதிரி நடந்தால் இந்த தளத்தில் புகார் அளித்தால் விசாரித்து நம் பணத்தைத் திருப்பிக்கொடுப்பதாக சொல்லியிருந்தார்கள்.
இதில் நான் என் புகாரைப் பதிந்தேன். அதற்கு உடனே பதில் வந்தது. உங்கள் புகாரைப் பெற்றுக்கொண்டோம். ஒரு மாதத்தில் இதைப்பற்றி விசாரித்து நீங்கள் சொன்னது உண்மையாக இருந்தால் உங்கள் பணம் திருப்பியளிக்கப்படும். அதற்குள் அந்த கம்பெனிக்காரன் நீங்கள் கேட்ட பொருளைக் கொடுத்து விட்டால் எங்களுக்குத் தெரியப்படுத்தவும் என்றார்கள். சரி, ஏதோ நாம் புகார் அளித்தால் பதிலாவது சொல்கிறார்களே, அந்த மட்டில் பரவாயில்லை என்று நினைத்துக்கொண்டேன்.
இந்தப் புகார் அளித்த விபரம் எல்லாம் அந்த கேமரா அனுப்பிய கம்பெனிக்காரனுக்கும் போகும் போல் இருக்கிறது. அவன் உடனேயே, ஐயா உங்கள் பொருளை அனுப்பி விட்டோம், இரண்டு நாளில் வந்து விடும், வந்தவுடன் இந்தப் புகாரை தயவு செய்து திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று வேண்டியிருந்தான்.
இரண்டு நாளில் கேமரா பார்சல் வந்து விட்டது. பிரித்துப் பார்த்தேன். நான் கேட்ட மாடல் கேமராவே இருந்தது. அப்பாடா என்று பெருமூச்சு விட்டேன். இந்தப் பதிவில் இருக்கும் படங்கள் எல்லாம் அந்தக் கேமராவில் எடுக்கப்பட்டவைகளே. நான் கொடுத்த புகாரையும் வாபஸ் பெற்றுக்கொண்டேன்.
இந்த அனுபவத்திலிருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால் அமேசான் கம்பெனி என்பது வெறும் புரோக்கர் கம்பெனிதான். அவன் ஒரு பொருளையும் உற்பத்தி செய்வதில்லை. பல வியாபாரக் கம்பெனிகளிடம் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு
நம் போன்றவர்களிடமிருந்து ஆர்டர் பிடித்துத் தருகிறான். இதில் அமேசான்காரனுக்கு கமிஷன். அதை வைத்து அவன் பிழைக்கிறான். பொருட்கள் சப்ளை செய்யும் கம்பனிகளுக்கு அமேசான்காரனால் கூடுதல் பிசினஸ் கிடைக்கிறது.
இப்படி இவர்கள் இரண்டு பார்ட்டியும் நம்மால் பயனடைகிறார்கள். இதில் கூடுதலாக அமேசான்காரன் சொந்தமாக ஒரு கூரியர் சர்வீஸ் வைத்திருக்கிறான். இதன் மூலமாகத்தான் நாம் ஆர்டர் செய்யும் பொருட்கள் எல்லாம் வருகின்றன. இதில் ஒரு கூடுதல் வருமானம் அமேசான் காரன் பெறுகிறான்.
ஆன்லைன் வியாபாரம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. ஆனாலும் இதில் சிக்கல்கள் இருக்கின்றன. நாம்தான் கவனமாக செயல்படவேண்டும்.
நல்ல விடாக்கண்டன் தான் நீங்க. நான் பல பொருட்களும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியுள்ளேன். இதில் அமேசான் கம்பனி இரண்டுவிதமாக செயல் படுகிறது. fulfilled by Amazon என்றால் அமேசான் ஸ்டாக் வைத்திருந்து அவர்களே அனுப்புவது. மற்றது விற்கும் கம்பனி அமேசானின் ஆர்டரை அனுப்புவது. இதில் தான் விற்கும் கம்பனிகள் குளறுபடி செய்கிறார்கள். பொதுவாக sold by என்ற விவரத்தில் டெல்லி பானிபெட் போன்ற ஊர்களாக இருந்தால் தவிர்ப்பது நலம்.
பதிலளிநீக்குதற்போது நிலவும் ஆன்லைன் கம்பனிகளில் பிரசித்தி பெற்றவை Amazon Snapdeal Shopclues FlipKart Homeshop18 போன்றவை. பாக்கி சில கம்பனிகள் தீபவளிக்கு முளைக்கும் தெருவோர கடைகள் போன்றவை. ஏமாற வேண்டாம்.
பழைய பொருட்கள் விற்பனை செய்யும் கம்பனிகளும் உண்டு. ebay quikr Olx போன்றவை.
--
Jayakumar
ஆத்தி இதுல இவ்ளோ பிரச்சனை இருக்கா?விடாம போராடி வெற்றி பெற்று விட்டீர்கள் அப்பா...
பதிலளிநீக்குவயசான பிறகு சிறிய பிரச்சினை கூட பூதாகாரமாகத் தெரிகிறது. இது சரியாக முடியுமா என்கிற கவலை அதிகரிக்கிறது. வேறு வழி இல்லை. பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். பிளாக்கில்தான் புலம்ப முடியும். நேரில் புலம்பினால் பெண்டாட்டி பிள்ளைகள் வறுத்தெடுத்து விடுவார்கள்.
நீக்குநீங்கள் வாங்கியது இந்த மாடல் http://www.amazon.in/Sony-Cyber-shot-Camera-Optical-Memory/dp/B00IHS3RGQ/ref=sr_1_1?s=electronics&ie=UTF8&qid=1462432186&sr=1-1&keywords=sony+camera கேமராவா ?
பதிலளிநீக்குஞரியாக கண்டுபிடித்து விட்டீர்கள். பாராட்டுகள்.
நீக்கு‘All's Well That Ends Well’ என்பது போல் முடிவில் தாங்கள் விரும்பிய காமிரா கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள்! நானும் இதுபோல் சண்டைபோட்டு Snapdeal என்ற மின்வணிக நிறுவனத்திடம் பெற்றிருக்கிறேன். இந்த நிறுவனங்கள் எல்லாம் இடைத்தரகர்கள் தான்.நீங்கள் சொன்னதுபோல் நாம் தான் கவனமாக இருக்கவேண்டும்.
பதிலளிநீக்குஉங்களை இப்படியே இழுத்தடித்துக் கொண்டு போயிருந்தால் என்ன செய்திருக்க முடியும் ஆன் லைனில் வாங்குவது நாம் கேட்கும் பொருள் நம் வீடு தேடி வருவது தவிர வேறென்ன லாபம் ?
பதிலளிநீக்குஇப்படியே இழுத்தடித்திருந்தால் தலையில் துண்டைப் போட்டுக்கொள்ள வேண்டியதுதான். விலையில் கொஞ்சம் சலுகை இருக்கிறது.
நீக்குஆன்லைனில் வாங்குவதில் இப்படி சில பிரச்சனைகள் உண்டு. எனக்கும் இந்த அனுபவம் உண்டு.....
பதிலளிநீக்குamazon sells directly. Amazon marketplace was started few years ago. But amazon marketplace is more prominent since amazon can't stock most of the items. I am not sure about India model since I have used only in US.
பதிலளிநீக்குI have no idea about Amazon's working in US. What I have described is the Indian model.
நீக்குஎப்படியோ வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் ஐயா.
பதிலளிநீக்குதமிழ் மணம் 4
ஆன்லைனில் பல சிக்கல்கள். இருந்தாலும் தற்போதைய இளைஞர்கள் அதைத்தான் நாடுகிறார்கள்.
பதிலளிநீக்குஆன் லைனில் பல சிக்கல் உள்ளன... இருப்பினும் அதன் மீதான மோகம் அதிகமாகத்தான் இருக்கிறது...
பதிலளிநீக்கு