வியாழன், 9 நவம்பர், 2017

22. மூட நம்பிக்கைகள் - சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது

                                          Image result for sleeping beauty
சாப்பிட்டவுடன் தூங்கக்கூடாது. குறைந்தது இரண்டு மணி நேரமாவது கழித்துத்தான் தூங்கவேண்டும். அப்போதுதான் சாப்பிட்ட உணவு ஜீரணமாகும். இவ்வாறு பல புத்தகங்களில் படித்திருக்கிறேன். அநேகமாக நீங்களும் படித்திருக்கலாம். இதைப்போன்ற அபத்தமான ஒரு மூட நம்பிக்கை இவ்வுலகில் இருக்காது என்று நான் நினைக்கிறேன். ஏன் என்று பார்ப்போம்.

''உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு'' என்ற பழமொழியை எல்லோரும் கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால் அதன் கருத்தை ஆழமாக யாரும் சிந்தித்துப் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன்.

உணவு உண்டவுடன் அது இரைப்பைக்கு செல்கிறது. அங்கு அந்த உணவு ஜீரணமாவதற்குத் தேவையான பல அமிலங்களும் என்சைம்களும் சுரந்து அந்த உணவை ஜீரணிக்க உதவுகின்றன. இதற்கு இரைப்பைக்கு அதிக ரத்தம் தேவைப் படுகின்றது. உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்கின்ற ரத்தத்தைக் குறைத்து இரைப்பைக்கு அதிக ரத்தம் வருகிறது. இந்த நிகழ்ச்சி இயற்கையாக நடக்கும் ஒன்றாகும்.

இப்படி நடக்கும்போது மூளைக்குச் செல்லும் இரத்தமும் குறைகிறது. அதனால் மூளை தன் வேலைப்பாட்டை குறைத்துக்கொள்கிறது. இதே போல் மற்ற அவயவங்களும் தங்கள் தங்கள் வேலையைக் குறைத்துக்கொள்கிறது. இந்த செயல்களால் மொத்த உடலும் ஒரு வகை சோர்வுக்கு உள்ளாகிறது. இதைத்தான் உண்ட மயக்கம் என்கிறோம்.

இந்த மயக்கம் தெளிய ஒரு மணி நேரம் ஆகலாம். இந்த நேரத்தில் தூங்கினால் தூக்கம் சுகமாக வரும். இரவு சாப்பிட்டபின் தூங்கினால் சுமார் ஐந்து அல்லது ஆறு மணி நேரம் நன்றாகத் தூங்கலாம். இது இயற்கையுடன் ஒத்து வாழும் வழி.

இதை விடுத்து சாப்பிட்ட உணவு ஜீரணமானவுடன்தான் தூங்க வேண்டும் என்று வைத்துக்கொண்டால் அப்போது உடலின் எல்லா அவயவங்களும் தயார் நிலையில் இருக்கும். மூளைக்கு ரத்தம் நல்ல நிலையில் சென்று கொண்டிருப்பதால் மூளை விழிப்புடன் இருக்கும். அப்போது தூங்கச்சென்றால் தூக்கம் வருவதற்கு நேரமாகும். உடல் அசதி இருந்தால்தான் தூக்கம் வரும். இல்லாவிட்டால் தூக்கம் வராது.

ஏன் தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்க வேண்டும்? தூக்கம் வரும்போது தூங்குவதை விட்டு விட்டு தூக்கம் வராத வேளையில் எதற்கு தூங்கச் செல்ல வேண்டும்? மக்களே, இது ஒரு விஞ்ஞானத் தத்துவம். சரியாகப் புரிந்து கொண்டு வாழ்க்கையை அனுபவியுங்கள். நான் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இவ்வாறுதான் தூங்குகிறேன். இப்போது எனக்கு 83 வயது ஆகிறது. நன்றாகத்தான் இருக்கிறேன்.

ஆகாவே இந்த 'சாப்பிட்வுடன் தூங்கக்கூடாது' என்கிற மூட நம்பிக்கையிலிருந்து விடுபடுங்கள்.

22 கருத்துகள்:

  1. அன்பார்ந்த பதிவுலக நண்பர்களுக்கு, என்னால் முன்பு போல பதிவுகள் எழுத முடியவில்லை. இந்தப் பதிவு மாதிரி எப்போதாவதுதான் எழுத முடிகிறது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

    பதிலளிநீக்கு
  2. இந்த விளக்கம் என் குற்ற உணர்வைக் குறைக்கிறது! இதே போல புத்தகம் படிக்க முடியாமல் கண்கள் கனமாவதற்கும் ஒரு விளக்கம் கொடுத்தால் அந்தக் குற்ற உணர்வும் நீங்கும்.

    எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம்... புத்தகம், உட்கார்ந்து படிக்கும்போது, 1/2 மணி நேரம் தொடர்ந்து படிக்கலாம். அப்புறம் 1 நிமிடம் அல்லது 2 நிமிடங்கள் கண்களுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும்.

      நல்லா சாப்பிட்டுட்டு, அப்புறம் புத்தகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்தால், வயிறு மட்டுமல்ல கண்களும் கனமாகிவிடும். :-) நீங்க வேற, அட்டஹாசமான புத்தக லைப்ரரி வைத்திருப்பதாக ஊரெங்கும் பேச்சு.

      நீக்கு
  3. Sleeping Beauty படம் அழகாக உள்ளது. நீங்கள் பதிவுகளை அதிகம் எழுதாதது ஏமாற்றம்தான். வழக்கம்போல் எழுதுங்கள். வாழ்த்துக்கள். சா ப்பிட்டவுடன் தூங்குவதில் அவ்வளவு சிறப்பல்ல என்று ஒரு கருத்தும் உள்ளது.சுட்டி காண்க
    https://www.livestrong.com/article/556026-the-disadvantages-of-sleeping-immediately-after-a-meal/

    https://www.thesleepjudge.com/is-it-bad-to-sleep-after-eating/

    - பாபு

    பதிலளிநீக்கு
  4. இந்த வயதிலும் நீங்கள் புலவர் போன்றவர்தல் தொடர்ந்து எழுதுவது மிக ஆச்சிரியம் அளிக்கிறது.. உங்களால் முடிந்த போது மட்டும் எழுதுங்கள் கஷ்டப்பட்டு எல்லாம் எழுத வேண்டாம்..... வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  5. சாப்பிட்டு ஒரு அரை மணி நேரமாவது கழித்து தூங்கச் செல்வது தான் நல்லது என்பது என் அபிப்ராயம் ஐயா! ஜீரணம் ஆனபின் தூங்குவது என்றால் அடுத்த வேளை பசிக்க ஆரம்பித்து விடும்! :))
    சாப்பிட்ட பின் உடனே படுத்தால் அசிடிடி / நெஞ்செரிச்சல் வர வாய்ப்புண்டு!

    பதிலளிநீக்கு
  6. பயனுள்ள செய்தியை கூடுதல் தகவல்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. சார்.... என்னடா ரொம்ப நாளா எழுதவேயில்லை என்று நினைத்துக்கொண்டிருந்தேன். எழுதிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.

    சாப்பிட்டவுடன் 100 மீட்டர் நடந்தபின்புதான் தூங்கவேண்டும். கொஞ்சம் செட் ஆகணும். பொதுவா நம்ம ஊர்ல கொஞ்சம் ஜாஸ்தியா சாப்பிடற வழக்கம் உண்டு. அதுவும் இரவு உண்டபின்பு, கொஞ்சம் ரிலாக்ஸா நடந்துட்டு தூங்கினா நல்லது.

    "இயற்கையுடன் ஒத்து வாழும் வழி." - சார்.. நாம இயற்கையோடு ஒத்துவாழ்வதை மறந்து ரொம்ப வருடங்களாகிவிட்டது. முன்பெல்லாம், அந்த அந்த சீசனில் வரும் காய், பழங்களைத்தான் உண்டுவந்தோம். இப்போ எல்லாக் காயும், பழங்களும் எல்லா சீசனிலும் கிடைக்கின்றன. இயற்கையைவிட்டு நாமும் வெகுதூரம் வந்துவிட்டோம்.

    என்ன... இன்னும் எழுதலைன்னுதான், பதிவர்களைப் பற்றி நான் நினைப்பது. நீங்க என்னன்னா, 'ஆதரவு கேட்கிறீங்க'. உங்களுக்கில்லாததா?

    பதிலளிநீக்கு
  8. உங்கள் பதிவு மகிழ்ச்சி தருகிறது நிறையவே மூடப்பழக்கங்கள் நிலவுகிறது உங்களுக்குச் சரியெனப்பட்டதைச் செய்யுங்கள் மூட நம்பிக்கைகள் என்று சொல்ல வந்தால் சிலிர்த்து எழும்கூட்டமே இருக்கிறது

    பதிலளிநீக்கு
  9. வயது எண்பதைக் கடந்தாலும், இருபது வயது இளைஞராக வலைப்பதிவு, ஃபேஸ்புக் என்று வலைய வரும் முனைவர் அவர்களுக்கு வாழ்த்துகள். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம்,பிறருக்கு பயன்தரும் உங்கள் அனுபவங்களை வாழ்வியல் சிந்தனைகளை எழுத வேண்டும் என கேட்டுக் கொள்;கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. கணவர் சாப்பிட்டவுடன் துங்கிவிடுவார்கள். என் மாமனார் சாப்பிட்டவுடன் சிறுநடை நடந்து விட்டுதான் தூங்குவார்கள். மாமனார் 105 வயது வரை வாழ்ந்தார்கள்.

    பதிலளிநீக்கு
  11. நானும் உங்க கட்சி தான். ஆபீசில் வேலை செய்யும் போதும் சாப்பிட்டு அரைமணி கழிந்தவுடன் ஒரு மூலையில் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு ஒரு பத்து நிமிடம் தியானம், அதாங்க கோழி தூக்கம் செய்வேன். தற்போது ஒய்வு பெற்ற பின்னர் சுமார் ஒரு மணி நேரம் தூங்குகிறேன்.

    இந்த கோழி தூக்கம் ஒரு புத்துணர்ச்சி அல்லது சுறுசுறுப்பு உண்டாக்குவது உண்மை.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  12. எனக்கு வயது 86 ஆகிறது நான் உண்டபின் ஒரு மணி நேரமாவது கழித்துத் தான் உறங்கப்போவேன்

    பதிலளிநீக்கு
  13. சாப்பிட்டவுடன் தூங்கக்கூடாது என்ற (மூட) நம்பிக்கையை விடுபட சொன்னதற்கு நன்றி! நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள் ஐயா! படிக்கக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  14. மிகப் பிடித்த வார்த்தைகளைச் சொன்னீர்கள்.
    கொஞ்ச்க நேரம் ஆனால் மீண்டும் பசிக்க
    ஆரம்பிக்கும். பத்து நிமிடங்கள். பிறகு தூக்கம் தான். உங்கள்
    எழுத்து தொடர வேண்டும்.ஐயா வணக்கம்.

    பதிலளிநீக்கு
  15. நானெல்லாம் சாப்பிட்டதும் படுத்து அம்மாவிடம் திட்டு வாங்கியவந்தான்.
    இப்போ கொஞ்சம் நேரம் கழித்துத் தூங்குகிறேன் அவ்வளவே...
    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  16. Sir,
    There is a Saying that, After eating, we should not drink water immediately. We should drink only after 1 hour. Is it true scientifically? Or What is your opinion about this.

    பதிலளிநீக்கு